அம்பை அனுபவம்

அம்பை🔥

‘வெண்முரசு’ ஜெயமோகனின் நவீன இதிகாச நாவலை வாசிக்கத் தொடங்கி நாற்பது அத்தியாயங்கள் கடந்து விட்டேன். ஆனாலும் அம்பை எனும் ஒரு பாத்திரச் செதுக்கலை மனதால் கடக்க முடியவில்லை. இப் பெண்ணாளுமையை விந்தையாகவே காண்கிறது மனது!

‘அனலைக் கழலாக அணிந்த கொற்றவையின் பெயர்கொண்டவள். முக்கண் முதல்வியின் ரஜோகுணம் மிக்கவள். செந்நிற ஆடைகளையும் செந்தழல் மணிகளையும் விரும்பி அணிபவள்’

அம்பை! எத்தனை கனவுகள், எத்தனை இழப்புக்கள், எத்தனை நிராகரிப்புகள் அத்தனையும் தாண்டி ஒரு பெண்ணால் தன் இலக்கை அடையமுடியும் என உணர்த்திய ஒர் ஸ்திரமான பெண் படைப்பு!

பெண் என்பவள் இப்படித்தான் வாழவேண்டும் எனும் சமூக அமைப்பு இருக்கும் இக்காலகட்டத்திலும் தன் மனக்கோட்பாடுகளை எவர்காகவும், எதற்காகவும் தளர்த்தாத பெண் ஒருத்தி இதிகாசகாலத்திலேயே வாழ்ந்தாளென நான் பிரமிக்க சான்றானவள்!

நான் காணும் அம்பை காசிராஜன் இளவரசியோ, மகாராணி புராவதி மகளோ, இளவரசிகள் அம்பிகை, அம்பாலிகை சகோதரியோ, சால்வ மன்னன் மனங்கவர் நங்கையோ, பீஷ்மரே எதிர் கொள்ளத் தயங்கும் நேர்குணங் கொள் மங்கையோ அல்ல.... கனிவுணர்வு ஆள், சுதந்திர வேட்கை கொள், அசையறு மனதுடைய பராக்கிரமப் பெண்!

“என் வாழ்க்கையின் காரண காரியங்கள் என்னைச் சார்ந்தவை மட்டுமே நான் விரும்புவதைச்செய்பவளாகவே இதுவரை வளர்ந்திருக்கிறேன். இனிமேலும் அவ்வாறுதான் வாழ்வேன்”
~அம்பை.

இராச்சியத்தை ஆள்பவர்களல்ல ‘அம்பை’கள் தன்னைத் தான் மட்டும் ஆள்பவர்களே ‘அம்பை’கள்.

ஜனார்த்தனி (நர்த்தனி)

எழுதியவர் : நர்த்தனி (17-Sep-22, 9:50 pm)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 65

மேலே