இப்படிக்கு சைக்கிள்
இப்படிக்கு,
சைக்கிள்
அடுத்தவேளை உணவுக்காக
நாளிதழ் போடுபவனாய்
நாள்தோறும் வந்து
உன் மிதி சுமந்தவன்
எதிர்காற்று சுழன்றடிக்க
உன் மனைவியோடு செல்ல
தடுமாறிய நேரங்களில்
தரையிரங்காமல்
பாலமேற உதவியவன்
உன் மகனைப் பள்ளிக்கு அனுப்ப
அடகுக்கடையில் நின்று
அவசரத்திற்கு உதவியவன்
உன் வாண்டுகள் மகிழ்ச்சியாக
சுழற்றி விளையாட
கல்லும் முள்ளும் குத்தி
காலுடைந்து நின்றவன்
இதற்காக இல்லையென்றாலும்
உனது தந்தையின்
நினைவாக நிறுத்தி இருக்கலாம்
எப்படி மனம் வந்தது
புல்லட் வாங்கிய பூரிப்பில்
பழைய இரும்பு வியாபாரியோடு
என்னை வழியனுப்ப
இப்படிக்கு,
சைக்கிள்.