மறந்து போன சேமியா பாக்கெட்
மறந்து போன சேமியா பாக்கெட்
மணி மாலை ஏழை தாண்டி இருக்கலாம்.பரமசிவம் கடையில் தனியாக இருந்தார், மனம் அவரது மகளை “தலை பிரசவத்துக்கு” பக்கத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்ததை நினைத்து கொண்டிருந்தது
அண்ணாச்சி இரண்டு பாக்கெட் சேமியா கொடுங்க
சட்டென நினைவுக்கு வந்தார் பரமசிவம், என்ன கேட்டீங்க, மறுபடி ஒரு முறை கேட்டு விட்டே சேமியா பாக்கெட்டை எடுத்து கொடுத்தார்.
எவ்வளவு அண்ணாச்சி அந்த பெண் எங்கோ போகும் அவசரத்தில் கேட்டாள்
முப்பது ரூபாய் கொடுங்க
சிறுவாடு இல்லையே அண்ணாச்சி, தயங்கியவாறு ஐநூறு ரூபாய் தாளை நீட்டினாள்
இம்புட்டு சில்லறை இருக்காதே, இப்பத்தான் சிறூவாட்டை பொறுக்கி கொடுத்தேன், முணங்கியாவாறு பணத்தை வாங்கினார்.
சீக்கிரம் சில்லறையை கொடுங்க அண்ணாச்சி, கடைசி பஸ் வந்துடும், என் பொண்ணை பார்க்க போகணும்
எரிச்சலாய் வந்தது, கிழவி சில்லறைக்காகத்தான் சேமியா வாங்கினாளோ என்னும் சந்தேகம் வந்தது, இரும்மா பொறுக்கித்தான கொடுக்கணும்.
அந்த பெண் பதிலொன்றும் சொல்லாவிட்டாலும் காலை மாற்றி மாற்றி வைத்து நிற்பதில் அவளது அவசரம் புரிந்தது.
இந்தாம்மா, கையில் இரண்டு மூன்று நூறு ரூபாய் தாளையும் மற்றும் சில்லறை நோட்டுக்களாக இருப்பதை பொறுக்கி எடுத்து கொடுத்தார்.
அந்த பெண் அதை வாங்கி சட்டென தன் சுருக்கு பையில் திணீத்து விட்டு திரும்பும்போது பஸ் அங்கு வந்து திரும்பியது.
கடையை விட்டு ஓடினாள் கிழவி, நிறுத்து, நிறுத்து
இந்த நேரத்துக்கு இங்கு பயணிகள் யாரும் இருக்கமாட்டார்கள் என்னும் நம்பிக்கையில் பஸ் திரும்பி கிளம்ப நினைக்கையில் கிழவி ஓடி வந்ததை பார்த்த கண்டக்டர் விசிலை ஊதினார்.
பார்த்து ஏறு, கீழே வுழுந்துடாதே, ரைட்..மீண்டும் விசில் கொடுக்க வண்டி வேகமெடுத்தது. எங்க போகணும்? கண்டக்டர் அவள் அருகில் வர ‘பெதப்பம்பட்டி கொடுங்க.” சுருக்கு பையை திறந்து அண்ணாச்சி கொடுத்த நோட்டுக்களில் ஒன்றை உருவி எடுத்து கண்டக்டரிடம் கொடுத்தாள்.
டிக்கட் கொடுத்து விட்டு மற்ற பிரயாணிகள் இல்லாததால் கண்டக்டர் டிரைவர் சீட்டுக்கு எதிர்புற சீட்டில் உட்கார்ந்து டிரைவருடன் அரட்டை அடிக்க ஆரம்பித்தார்.
கடையை அடைக்கப்போகும்போதுதான் கவனித்தார் “சேமியா பாக்கெட்டுகள்” முன்புற பலகையில் இருந்ததை. இது எப்படி நினைக்கும்போது ஏழு மணிக்கு கிழவி அதை ஐநூறு கொடுத்து வாங்கியது ஞாபகம் வந்தது.
அட பாவமே..! ஐனூறை சில்லறை முறிக்க சேமியா வாங்கி அதை கடையிலேயே வைத்து விட்டு போயிட்டாலே, அப்படி என்ன அவசரமோ, இப்படி நினைத்தாலும் அந்த நேரத்தில் பஸ் வந்ததும் ஞாபகம் வந்தது.
சரி அதை எடுத்து வைப்போம், உள்ளூர்க்காரிதானே, எப்படியும் வாங்க வருவாள், மனதை சமாதானப்படுத்தியபடி உள்ளே வைத்து விட்டு கடையை சாத்தினார்.
சைக்கிளை எடுத்தவர் மருத்துவமனையை நோக்கி அழுத்த ஆரம்பித்தார். போய் மகளை பார்த்து விட்டு பின் வீட்டுக்கு போகலாம். மனைவியும் அங்குதான் இருப்பாள்.
அப்பாவை பார்த்ததும் மகள் “வாப்பா” சொன்னாலும் அவள் முகத்தில் பயத்தின் சாயலை பார்த்தார். பக்கத்தில் மனைவி உட்கார்ந்திருந்தாள். அவளிடம் கையில் கொண்டு வந்திருந்த பொட்டலங்களை கொடுத்து விட்டு டாகடர் வந்தாங்களா?
வந்தாங்க, நாளை கழிஞ்சு நாள் சொல்லிட்டு போயிருக்காங்க, நார்மலாயிடும்னு சொல்லியிருக்காங்க. இவதான் பயந்து போயிருக்கா.
அவ வூட்டுக்காரன் போன் பண்ணுனாமா?
அவள் அவன் இப்ப எங்க நிக்கறானோ, மெல்ல முணங்கினாலும் பரமசிவத்தின் காதுகளில் விழத்தான் செய்தது. அவளுக்கு அவள் அண்ணன் பையனுக்கு மகளை கொடுக்க வேண்டும் என்று ஆசை. மகளோ இவனைத்தான் கட்டுவேன் என்று இவரது உறவுப் பையனை கட்டிக்கொண்டு விட்டாள். அவன் குடும்பம் தற்போது மதம் மாறி இருந்தது. அந்த எரிச்சல் அவளுக்கு ஆரம்பத்திலிருந்தே இருந்து வருகிறது.
இதா நீ கண்டதயும் நினைச்சு புள்ளைகிட்ட வம்பு பண்ணாதே, காரமாய் சொன்னார்.
நான் என்னத்திய சொல்ல போறேன், நீயாச்சு, உன் புள்ளையாச்சு, பதில் சொன்னாலும் அவள் குரலில் இருந்த நடுக்கம் அவளும் மகளை பற்றிய பயத்தில் இருக்கிறாள் என்பதை காண்பித்தது.
காலையில் கடையை திறந்து உட்கார்ந்திருந்த பொழுது நான்கந்து பேர், ஆண்களும் பெண்களுமாய் பரபரப்புடன் பஸ்ஸுக்கு நிற்பதை கவனித்தார்.
அண்ணாச்சி பஸ் இப்ப வந்துடுமா? அதில் ஒரு பெண் கேட்ட்டாள்,
இப்ப மணி என்ன?
எட்டு மணி.
எட்டு பத்துக்கு வந்துடுவான், என்ன அவசர ஜோலியோ, கூட்டமா கிளம்பிட்டீங்க? அண்ணாச்சி பேச்சு கொடுத்தார்.
நம்ம அயம்மா கிழவியோட பேத்தி உசிருக்கு போராடிகிட்டிருக்காமா? பாவம் நேத்துதான் அவ அவசர அவசரமா கிளம்பி போனா..! தலைச்சன் பிரசவம், குழந்தை திரும்பிகிச்சாம்,
பரமசிவம் உள்ளம் நடுங்கியது, எத்தனை மணிக்கு இங்கிருந்து கிளம்புச்சு அந்த கிழவி.
நேத்து இராத்திரி ஏழு மணி பஸ்ஸுக்குத்தான் கிளம்புச்சு, முன்னால போக முடியலை, இங்க மருமகளுக்கு உடம்பு முடியாம கிடக்கா,மகனுக்கும் பேரபுள்ளை களுக்கு ஆக்கி வச்சுட்டு மக வயித்து புள்ளை பிரசவத்தை பார்க்க பறந்தா.. அது என்னடான்னா..சோகமாய் இழுக்க அதற்குள் பஸ் வேகமாய் நிறுத்தத்துக்குள் நுழைந்தது.
அவர்கள் வேகமாய் பஸ்ஸை நோக்கி ஓடுவதை பார்த்தார். மனம் கடையை சாத்தி விட்டு மகள் அருகே போய் உட்கார்ந்து விடலாமா என்று நினைத்தது.
கிழவி மறந்து வைத்து விட்டு போன சேமியா பாக்கெட்டுகளை அவர் கண் அனிச்சையாய் பார்த்தது. இந்த பக்கெட்டை அவள் ஏன் இங்கு வாங்கவேண்டும், வைத்து விட்டு செல்ல வேண்டும். ஒரு வேளை அவளுக்கும் எனக்கும் ஒரு சேர ஏதாவது கெடுதல் நடக்க இருப்பதாலோ?
இப்படி குறுக்காக யோசித்து மனதை ரணகளப்படுத்தியது மனம். கடவுளே..என் மகளுக்கு ஏதும் ஆயிடக்கூடாது.
அவள் இவனைத்தான் கட்டுவேன் என்று சொன்னபோது இவருக்கும் அவர்கள் மதம் மாறியது குறையாக தெரிந்தது, என்றாலும் அவன் உறவுக்காரந்தானே என்று சமாதானப்படுத்தி கொண்டார். மனைவியால் அது முடியவில்லை, என்றாலும் மகளின் பிடிவாதம் இவர்களுக்கு ஒரெ மகள்..அந்த எண்ணமே கடைசியில் ஒத்து கொள்ள வைத்தது.
அவனும் அவர்கள் ஊரில் மளிகை கடைதான் வைத்திருக்கிறான், அது போக மொத்த சரக்கு வாங்க கிராமம் கிராமமாக அலைவான். அதுவும் இவர்களுக்கு ஒரு உறுத்தல், அவ்வப்பொழுது மனைவி மருமகனை பற்றி குறையாக சொல்லுவாள்.
அன்று முழுக்க, வந்தவர்கள் என்ன வாங்கினார்கள், இவர் என்ன கொடுத்தார், எதுவுமே அவரது நினைவில்லாமலே நடந்தது போலத்தான் இருந்தது.
மாலையில் சீக்கிரமே கடையை சாத்தி விட்டு மருத்துவமனைக்கு சென்று விட்டார்.
மனைவி என்ன சீக்கிரமா வந்துட்டே? இந்த கேள்வியை கேட்டபோது அவருக்கு கோபம் வந்தது, ஆனால் என்ன பதில் சொல்வது? ஏதாவது சொல்லி அவள் மனதை பயமுறுத்த வேண்டாம் எங்கிற எண்ணத்தில் பேசாமல் இருந்து விட்டார்.
நானும் இங்கன்யே இருந்துக்கறேன்
என்னத்துக்கு, இங்க ஒரு ஆளுதான் தங்க முடியும், வெளிய கொசுக்கடியில என்னத்துக்கு சிரமப்படறே,
இல்லஏ நாளைக்கு டயம் சொல்லியிருக்கறாங்களே டாக்டரு, அதான் இழுக்க..
நாளைக்கு மதியம் மூணூ மணிக்கு மேலதான் ஆகும்னு சொல்லியிருக்காங்க, அதனால நீ வீட்டுல இரு.
வேறு வழியின்றி மனமில்லாமல் வீட்டை நோக்கி சைக்கிளை மிதித்தார்.
போன் சத்தம்..கேட்டவர் சட்டென விழிப்பு தட்ட எடுத்து பார்க்க மனைவி எண். உடல் நடுங்கியது, மனம் பதற ஆரம்பித்தது, ஐயோ இந்நேரத்துக்கு போன் பண்ணுறாளே..!
மனைவி நீ கிளம்பி வா ஆஸ்பத்திரிக்கு..
என்னாச்சு..குரல் அழுகையாய் எட்டி பார்க்க,
சீக்கிரம் வந்து சேரு, சட்டென போனை வைத்து விட்டாள். குரலில் அவசரம் தெரிந்தது.
எப்படி கதவை பூட்டினார், சைக்கிளை எடுத்தார் எதுவும் தெரியாமல் வெறி பிடித்தது போல் அழுத்தி மருத்துவமனைக்கு விரைந்தார்.
உள்ளே மனைவி அறையில் ஒருவரும் இல்லை, யாரிடம் கேட்பது? நடுங்கியவாறு தூக்க கலக்கத்தில் உட்கார்ந்திருந்த நர்சிடம் போய் இந்த ரூமுல இருந்த பொண்ணு..
தூக்கம் கலைந்த எரிச்சல் சற்று தெரிந்தாலும், யாரு அந்த பிரசவ கேசா, வலி வந்துட்டுதுன்னு கூட்டிட்டு போயிருக்காங்க, இதா இதுல லாஸ்ட் ரூம், அங்க போய் கேளுங்க.
வேட்டி நழுவி விழுவது கூட தெரியாமல் அதை இறுக்கி பிடித்தவண்ணம் வராந்தாவின் கடைசி பகுதிக்கு விரைந்தார்.
அங்கு போய் சேரவும் ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்கவும், இவர் அப்படியே நடுங்கி தொப்பென விழப்போனவர் சமாளித்து அங்கிருந்த நாற்காலி ஒன்றை பிடித்து அப்படியே உட்கார்ந்தார்.
இரண்டு நிமிடத்தில் குழந்தை அழும் சத்தம்……அவர் காதில் விழுந்தது..
பரபரப்பாய் எழுந்தவர் வேட்டியை இறுக கட்டி முடிக்கவும் மனைவி முகமெல்லாம் சிரிப்பாய் பேத்தி புறந்திருக்காயா….
நம்ம புள்ளை..
முழிச்சுட்டா… இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு ரூமுக்கு அனுப்பறோமுன்னுட்டாங்க, நீ வந்திருப்பயேன்னு ஓடி வந்தேன்.
அவரது பதட்டம், நடுக்கம் எல்லாம் முடிவுக்கு வந்தது போல் கண்களில் கண்ணீர் எட்டி பார்க்க, மனைவியின் கையை ஆதரவாய் பற்றிக்கொண்டு உள் அறைக்குள் நுழைந்தார்.
மகளை பார்க்க முடியாவிட்டாலும், அருகில் குழந்தை படுத்து கிடக்க மகள் அங்கிருந்தே தந்தையை பார்த்த் தலையசைத்ததை பார்த்ததும் அந்த ஜன்னலின் மேலேயே உடலை சாய்த்து விக்கி விக்கி அழுதார்.
அண்ணாச்சி…
குரல் கேட்டதும் சட்டென நிமிர்ந்தார்
அன்று சேமியா வாங்கி மறந்து விட்டு சென்ற கிழவி..
இவருக்கு குற்ற உணர்ச்சி உருவாக ஏம்மா உன் பேத்தி..
நல்லாயிருக்கா அண்ணாச்சி, பொண் குழந்தை, உள்ளயே திரும்பி சிரமபடுத்திடுச்சு, டாக்டருங்க, அறுத்து எடுத்துட்டாங்க, இப்ப இரண்டு பேரும் நல்லா இருக்காங்க, இங்க மருமகளை கவனிக்கணும்னு நான் வந்துட்டேன்.
அவர் ஆறு பாக்கெட் சேமியாவை கையில் கொடுத்தார்.
கிழவி விளங்காமல் பார்க்க, அன்னைக்கு இரண்டு பாக்கெட்டை மறந்து வச்சுட்டு போயிட்டே, இரண்டு பாக்கெட் எனக்கு பேத்தி பொறந்ததுக்கு, இன்னும் இரண்டு பாக்கெட் உனக்கு பேத்தி புறந்ததுக்கு, வச்சுக்க. இன்னைக்கு பாயாசம் வச்சு உன் மகனுக்கும், பேரன், பேத்திகளுக்கும் கொடு.. அவர் குரலில் உற்சாகம்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
