நாகரீகமற்றப் பேச்சு
நாகரீகமற்றப் பேச்சு
****** ****** ****** ***
பேசுவதற்கு வேறொன்றுமில்லை
என்று துண்டித்துக் கொண்ட பின்பே
மன நிலத்தில் ஆழமாக
வேர்விடத் தொடங்குகின்றன
பேச்சின் விதைகள்.
*
மணிக்கணக்கில்
பேசி முடித்தபின்னும்
மறுபடியும் எதையாவது பேசுவதற்குப்
பேசி வைத்திருக்கும் பேச்சு
பேசித் தீரா பேரின்பத்தை
ஒரு நதியாகவே பாயவிடுகிறது
*
இனி பேசி ஆவதொன்றுமில்லை
என்றே சண்டையிட்டத்
தருணங்களில் எல்லாம்
மௌனப் போர்க்களத்தில்
வாள் சமர் நடத்திக் கொள்ளும்
வார்த்தைகளின் மேனியெங்கும்
காதல் தழும்புகள் விழுந்து விடுகின்றன
*
கண்களால் பேசி
இதயக் கழுத்தறுக்கும்
காலத்தை விரட்டிக்
குறுஞ்செய்திகள் வழியே பேசி
கைப்பேசிகளைப் புறாவாக்கிக் கொண்ட
இன்றைய காதல் சிற்றரசுகள் மத்தியில்
ஒரு அதிகாலை வணக்கத்துடன்
தொடங்கி இரவு வணக்கம் போடாமலேயே விழித்திருக்கின்றன
பல பேச்சுகள்.
*
என்ன பேசினோம்
என்பதை நினைவில்
வைத்துக்கொள்ளாமலும்
என்ன பேசுவோம் என்பதை
நினைத்துப் பாராமலும்
என்னென்னவோ பேசித்தொலைத்து
தொலைபேசி நிறுவனங்களை
வாழவைத்துக் கொண்டிருக்கும்
இளசுகளைப் பற்றி
உலகம் நாளை
என்ன பேசும் என்பதை
நாம் பேசினால் நம்மையே பேசும்
அவர்களின் நாகரீகமற்றப் பேச்சு..
*
மெய்யன் நடராஜ்
26 - 08 - 2022