உங்களுக்காக ஒரு கடிதம் 29

ஹலோ....
நிறைய கேப் வந்துவிட்டது. என்ன செய்ய? பரவாயில்லை. இன்னொரு விஷயம். என்னை இல்லையில்லை எங்களை ரொம்பவும் பாதித்த விஷயம். சொல்கிறேன் கேளுங்கள். உங்கள் வேகம்..வாழ்க்கையை பார்க்கும் உங்களின் பார்வை... எல்லாவற்றிலும் அவசரம். வாழ்ந்து பார்த்திட அவசரம். நினைத்தவுடன் எதுவும் கிடைத்துவிட வேண்டும். உங்கள் எண்ணம்போல் எல்லாம் நடக்க வேண்டும். நீங்கள் நினைப்பது சரியோ... தப்போ...அதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் நினைத்தது நினைத்தபடி நிறைவேற வேண்டும் என்கின்ற பிடிவாத குணம்...குழந்தையாய் இருந்தபோது பரவாயில்லை. பாதிப்புகள் அவ்வளவாக இருக்காது. வளர்ந்தபின்....வயதுக்குவந்த பின்னும் என்றால்.நீங்களே யோசித்துப் பாருங்கள். தினமும் பேப்பரில்....டிவி யில்.....வாட்ஸபில்... பார்த்து பார்த்து கொலை நடுங்கிப்போய்த்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். அந்த பருவத்தில் யார் என்ன சொன்னாலும் நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். எடுத்தெறிந்து பேசிவிட்டு போய்கொண்டே இருப்பீர்கள். அதனால் நார் நாராய் கிழிந்து அவதியுறும் பெற்றோர்கள் உங்கள் கண்ணுக்கே தெரியப் போவதில்லை சுட்டுக்கொண்டால் நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்.அது அனுபவம்...அந்த மாதிரி மோசமான அனுபவம்...மற்றவர் மனதை கொல்லும் அனுபவம் உங்களுக்கு வரவேண்டாம் என்கின்ற பதைபதிப்பில்தான் நாங்கள் சொல்லும் சில ஆலோசனைகள்.... அறிவுரை...புத்திமதி என்று நீங்க தப்பாய் புரிந்துகொண்டு நீங்களும் கஷ்டப்பட்டு எங்களையும் கஷ்டப்படுத்துகிறீர்கள். ஆமாம் எதையோ தொடங்கி எங்கோ போய்க்கொண்டிருக்கிறது.
ஒன்று மட்டும் எங்களுக்கு புரியவும் இல்லை...ஒத்துக்கொள்ளவும் முடியவில்லை..அதுதான் உங்களின் சகிப்புத்தன்மை. எதையும் சகித்துக்கொள்ள முடிவதில்லை..குறிப்பாய் சொல்வதென்றால் தோல்விகளை.. உணர்ச்சி மேலோங்க கையை பிளேடால் கிழித்துக்கொள்வது...படாரென்று கதவை சாத்திக்கொண்டு தர்ணா செய்வது...இல்லை சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருப்பது...இதையெல்லாம் கொஞ்சமும் எங்களால் ஒத்துக்கொள்ளமுடிவதில்லை. கல்வி முதல் காதல் வரை எதுவானாலும் உங்களால் தோல்விகளை ஒத்துக்கொள்ள முடிவதில்லை. எங்கே போயிற்று உங்களின் சகிப்புத்தன்மை? எதையும் accept செய்ய முடிவதில்லை...முடிவுகளை உடனே எதிர்பார்க்கிறீர்கள்.அதற்காக உண்மையில் உழைக்கிறீர்களா? இதற்கெல்லாம் மகுடம் வைப்பதுபோல் உங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொள்வதுதான். இதை எங்களால் கொஞ்சம்கூட ஒத்துக் கொள்ளமுடிவதில்லை. தோல்விக்கு காரணம் எத்தனையோ இருக்கிறது. ஒரேயொரு காரணத்தை பிடித்துக்கொண்டு அதற்கான முடிவு உயிரைவிடுவது என்று உயிரைவிட்டு விடுகிறீர்களே என்ன நியாயம்? மற்ற காரணங்களை பற்றி சிந்திப்பதே இல்லை. வாழ்க்கை வாழ்வதற்குத்தான் என்று சொல்லிக்கொண்டு வாழாமலேயே போய் சேர்ந்துவிடுகிறீர்களே. அவ்வளவு கோழைகளா நீங்கள்? முடிவை எதிர்கொள்ளும் தைரியம் கிஞ்சித்தும் இல்லாமல் போய்விட்டதே...ராணி மங்கம்மாளோ இல்லை ஜான்சி ராணியோ..இல்லைஉயிருக்காக... வாழ்வுக்காக....மானத்துக்காக... வெற்றிக்காக போராடும் எத்தனையோ தாய்மார்கள்...ஏன்? உங்களின் தாயையே எடுத்துக்கொள்ளுங்கள் உங்களை வளர்ப்பத்துக்காக செய்த போராட்டங்கள்...தியாகங்களை நினைத்துப் பார்த்தால் சாவென்ற எண்ணமே உங்களுக்கு தோன்றாது. ஆனால் அந்த எண்ணத்தை மூடி மறைத்து உங்கள் சிந்திக்கும் திறனையே முடக்கி விட்ட இந்த மாயை...இந்த காதல்...இந்த வயது ...இதையெல்லாம் நினைத்து நினைத்து ...நெஞ்சம் வெடித்ததால் சிதறிய எங்கள் இதயத் துண்டுகளின் கதறல்களும் கண்ணீரும்தான் இந்த பதிவு.
எப்படியாயிருந்தாலும் சாவை நம்மால் வெல்லமுடியாது. எல்லோரும் ஒருநாள் நாம் எதிர்கொள்ள போகும் முடிவுதான். நீங்கள் ஏன் முடிவை வரவழைத்து கொள்கிறீர்கள்? முடிவு உங்களைத் தேடி வரட்டும். முடிவைத்தேடி நீங்கள் ஏன் ஓடுகிறீர்கள்?.இதுதான் எங்களின் ஆதங்கம். துணிவோடு போராடுங்கள். போராடுவதற்கு எத்தனையோ காரண காரியங்கள் இருக்கிறது. அல்ப விஷயத்துக்காக இல்லாமல் உன்னத காரியத்துக்காக போராடுங்கள். வாழ்க்கையை முழுதாய் வாழ்வோம். வெற்றித் தோல்விகள் சகஜம். எல்லோரும் வாழ்த்தும்படி வாழ்வோம். இறந்தாலும் எல்லோரும் வணங்கும்படி இறப்போம்.
இளைய சமுதாயமே உங்களின் வேகத்தை விவேகத்துடன் பயன் படுத்துங்கள். உங்கள் திறமைகளை உங்கள் வெற்றிக்காக முனைப்படுத்துங்கள். எதையாவது சாதிக்க முயலுங்கள். படிப்பு...மார்க்..மட்டும் அல்ல வாழ்க்கை.அதையும் தாண்டி எத்தனையோ இருக்கிறது. பெருந்தலைவர் படித்தவரா என்ன? கலைஞர் படித்தவரா என்ன? கல்விக் கண் திறந்தவர் ஒருவர். தொல்காப்பியத்திற்கே உரை எழுதியவர் மற்றொருவர். அவர்கள் சந்திக்காத வெற்றியா?தோல்வியா? Try to enjoy the
Life. வெற்றியை கொண்டாடுங்கள்..தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். Stand up. The whole world will lye under your feet. விவேகானந்தரின் அற்புத முழக்கம். எழுங்கள்..சிகரத்தை தொடலாம்.வாழ்க்கையில் எதையும் ஒத்துக்கொள்ளும் மனோ பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். வாழ்வது கொஞ்ச நாட்கள்தான்.நமக்கு அறிவு தெளிவதற்கே பாதி ஆயுசு முடிந்து விடுகிறது. மீதி இருக்கும் நாட்களில் அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கே போராட வேண்டியிருக்கிறது. நடுவில் மற்றவர்களை திருப்தி படுத்துவதற்கே மீதியை பாதி ஆயுளை தொலைக்க வேண்டியிருக்கிறது. நமக்கே நமக்காய் வாழ்வதே அற்ப காலம்தான். அதையும் இப்படி அல்பாய்சாய் முடித்து கொள்வதில் என்ன பயன்? யோசியுங்கள்...
மீண்டும் சந்திப்போம்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (6-Aug-22, 10:17 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 79

மேலே