பெண் எனும் விந்தை

மழலையாய் இருந்து
மடியில் தவழ்ந்து
மனதைக் கொள்ளை
கொள்வாள் !

தத்தித் தவழ்ந்து
தத்தை மொழி பேசி
தனக்கென
தனிக்கூட்டம் சேர்ப்பாள் !

சின்னஞ்சிறு சிறுமியாய்
சிறிது வளர்ந்து
சிறுசிறு குறும்புகளால்
சிறைபிடிப்பாள் !

பருவ வயதில்
காளையர் மனதை
கொள்ளை கொள்ளும்
கன்னியாய் வட்டமிடுவாள் !

மணமென்னும் பந்தத்தில்
மன்னவனின் கரம் பிடித்து
மறுவுலகம் தனை நோக்கி
மனமின்றி சென்றிடுவாள் !

தாய் வீட்டில் தனித்துவமாய்
தனக்கென்றும் சமைக்காதவள்
தான் புகுந்த வீட்டில்
தளர்வின்றி சுழன்றிடுவாள் !

விதைத்த கருவை
விருட்சமாக்க
விருப்பம் தவிர்த்து
விழுங்கிடுவாள் !

தலைவலியும் தாங்கிடாதவள்
தான் கொண்ட கருவானது
தன்னுலகம் காண
தன்னுடல் கிழித்திடுவாள் !

தான் பெற்ற பிள்ளை
தனக்கென தடம் பதிக்க
தனித்துவமாய் தானியங்க
தன்னுறக்கம் தவிர்த்திடுவாள் !

காலங்கள் கரைந்து
கட்டுடல் தளர்ந்து
கிழவியாய் மாறியும்
கலங்காமல் செயல்படுவாள் !

கரம் பிடித்த கணவன்
கைவிட்டபோதிலும்
கலங்காமல் பூமியில்
கால்தடம் பதித்திடுவாள் !

சோதனைகள் சாதனைகளாக
வலிகள் வழிகளாக
விதைகள் விருட்சமாக
மெழுகென உருகிடுவாள் !

உலகை இயக்கும்
உன்னத சக்தியே
உன் வாழ்வில்
கணம்தோறும் வியப்புகளே !

பாரதியின் கனவே
பாரதத்தின் உயிர்மூச்சே
படைத்தவனும் வியந்திடவே
பல சரித்திரம் படைத்திடவே
புயலென புறப்படுவாய்
புதுமைப் பெண்ணே !

எழுதியவர் : Parveen (29-Jul-22, 3:19 pm)
சேர்த்தது : Parveen
Tanglish : pen yenum vinthai
பார்வை : 2103

மேலே