அஞ்சி இருள்புக் கிருப்பினும் வெய்யே வெரூஉம்புள் இருளின் இருந்தும் வெளி - பழமொழி நானூறு 154
நேரிசை வெண்பா
இஞ்சி அடைத்துவைத்(து) ஏமாந் திருப்பினும்
அஞ்சி அகப்படுவார் ஆற்றாதார் - அஞ்சி
இருள்புக் கிருப்பினும் வெய்யே வெரூஉம்புள்
இருளின் இருந்தும் வெளி. 154
- பழமொழி நானூறு
பொருளுரை:
மதில் வாயிலை அடைத்து வைத்துப் பாதுகாவல் பெற்று உள்ளேயிருப்பினும் போருக்காற்றாது அஞ்சி உட்புகுந்தார் அச்சத்தான் பகைவர் கையுட்படுவர்;
பயந்து இருளில் புகுந்திருந்ததாயினும் பறவை உண்மையாகவே இருளினை உடைய இரவாக இருந்தும் வெளிச்சமுடைய பகலாக நினைத்து அஞ்சும்.
கருத்து:
அஞ்சுவார்க்கு அரணாற் பயனுண்டாதல் இல்லை.
விளக்கம்:
ஏமம் + ஆர்ந்திருப்பினும் - அஞ்சி என்றமையானும்,
'வெய்யே' என்றதற்கொரு பொருட்சிறப் பின்மையான், 'மெய்யே' என்ற பாடம் கொள்ளப்பட்டது,
மன உரம் இல்லாதார் அரண் முதலியன பெற்றும், பெற்றிலார் போலாம்.
'அஞ்சி இருள் புக்கிருப்பினும் வெய்யே வெரூஉம் புள் இருளின் இருந்தும் வெளி' என்பது பழமொழி.