புதுப்பாடல் இசைக்கும் பொழுது
புதுப்பாடல் இசைக்கும் பொழுது
=================================
நிழலோடு விளையாடும் நினைவென்னும் பிள்ளை
நிலவாக விளையாட நினைவொன்று வேண்டும்
அழகாக அலைபாயும் அதிகாலைக் கடலில்
அலையோடு அலையாக அலைமோத வேண்டும்
குழலோசை எனவாகும் குரலோசை யோடு
குயிலாக மொழிபேசும் குரலாக வேண்டும்
பழங்காலத் தமிழ்போல பலநூறு அர்த்தம்
படைக்கின்ற இதிகாகசப் பரணாக வேண்டும்
*
மலரோடு மறைந்துள்ள மணமாக வீசி
மகிழ்கின்றத் தருணங்கள் மனதுக்கு வேண்டும்
புலர்கின்றப் பொழுதுக்கு பூபாளம் பாடும்
புள்ளினத்தின் சிறகுகளில் பூங்காற்றாய்த் தீண்டும்
சிலகணங்கள் நெஞ்சுக்குள் சில்லூட்ட வேண்டும்
சிறகில்லா முகிலோடு சேர்ந்துலவ வேண்டும்
அலகுகளால் மீன்கொத்தும் ஆற்றோரக் கொக்கு
அதுபோல தவமிருக்கும் ஆத்மார்த்தம் வேண்டும்
*
மனிதத்தின் குணமில்லா மனமொன்று வேண்டும்
மா’மரங்கள் போலுயர்ந்து மண்மேலே நின்று
கனிமழையில் நனைக்கின்ற காருண்யம் வேண்டும்
கடவுளரும் வந்தங்கே கைகோர்த்துக் கொண்டே
இனிமையெனில் இதுவன்றோ இனிமையென எண்ணி
இருக்கின்ற வரமனைத்தும் எனக்கள்ளித் தந்து
புனிதமுடன் வாழென்றுப் பூத்தூவும் வாழ்த்தப்
புதுப்பாடல் நானிசைக்கும் பொழுதொன்று வேண்டும்
*
மெய்யன் நடராஜ்