சுவிட்ச் போர்டுடன் ஒருநாள்

வாழ்க்கை என்பது ஒரு மின்சாரம். சரியான அளவில் அது நம்மிலும் நம் வாழ்க்கையிலும் பாய்ந்தால் இரண்டும் நன்றாக ஒளி வீசும். இல்லையெனில் இரண்டுமே சரியாக கூசும். அதன் பின்னர் ஊர் ஏதோதோ பேசும். சமுதாயம் ஏசும். நான் இப்போது சொல்லப்போகிற நிகழ்ச்சி, மின்சாரம் சம்பந்தப்பட்ட உண்மையை அறிய உதவும் முக்கிய சம்பவம்.
பாத்ரூமிற்கு வெளியே ஸ்விட்சம்போர்டில் உள்ள மூன்று ஸ்விட்ச்களில், கீசருக்காக ( மின்சார வெந்நீர் தொட்டி) உள்ள சுவிட்ச் ஒன்று வேலை செய்யாமல் போனதால் கீசர் வேலை செய்யவில்லை. எனவே எங்கள் வீட்டு வளாகத்தில் பணி செய்யும் எலெக்ட்ரிசியன் இளைஞன் ஒருவனை கூப்பிட்டு அதை சரிசெய்ய சொன்னேன். அவன் வந்து பார்த்துவிட்டு " சார், இந்த போர்டில் ஒரே ஸ்விட்சை மட்டும் மாற்ற முடியாது. போர்ட் மொத்தத்தையும் மாற்றவேண்டும். பழையதை வைத்துக்கொண்டால், எப்போவாவது வேறு ஸ்விச் கெட்டுப்போனால் பழைய போர்டில் உள்ள ஸ்விட்சை எடுத்து போட்டுக்கலாம்" என்று சொன்னதன் பேரில் " அப்படியேப்பா, புதிய சுவிட்ச் போர்டு வாங்கி வந்து போட்டு கொடுத்து விடு" என்றேன்.
அன்று மதியமே எலெக்ட்ரிசியன் புதிய ஸ்விச்போர்டு வாங்கி வந்தான். பழையதை கழட்டி எடுத்துவிட்டு, புதியதை போட்டான். பார்க்க வழவழவென்று மூன்று ஸ்விட்சுகளுடன் போர்டு நன்றாக இருந்தது. முக்கியமாக அந்த மூன்றாவது சுவிட்ச் போட்டவுடன் கீசரில் பச்சை நிறம் தோன்றி , அவன் வேலையை சரியாக செய்துவிட்டான் என்று சிக்னல் கொடுத்தது. அவனுக்கு உரிய பணத்தை கொடுத்து அனுப்பிவிட்டேன்.
அடுத்தநாள் எனது நண்பன் மூளை மூர்த்தி (தனக்கு எல்லா விஷயங்களும் தெரியும் என்று சொல்லிக்கொள்ளும் பணிவான நண்பன் ) வீட்டிற்கு வந்திருந்தான். பேச்சுக்கு இடையே பாத்ரூம் சென்று வந்தான் . வந்ததும் என்னிடம் " இந்த ஸ்விட்ச்போர்டு போடுவதில் ஏதோ குளறுபடி நடந்திருக்கிறது" என்றார். நான் கேட்டேன் " இதில் என்னப்பா குளறுபடி, ஸ்விட்சை தட்டினால் பாத்ரூம் லைட் எரிகிறது. கீசர் வேலை செய்கிறது , வேறு என்ன வேண்டும்?". அவர் சொன்னார் " அதெல்லாம் சரிதாம்மா, நீ கவனித்தாயா, அந்த மூன்றாவது ஸ்விட்சில் ஒரு நம்பர் போட்டிருப்பதை?". நான் அந்த அளவுக்கு கவனிக்காததால் " இல்லையே , நம்பர் எதையும் நான் கூர்ந்து பார்க்கவில்லையே" என்றேன். அவர் கேட்டார் " உன் பிளாட் நம்பர் என்ன?" "17 F" என்றேன் நான். அவர் சொன்னார் " அப்படி என்றால் இந்த ஸ்விட்சிலும் 17 F தானே இருக்கவேண்டும். அதற்கு பதில் 20 A என்று அதில் சிகப்பு நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் மாடியில் உள்ள என் நண்பன் பிளாட் நம்பர் 20 A. அங்கே இருந்த ஸ்விச்போர்டை உங்க எலெக்ட்ரிசியன் தவறுதலாக கழட்டி எடுத்து இங்கே பிக்ஸ் பண்ணிவிட்டான்". நான் குழப்பத்துடன் கேட்டேன் " அந்த போர்டு அவன் வெளியிலிருந்துதானே வாங்கி வந்தான். என்னிடம் பில் கூட கொடுத்தானேப்பா என்று அந்த பில்லையும் நண்பனிடம் காட்டினேன். அவர் " உங்க எலெக்ட்ரிசியன் உன்னுடைய பிளாட் நம்பரை சொல்லியிருந்தால் 17-F நம்பர் போட்ட ஸ்விச் போர்ட்டை கொடுத்திருப்பான். இப்பவும் ஒண்ணும் குடிமுழுகிவிடவில்லை. எலெக்ட்ரிசியனை கூப்பிட்டு 17 F நம்பர் போட்ட வேறு ஸ்விச்போர்டு வாங்கி வரச்சொல்லி பிக்ஸ் செய்துவிடு" என்றான்.
நான் கேட்டேன் " இதனால் ஒன்றும் ஆகிவிடாது. வேண்டுமென்றால் நாம் 20 A வில் வசிக்கும் மின்சாமியிடம் இப்போதே சென்று விசாரித்துவிடுவோம், இதனால் ஏதாவது பிரச்சனையா என்று." என் நண்பனும் சரி என்று என்னுடன் சேர்ந்துகொண்டு முதல் அடுக்கில் உள்ள 20 A மின்சாமியின் வீட்டிற்கு சென்றோம். அழைப்பு மணியை அடித்தவுடன் அந்த வீட்டின் குடும்ப தலைவர் மின்சாமி எங்களை வியப்புடன் வரவேற்றார் " என்ன ஒரு இன்பமான ஷாக், இதுவரையில் நீங்கள் என் வீட்டிற்கு வந்ததே இல்லை. வாங்க, அதுவும் நம்முடைய அறிவு செல்வமான நண்பன் மூளை மூர்த்தியும் இங்கு வந்திருப்பது இருட்டில் சீரியல் லைட்டிங் போட்டமாதிரி இருக்கிறது " என்று வரவேற்றார். மூளை மூர்த்தியும் விட்டுக்கொடுக்காமல் " மின்சாமி உன்னுடைய முகம் இப்போது 100 வாட்ஸ் பல்பு மாதிரி ஒளிவீசுது என்று மகிழ்ந்தான். ஓரிரு நிமிடங்கள் அவரின் நலனை விசாரித்துவிட்டு " உன் வீடு பாத்ரூமில் வெளியே போட்டுள்ள ஸ்விட்ச்போர்டை கொஞ்சம் பார்க்கவேண்டும்" என்றேன். " தாராளமாக வந்து இருவரும் பாருங்கள். இது நான் இந்த வீட்டிற்கு வருவதற்கு முன்பே இருக்கும் சுவிட்ச் போர்ட். இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது?" என்றார் கொஞ்சம் சந்தேகத்துடன். மெதுவாக மூவரும் சென்று அந்த ஸ்விச் போர்டை பார்த்தோம். மூளை மூர்த்தி மிகுந்த வியப்புடன் "என்ன இது மிகவும் அதிசயமாக இருக்கிறது. மூன்றாவது ஸ்விட்சில் 25 A என்று போட்டிருக்கிறது. ஆனால் உன்னுடைய பிளாட்
நம்பர் 20 A தானே" என்றவுடன், மின்சாமி " என்ன சார் தமாஷ் பண்ணுறீங்க, என்னிடத்தில் பெரிய கீசர் என்பதால் 20 ஆம்ப்ஸ் ஸ்வித்தானே போடணும். இதோ ராமசாமி( நான் தான் சாமி) வீட்டில் சின்ன கீசர் என்பதால் 15 அல்லது 20 ஆம்ப்ஸ் சுவிட்ச் இருக்கும், அப்படித்தானே ராமசாமி ? என்றார். நான் சொன்னேன் " ஆமாம் , எப்படி அவ்வளவு சரியாக சொன்னாய் . என்னுடைய மூணாவது ஸ்விட்சில் , அதாவது என்னுடய பாத்ரூம் ஸ்விட்ச்போர்டில் உள்ள மூணாவது ஸ்விட்சில் 20 A என்று தான் போடப்பட்டிருக்கிறது. அதை பார்த்தவுடன் மூளை மூர்த்திக்கு கொஞ்சம் சந்தேகம் வந்துவிட்டது. என் வீட்டில் உள்ள சுவிட்ச் போர்டில் 20 A என்று போட்டுள்ளதால், ஒருவேளை எலெக்ட்ரிசியன் தவறுதலாக உங்க வீடு சுவிட்ச் போர்டை கழட்டி இவர் வீட்டில் போட்டுவிட்டானோ என்று."
இதை சொல்லி முடித்தவுடன் மூளை மூர்த்தி வேறு ஏதோ மூலையை பார்க்க ஆரம்பித்தான். பிறகு என்னை பார்த்து ஒன்றும் தெரியாததுபோல் சிரித்தான். நான் கொஞ்சம் வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தேன். மின்சாமி மின்விசிறியை முழு வேகத்தில் வைத்ததுபோல மிகவும் வேகமாகவும் வயிறு குலுங்கியும் சிரிக்க ஆரம்பித்தார். மூளை மூர்த்தி சிரித்துக்கொண்டே " ஆமாண்டா, நாமெல்லாம் மார்கரெட் ஆல்வாவின் வாரிசு. அப்படியே மின்சாரத்தை பற்றி கரைத்து குடித்துவிட்டோம் என்கிற நினைப்பா? என்று மழுப்பினான்.
எனக்கும் மினசாமிக்கும் வந்ததே இன்னுமொரு புயல்வேக சிரிப்பு. எங்கள் இருவரையும் மயில்சாமி பலமாக முதுகில் தட்டிய வண்ணம் " டேய், மூளை , அது மார்கரெட் ஆல்வா இல்லடா, தாமஸ் ஆல்வா எடிசன், மின்விளக்கை கண்டுபிடித்த விஞ்ஞானி" இன்னும் பலமாக வீடே அதிர்வது போல சிரித்தார் பார்க்கலாம். அவர் எங்களுக்கு காப்பி போட்டுக்கொண்டிருந்த அவன் மனைவியும் வெளியே வந்து என்னிடம் விஷயத்தை கேட்டுவிட்டு, சிரிக்கவே இல்லை. பிறகு நாங்கள் மூவரும் சூடான காபியை ரசித்து குடித்துக்கொண்டிருக்கையில், சமையலறையிலிருந்து பெரிய சிரிப்பு சத்தம் கேட்டது. மின்சாமி எங்களிடம் அவன் குரலை கீழிறக்கி " இப்போதுதான் அவளுக்கு ஜோக்கு என்ன என்று புரிந்தது. அதுதான் சிரிக்கிறாள்"
தன்னுடைய மானத்தை காத்துக்கொள்ள மூளை மூர்த்தி அதுதான் தகுந்த நேரம் என்று " எனக்கு ஒரு சந்தேகம். உன் மனைவி இதில் உள்ள நகைச்சுவையை தெரிந்துகொண்டுதான் சிரிக்கிறாளா இல்லை சும்மா நகைச்சுவையை புரிந்துகொண்டது போல நடித்து சிரிக்கிறார்களா? என்றவுடன் , மீண்டும் நாங்கள் மூவரும் அந்த அபார்ட்மெண்ட்டே அதிரும்படியாக சிரித்தோம். அவள் சிரித்துக்கொண்டே வந்து எங்களது காபி கிளாஸ்களை எடுத்து செல்ல வந்தபோது , மின்சாமி அவளிடம் கேட்டார் " ஏம்மா, சரஸ்வதி, நாங்க சொன்ன ஜோக்கு உனக்கு புரிந்து விட்டதா, அப்படி சத்தமிட்டு சிரித்தாயே". அதற்கு சரஸ்வதி கூறியது " நீங்க என்ன ஜோக் சொன்னீங்க நான் சிரிப்பதற்கு? நான் சமையல் ஜன்னலிலிருந்து கீழே வேடிக்கை பார்க்கையில் என்னுடைய தோழியின் தோழி ஒருத்தி மழை நீர் தேங்கியுள்ள வழியில், தடுக்கி கீழே தண்ணியில் விழுந்ததை பார்த்துதான் சிரித்துக்கொண்டிருக்கிறேன்". திடீரெண்டு சிரிப்பை நிறுத்திவிட்டு அவள் மின்சாமியை கொஞ்சம் முறைத்துவிட்டு உடனே மீண்டும் சமயலறைக்குள் மறைந்துவிட்டாள்.

பிறகு மூவரும் சிரிக்கமுடியாமல் திணறினோம். எல்லாரையும்விட அதிக நேரம் வயிறு குலுங்க சிரித்தவர் மின்சாமியை தவிர வேறு யாராக இருக்க முடியும்?

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (18-Aug-22, 7:43 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 98

மேலே