நீயும் பொம்மை நானும் பொம்மை
நீயும் பொம்மை நானும் பொம்மை
நீங்கள் இந்த கடைக்கு வரும் வாடிக்கையாளர்களாக இருப்பின் என்னை பார்த்திருக்க வாய்ப்புண்டு, ஆனாலும் கடைக்கு உள்புறமாக சுற்றி வந்தவர்களுக்கு மட்டுமே நான் இருக்கும் இடம் தெரியும். கடையின் உள்புறம் ஏறக்குறைய வியாபாரம் அதிகம் ஆகாத பொருட்களை ஒரு இடத்தில் அடுக்கி வைத்திருப்பார்கள். வாடிக்கையாளருக்கு அந்த பொருட்கள் தேவைப்பட்டால் மட்டுமே உள்புறமாக வந்து அந்த பொருளை எடுப்பர். அப்படி எடுக்கும் பொழுது அவர்கள் எடுக்கும் பொருட்களுக்கு மேல்புறம் இருக்கும் அலமாரியில் நான் உட்கார்ந்திருப்பேன். அதனால்தான் குறிப்பிட்டு சொன்னேன், கடையின் உள்புறமாய் சுற்றி வந்தவர்களுக்கு மட்டுமே என்னை பார்த்திருக்க வாய்ப்புண்டு.
சரி என்னை பார்த்திருக்க வாய்ப்புண்டு என்று சொல்வதால் என்னை ஏன் அங்கு வைத்திருக்கிறார்கள்? இதுவரை வாடிக்கையாளர்கள் எதனால் எடுத்து செல்லவில்லை? என்று நீங்கள் கேட்கலாம். எனக்கு காரணங்கள் கொஞ்சம் தெரிந்தாலும் மனிதர்களை புரிந்து கொள்ளமுடியவில்லையே என்னும் கவலைதான் அதிகமாக இருக்கிறது.
நான் மற்றவர்களை விட அழகில் குறைந்தவளா? இல்லையே ! உட்கார்ந்த நிலையிலேயே கண் பார்வை நேராக வைத்து எனது தலைமுடி நெற்றியை ஒட்டி வளைந்து செல்லும் அழகு, எனக்கு பாவாடை சட்டை போட்டு அதன் ஓரங்களில் எல்லாம் வண்ண வண்ண பார்டர் வைத்து மற்றவர்களை விட அழகாகவே இருக்கிறேன். கண் இமைகளில் எல்லாம் சாந்து இட்டு கவர்ச்சியாய் காண்பித்திருந்தேன்.
கடைக்கு முன்புறம் என்னைப்போல் பத்திருபது பேர் இருந்தாலும் என் அழகு அவர்களை எல்லாம் மிஞ்சித்தானே இருந்தது. அப்படி இருந்தும் நான் ஏன் இப்படி இருட்டறை அலமாரிக்குள் வரவேண்டிய சூழல் வந்தது?
என்னை ஏன் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள் என்பது, புரிந்தாலும், நீங்கள் எங்கள் வாடிக்கையாளராக இருப்பின் இதனை தெரிந்து கொண்டு என்னை தேடி வந்து வாங்குவீர்கள் என்று நம்பிக்கையில் இதை சொல்கிறேன்.
ஒரு உண்மையை சொல்லி விடுகிறேன். இதுவரை இரண்டு முறை என்னை விலை பேசி எடுத்து சென்றிருந்தார்கள். அதிலும் முதலாவது வாங்கியவர், தன் ஐந்து வயது பெண் குழந்தையுடன் நான் இருக்கும் பக்கம் வந்து எங்களை பார்வையிட்டார். அப்பொழுது அவரது பெண் குழந்தை என்னை கை காட்டி “வேணும்” என்று அடம் பிடிக்க அவரும் என்னை காட்டி, எடுத்து வைக்க சொல்லி விட்டு பணத்தை கட்டி வருவதாக “கவுண்டருக்கு” சென்றார். அதற்குள் அவரது ஐந்து வயது குழந்தை ஓடி வந்து என்னை தூக்கி மார்போடு அணைத்து கொஞ்சி மகிழ்ந்தது.
எனக்கும் “அப்பாடி” என்றிருந்தது. என்னதான் விளக்கு, குளிர் ஊட்டிகள் இருந்தாலும் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது எவ்வளவு கொடுமையானது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
என்னை அணைத்து பிடித்து அந்த கடையை விட்டு சிறிது தூரம் கூட சென்றிருக்க மாட்டார்கள், என்ன நினைத்ததோ அந்த பெண் குழந்தை சட்டென திரும்பி மீண்டும் கடைக்குள் வர எத்தனித்து நடக்க முற்பட பின்புறம் அவர்களை கடக்க இருந்த சைக்கிளின் மேல் மோதி படாரென கீழே விழுந்தாள். விழுந்த வேகத்தில் அவள் கையில் இருந்த நான் எகிறிப்போய் கடை வாசலிலேயே விழுந்தேன்.
அதற்குள் அந்த குழந்தையின் அப்பா ஓடி வந்து மகளை தூக்கி நிறுத்த இன்னும் ஒன்றிரண்டு பேர் ஓடி வந்து உதவினர். அந்த பெண் குழந்தை நடக்க முடியாமல் நொண்ட, அப்பா அவளை தூக்கி தோளில் சாய்த்தபடி தனது காருக்கு கூட்டி சென்றார்.
கடை வாசலில் விழுந்த என்னை கடையில் பணிபுரிபவர் ஓடி சென்று அவரிடம் கொடுத்தார். என்ன நினைத்தாரோ “வேண்டாம்” அதை கடையிலேயே வச்சுக்குங்க சொல்லி விட்டு காரை எடுத்து சென்று விட்டார்.
அதுவரை மகிழ்ச்சியாக “வெளியே” செல்லபோகிறோம் என்று இருந்த நான் மீண்டும் அந்த அலமாரியில் உட்காரவைக்கப் பட்டேன். அழுகையும் ஏமாற்றமும் எனக்குள் வந்தாலும் உங்களை பொருத்தவரை நான் உயிரற்றவள்தானே..!
அடுத்த முறை ஒரு வயதான மாது என்னை வாங்கியவள் அதை அப்படியே சுற்றி “பேக்” செய்து விடுங்கள், என் பேரன் பிறந்த நாளுக்கு கொண்டு போக வேண்டும் என்று சொல்லி விட்டு, பணம் கட்டி வர “கவுண்டருக்கு” சென்றாள். போனவள் வரவே இல்லை., “கவுண்டருக்கு” அருகில் ஒரே இரைச்சல்.
சிறிது நேரத்தில் அங்கு ஒரு கும்பல் கூடி விட்டது. கடை சிப்பந்திகள் கூட வேகமாக அங்கு ஓட அந்த மாது “குய்யோ முய்யோ” என்று கத்தி கொண்டிருந்தாள். அவளது கைப்பையில் இருந்த பணம் களவாடப்பட்டு விட்டதாக கூக்குரலிட்டாள்.
கடைக்குள் நுழையும்போது கைப்பையில் பணம் இருந்ததாகவும் கடையில் சுற்றி வரும்போதுதான் களவாடப்பட்டிருக்க வேண்டும் என்று கத்தினாள்.
கடையில் இருந்தவர்கள் அவள் சமாதானப்படுத்தி காமிராவில் பார்த்து விடலாம் என்று தனியறைக்கு கூட்டி சென்றனர். அங்கு பிரச்சினை முடிந்ததா என்று எனக்கு தெரியவில்லை,
மறு நாள் அந்த கடையை சுற்றி வந்த மேலாளர் என்னை பார்த்து, தன் பணியாளர்களை அழைத்து என்னவோ சொன்னார். அதன் பின் நடந்ததோ ! நான் இதோ இந்த உள்புறமாக இருந்த இருட்டு அறைக்குள் இப்படி உட்கார வைக்கப்ட்டு விட்டேன்.
சார், இல்லயென்றால் மேடம், உங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன், என்னை வாங்கியதால் ராசியில்லை என்று திருப்பி கொடுப்பவர்கள் அந்த பெண் தன் கண் கண்ணாடியை காரில் வைத்து விட்டு வந்ததை அவள் அப்பா சொல்லி கவனப்படுத்தி இருக்கலாமே. அந்த மாது உண்மையில் கொண்டு வந்தது அவள் இங்கு வந்த போது அவளுடன் வந்த பெண்ணின் கைப்பையை தவறுதலாக மாற்றி எடுத்து வந்ததை அவள் இறுதியில் கவனித்து கடையில் ஒப்புக்கொண்டதாக தெரிந்தது. அதன் பின் என்னை வாங்கி சென்றிருக்கலாமே..? ஏன் இந்த கடை மேற்பார்வையாளரே இத்தனை நாளாக இங்குதானே இருக்கிறது, வியாபாரம் நன்றாகத்தானே போகிறது, அப்புறம் ஏன் அதை மாற்றி வைக்க வேண்டும் என்று யோசித்திருக்கலாமே..!
எல்லா தவறுகளும் அவர்களே செய்து விட்டு என்னை ராசியில்லாத பொம்மை என்று இந்த இருட்டறைக்குள் வைத்து விட்டு செல்வது என்ன நியாயம்?
உங்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி சொல்கிறேன். நான் உங்களிடம் பேசி ஒரு மாதம் இருக்குமா? ஆம் உங்களிடம் பேசி மனதை ஆற்றி கொண்டபின் ஒரு பெரிய மனிதர் என்னை வாங்கி சென்றார்.
என்னடா பெரிய மனிதர் என்கிறானே என்று பார்க்கிறீர்களா ? அவர் செய்த காரியம் அப்படி பட்டது. என்னை வாங்கி வெளியே வந்தவர் அவரை எதிர்பார்த்து கடை வாசலில் கையேந்தி பிச்சைக்கு நின்ற பெண்ணின் தோளில் சாய்ந்திருந்த இரண்டோ அல்லது மூன்றோ வயதிருந்த பெண் குழந்தையிடம் என்னை கொடுத்து விட்டார்.
அதுவரை அப்படிப்பட்ட எதையுமே தன் கையால் தொட்டு பார்த்திருக்காத அந்த குழந்தை முகம் முழுக்க புன்னகையுடன், அம்மாவை விட்டு இறங்கி தன் கண்கள் விரிய என்னை அணைத்து அவள் அம்மாவைப் போல தோளில் சாய்த்து இறங்கி அம்மாவுடன் நடந்தாள்.
அந்த இருட்டறை அலமாரியாகட்டும், இல்லை முன் அலமாரி குளு குளு வசதியாகட்டும் எதுவும் எனக்கு பெரிதாக படவில்லை. இந்த குழந்தையின் தோளில் சாய்ந்து அம்மாவுடன் நானும் இவளும் போவோர் வருவோரிடம் கையேந்தி கொண்டுதான் இருக்கிறோம்.
இப்பொழுது நான் அழுக்காக இருக்கலாம், ஆனால் மனம் மகிழ்ச்சியாய் அவளுடன் இருக்கிறேன். இதை சொன்னால் நீங்கள்தான் ஒத்து கொள்ளமாட்டீர்களே, காரணம் எங்களுக்கு உயிரில்லை என்று சொல்வீர்களே.