உங்களுக்காக ஒரு கடிதம் 22

ஹாய்...ஹாய்...ஹாய்...
என்ன? என்னையும் உங்க "வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில்" மெம்பர் ஆக்கிக்கொள்ளுங்கள். உண்மையை சொல்லப்போனால் இப்படி எழுதும்போதே என்னுள் இனம்புரியாத ஒரு கிளர்ச்சி உண்டாகி...என்னுள் ஒரு வேகமே உருவாகி கொப்பளித்துக் கொண்டிருக்கிறது. எனக்கே இது புது அனுபவந்தான். பரபரவென்று ஏதாவது சாதிக்க வேண்டும் என்கின்ற ஒரு வெறி எரிமலையாய் கனன்று கொண்டிருக்கிறது. எனக்கே அப்படியென்றால்...உங்கள் வயதுக்கே உரித்தான ஆற்றல் அத்தனையையும் ஒன்றிணைத்தால்...இந்த பூமியென்ன.... இந்த பிரபஞ்சத்தையே நம்மால் வெல்ல முடியாதா என்ன? வாருங்கள் தோழரே ஒன்றிணைவோம்.
சரி, நம் தொடருக்கு வருவோம்.போன கடிதத்தில் உடைகளை பற்றிப் பேசினோம். இன்றைக்கு சிகை அலங்காரத்தைப் பற்றி கொஞ்சம் ஆராய்வோம்.இன்றைய தலை முறையின் தலை அலங்காரம் எத்தனை எத்தனை வகைகள்.'The Under Cut ', ' The Quitt ', ' The Square Cut ', ' The Hockey Cut ', ' The Buzz Cut ', ' The Ivy League ', ' The Caesar Cut ', ' The French Crop ' ட்ரெண்டிங்கில் இருக்கும் ஹேர் கட் வகையறாக்கள். அப்படி இந்த ஸ்டைலில் வெட்டிக்கொண்டு...எண்ணெய் வைக்காமல்...Duke பைக்கில்...சும்மா முறுக்கிக்கொண்டு பறக்கும் போது...முடியும் பறக்குமே...ஓ.அது ஒரு அலாதியான இன்பம்...ஒரு கெத்து...ஆனால் அதை அனுபவிக்கும் எங்களை ஒரு குற்றவாளியாய் நீங்கள் பார்க்கும் போதே எங்களுக்குள் கோபம் தலைக்கு ஏறி முடிகள்கூட நட்டுக்கொண்டு விறைப்பாய் நிற்கிறதே..என்ன செய்ய? இந்த வயசில் இந்த அலைப்பாறைகளை செய்யாமல் உங்களைப்போல வயதான பிறகு செய்தால் நீங்களென்ன இந்த உலகம்கூட ...ஏன் நாங்களேகூட ஒப்புக்கொள்ள மாட்டோம். எங்களை கொஞ்சம் பிரீயாத்தான் விடுங்களேன்.
உங்களை குறை சொல்லவில்லை. நீங்கள் அந்த காலத்தில் ' Bell Bottom Pant ' போட்டதில்லை? பெண் பிள்ளைகளைப் பார்த்து ஜொள்ளு விட்டதில்லை. ' ஆகா மெல்ல நட...மெல்ல நட...மேனி என்னாகும்?'... ' நான் எழுதுவது கடிதம் அல்ல...உள்ளம்..அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல.... எண்ணம்'.... ' காதலிக்க நேரமில்லை..காதலிப்பார் யாருமில்லை '... நீங்கள் பாடியதில்லை? அப்போது இருந்த சூழ்நிலையில் அவ்வளவுதான் செய்ய முடிந்தது. அவ்வளவுதான் செய்யவும் முடியும். எங்களுக்கும் புரிகிறது. உங்களுக்காக வருத்தப் படுகிறோம். வேறென்ன செய்ய முடியும்? நீங்க கொடுத்து வச்சது அவ்வளவுதான். அதற்காக எங்கள் உரிமையில்...எங்கள் சந்தோஷத்தில் உங்களின் தலையீட்டை அனுபவிக்கும்போது வருமே ஒரு கோபம். நியாமா? நியாயம் இல்லையா? நீங்களே சொல்லுங்கள். அத்தனை கட்டுப்பாடுகள்...ஒரு வசதிகூட இல்லை. மாட்டினால் மாட்டடி...இருந்தும் துணிந்து நீங்கள் கண்டுபிடிக்காத புது...புது.. உத்திகளா? பக்கத்து வீட்டு சிறுசுகளை செட் பண்ண எவ்வளவு கீழிறங்கி நீங்கள் செய்யாத வேலைகளா? அதையும் மீறி உங்கள் உணர்வுகளுக்கு அணை போடும்போது உங்களுக்கு கோபம் வந்ததே இல்லையா?
' நான் ஒரு ராசியில்லா ராஜா '.....' அவள் பறந்து போனாளே...என்னை மறந்து போனாளே...' என்று நீங்கள் தாடி வளர்த்துக்கொண்டு....ரோட்..ரோடாய் அலையல? நாங்க ' Breakup Song ' கேட்டா மட்டும் உங்க மொகம் போறபோக்கைப் பார்த்தாலே..... எங்க கோபம் உச்சி மண்டை வரை ஜிவ்வ்ன்னு ஏறுகிறது. இங்க போகாதே...அங்க போகாதே...அவன்கிட்ட பேசாதே...இவன்கிட்ட பேசாதே.. இதை இப்படி செய்...அதை அப்படி செய்.... எங்களை உங்களின் கைபொம்மை ஆக்கி வைத்திட துடிக்கிறீர்களே...நீங்கள் அடக்க..அடக்க...எங்களுக்கு அதை மீறுவதற்குத்தான் தோன்றுகிறதே தவிர...நீங்கள் சொல்லும் நல்லவைகள்கூட எங்கள் காதில் ஏறுவதில்லை. இது ஒரு நிதர்ஷணமான உண்மை. எங்களை எவ்வளவு இரிடேட் செய்ய முடியுமோ அவ்வளவு இரிடேட் செய்துவிட்டு...அதற்கு எங்களின் விளக்கத்தைக்கூட கேட்பதற்கு மனமில்லாமல் நீங்கள் செய்யும் அடாவடிகளை காணும்போது எங்களுக்கு கோபம்தான் வருகிறது. உங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை. " For every action there will be an equal and opposite reaction ". நீங்க பெத்த பிள்ளைகளை நீங்களே நம்பவில்லையென்றால் உலகில் வேறு யார் எங்களை நம்பப்போகிறார்கள்?. சொல்லுங்கள்.

தொடரும்

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (1-Jun-22, 8:06 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 62

மேலே