சொத்தே
படபடக்கும் உன் விழி அசைவில்
தடதடக்கும் என் இதயத் துடிப்புகள்
கலகலவென உன் சிரிப்பொலியில்
கடகடவென கரையும் என் கவலைகள்
சிடுசிடுவென நீ கோபப்பட்டால்
படபடவென சரியும் என் சந்தோஷங்கள்
குறுகுறுவென உன் ஓரப்பார்வையில்
கிறுகிறுத்துப்போகும் என் நினைவுகள்
கருகருவென்ற உன் நீள்கூந்தலில்
விறுவிறுவென விளையாடிட என் விரல்கள்
திருதிருவென நீ விழிக்கையில்
திகுதிகுவென எரிகிறது என் எண்ணங்கள்
துடிதுடிக்கும் உன் இதழ் கண்டு
கிடுகிடுக்கும் என் நெஞ்சுகுழிகள்
கரகரவென நீ சுத்துகையில்
கலகலத்துப்போகும் என் கால்கள்
விடுவிடு என்று நீ சிணுங்கையில்
கொடுகொடு என்று துள்ளும் என் இளமை
சிரிசிரி என்று நீ கலாய்க்கையில்
சரிசரி என்று என் மனதில் சமாதானங்கள்
கொலகொலவென பழுத்திடும் திராட்சை
கொழகொழவென ருசித்திடும் அதன் ரசமே
சிலசில சமயங்களில் இரட்டைக்கிளவிகள்
பலபல அதிசயங்கள் செய்துவிடும்
இதுஇது ஒன்றே நம் தமிழின்
பொதுபொதுவான சொத்தே...!