ஆசிரிய விருத்தம் எழுத விரும்புவோர் கவனத்திற்கு
ஆசிரிய விருத்தம் எழுத விரும்புபவர்கள் கீழேயுள்ள விபரங்களை வாசித்துத் தெளிவாகப் புரிந்து கொண்டு எழுத வேண்டும்,
’நானும் எழுதுகிறேன்’ என்று சீர் ஒழுங்கு இல்லாமல், ஒருசிலர் சீர்களில் மூன்று அசைகளுக்கு மேலும், அங்கங்கே கனிச்சீரும், தண்பூ, நறும்பூ என்றும் வருமாறு எழுதுவது தவறான முறையாகும்.
முதலில் கீழே காட்டப்பட்டுள்ள எளிய வகையான, (விளம் மா தேமா அரையடிக்கு) (1, 4 சீர்களில் மோனை) என்ற வாய்பாடில் 10 விருத்தங்களாவது எழுதித் தம் புலமையைக் காட்டட்டும்.
ஆசிரிய விருத்தம் என்பது தமிழின் பாவகைகளுள் ஒன்றான ஆசிரியபாவின் இனங்களில் ஒன்று.
இது அளவொத்த நான்கடிகளில் அமையும்.
ஒவ்வொரு அடியும் அறுசீர் முதல் பல சீர்கள் கொண்டு அமையும்.
மோனை சிறப்பாக வெளித்தெரியுமாறு அடிகள் இரண்டாக மடக்கி எழுதப்படும்.
எடுத்துக்காட்டு:
முதல் வகை - எளியது!
(விளம் மா தேமா அரையடிக்கு)
(1, 4 சீர்களில் மோனை)
இதந்தரு மனையின் நீங்கி
,,இடர்மிகு சிறைப்பட் டாலும்
பதந்திரு இரண்டும் மாறிப்
..பழிமிகுந் திடருற் றாலும்
விதந்தரு கோடி இன்னல்
..விளைந்தெனை அழித்திட் டாலும்
சுதந்தர தேவி நின்னைத்
..தொழுதிடல் மறக்கி லேனே!
பாவினங்களுள் விருத்த வகைகளே தமிழ் இலக்கியத்தில் மிகுந்து காணப்படுவன.
கம்பராமாயணம்,சீவக சிந்தாமணி, பெரியபுராணம், திருவிளையாடற்புராணம், சீறாப்புராணம் போன்ற பெருங்காப்பியங்களில் மிகப்பெரும்பான்மையாக அமைந்திருப்பவை விருத்தங்களே.
சிலப்பதிகாரத்தில் இசைப்பாடல்களாக வருபவற்றுள் ஆசிரிய விருத்தங்கள் பல உள்ளன. அக்காலத்தில் அவற்றுக்கு இப்பெயர் இல்லை.
தேவாரம், திவ்வியப்பிரபந்தம் ஆகியவற்றிலும் ஆசிரிய விருத்தங்கள் உள்ளன.
பாரதிதாசனின் பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, தமிழியக்கம் போன்ற நூல்கள் ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்தவையே.
இந்த அளவுக்கு இவை புலவர்களிடையேயும், படிப்போரிடையேயும் சிறப்புப் பெறுவதற்குக் காரணம் இவற்றின் இனிய சந்த ஓசை அமைப்புகளேயாகும்.
ஆசிரிய விருத்தத்தின் இலக்கணம் நான்கு கழிநெடிலடிகளால் ஆகி, நான்கடியும் அளவொத்து வருவது
ஆசிரிய விருத்தம்:
நான்கடியும் ஒரே எதுகை அமைப்பைப் பெற்றிருக்க வேண்டும்.
நான்கடியும் ஒரே வகையான சந்த ஒழுங்கைப் பெற்றிருக்க வேண்டும்.
அதாவது முதலாம் அடி‘விளம் மா தேமா / விளம் மா தேமா’எனும் சீர் அமைப்பைப் பெற்றிருந்தால், எஞ்சிய மூன்றடிகளும் அதே விதமான சீர் அமைப்பையே பெற்று வரவேண்டும். இதுவே சந்த ஒழுங்கு எனப்படுவது.
கழிநெடிலடிகள் என்பதனால் ஓர் அடியில் ஆறுசீர்களும், ஆறுக்கு மேற்பட்ட எத்தனை சீர்களும் வரலாம். ஆயினும் ஓர் அடியில் எட்டுச்சீர் வரை வருவது சிறப்பான ஆசிரிய விருத்தம் எனவும், அதற்கு மேல் வருவன சிறப்பில்லாதவை எனவும் கூறுவர்.