நேரிசை வெண்பா எழுதுவதில் உள்ள நுணுக்கங்கள்
நேரிசை வெண்பா என்பது தமிழிலுள்ள மரபுச் செய்யுள் வகைகளுள் ஒன்றான வெண்பாவின் துணைப் பா வகையாகும்.
நேரிசை வெண்பாவுக்கான இலக்கணப்படி இது பின்வரும் அமைப்பைக் கொண்டிருக்கும்.
பொதுவான வெண்பாவுக்கு உரிய இலக்கணங்களைக் கொண்டு,
நான்கு அடிகளை உடையதாக இருத்தல்.
இரண்டாவது அடியில் தனிச்சொல் வருதல்.
நான்கு அடிகளும் ஒரே வகையான எதுகை உடையனவாகவோ (அல்லது)
முதல் இரண்டு அடிகளும் ஒருவகை எதுகை உடையனவாக இருக்க, அடுத்த இரண்டும் வேறு வகை எதுகை உடையனவாகவோ இருத்தல்.
எ.காட்டு:
நான்கு அடிகளிலும் ஒரே வகையான எதுகை வரும்,
ஒரு விகற்ப நேரிசை வெண்பா:
தென்றல் தருஞ்சுகந் தீட்டும் இனிமையும்
கன்னித் தமிழ்சொல்லுங் கற்பனையும் - பொன்போன்ற
நன்செய்யின் நாற்றென நன்மை பெருக்கியே
நின்றேத்துஞ் செய்கை நிசம்!
– வ.க.கன்னியப்பன்
.
"பொன்போன்ற" என்ற தனிச்சொல்லும்,
நான்கு அடிகளின் எதுகைகளும் சீராக இருப்பதனால் இது ஒரு விகற்ப நேரிசை வெண்பா ஆனது.
இரு விகற்ப நேரிசை வெண்பா
எடுத்துக்காட்டு:
அன்புநிறை நற்கவியாம் ஆசான் தமிழன்பன்
என்றுமுயர் பாரதிபோல் ஏற்றமிகு – தன்மையவன்
தண்டமிழ்ப் பாக்களால் தாழ்விலா நற்றமிழாய்
அண்ணலே நீவாழ்க ஆர்த்து!
– வ.க.கன்னியப்பன்
இதன் இரண்டாவது அடியில் 'தன்மையவன்' என்ற சொல் தனிச்சொல் ஆகும்.
முதல் இரண்டு அடிகளும் ஒருவகை எதுகையையும் (அன்புநிறை, என்றுமுயர்),
மூன்றாம் நான்காம் அடிகள் இன்னொரு வகையான எதுகையையும் (தண்டமிழ்ப், அண்ணலே) கொண்டு அமைந்துள்ளன.
எனவே இது இரு விகற்ப நேரிசை வெண்பா ஆனது.
நான்கடிகளிலும் 1, 3 சீர்களில் மோனை (பொழிப்பு மோனை) அமைதல் சிறப்பு.