ஆட்டுவிக்கறதடி

காதல் பள்ளத்தாக்கில்
தொலைத்த என் நினைவதனை
தேடிக்கொண்டிருக்கிறேன்.
இதயச்சுரங்கத்திற்குள்
தொலைந்த என் வாழ்வதனை
தோண்டிக்கொண்டிருக்கிறேன்.
என்னைத் தனியே தவிக்கவிட்டு
ஏன் போனாய் பெண்ணே?...
என் பகல்களோ இரவானது
என் இரவுகளோ பகலானது.

விழி ஓரத்து ஈரக்கசிவானது - என்
இதயப் புயல் மழையின் சாரலானது.
என்னை இப்படி அனாதையாக்கிவிட்டு
எங்கேயடி மறைந்து போனாய்?
எல்லா உறவுகள் இருந்தும்...
எல்லா வசதிகள் இருந்தும்...
அனாதையாய்
அந்தாதி பாடிக்கொண்டிருக்கிறேன்.
வலி எத்தனை வலுவானது
முழுதாய் உணர்ந்துகொண்டேன்.
வடுக்களை வருடும்போது
முகாரியில் அழுகிறது உன் நினைவுகள்.

ஈரக்கண்ணாடியில் புகைபிம்பத்தை
வெறும் கைகளால்
துடைக்கின்ற கதைதான்.
முட்டை அடித்த
'கார்' கண்ணாடியை
'வைப்பர்' போட்டு
துடைக்கின்ற அவலம்தான்.
விரக்தியில்தான் முடியும் - கொடும்
விபத்தில்தான் முடியும்.

தரையில் விழும்
ஒவ்வொரு ரத்த துளியும்
புதிது புதிதாய் முகிழ்க்கும்
" ரக்தபாஜா" அரக்கனாய்
உன் நினைவுகள்
ஒவ்வொருமுறையும்
என்னில் முகிழ்த்து
அழியாமல் தினம்தினம்
என்னை ஆட்டுவிக்கிறதடி!

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (20-Jul-22, 8:54 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 85

மேலே