யாரை குற்றம் கூறுவது

"வரவு எட்டணா ...செலவு பத்தணா..
அதிகம் ரெண்டணா...கடைசியில் துந்தனா..."
பழைய பாடல் ஒன்று
காதில் விழுந்தது - என்
நிம்மதியை கலைத்தது.
கடன்...
என் கடன் பணி செய்து கிடப்பதே
நாவுக்கரசரின் வாழ்க்கை முறை...
என் பணி கடன் வாங்கி கிடப்பதே
இன்றைய
பாவக்கரசரின் வாழ்க்கையாகிப் போனதே!

பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம்
என்றான் பாரதி.
ஐயகோ... இன்று அவை
வியாபார கூடமாகிவிட்டதே..
கொள்ளைக்கார கூடாரமாகிவிட்டதே.
அவனே
தனி மனிதனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம் என்றானே.
உணவிற்கு ஆதாரமான
கல்வி
தனி மனிதனுக்கு இங்கு
கேள்வி குறியாகிவிட்டதே?
கேலிக்கூத்தாகிவிட்டதே..
என்ன செய்ய ?

கடன்பட்டான் நெஞ்சம்போல்
கலங்கினானே இலங்கை வேந்தன்.
அந்தோ
வாழ்வை தொடங்கும் முன்பே
கலங்கி நிற்கின்றானே
இம்மண்ணின் மைந்தன் - தலைமேல்
இறுக்கும் கடன் தொல்லையால்.
அவன் அறிவு எங்கனம்
விரிவடையும்?...இல்லை
முழுமையடையும்?

களங்கமில்லா...நிர்மலமான
அமைதியான சூழல் வேண்டும்
கல்விகற்க...
கல்விக்காய் கடன் பெற்று
கலங்கிப்போனபின்
களங்கப்பட்டபின்
தொண்டு உள்ளம் எப்படி வளரும்?
தொண்டு செய்ய எப்படி தோன்றும்?
போட்ட முதலுக்கு லாபம் பார்க்கவோ - இல்லை
வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவோதானே
மனது கணக்கு போடும்.
கல்வி
வியாபாரமாகுதல் வலுக்கட்டாயமாய்
நிர்பந்திக்க பட்டிருக்கிறதே
இதில்
யாரை குற்றம் கூறுவது?
மனிதாபிமானம் தொலைத்துவிட்ட
மனிதனுக்கு மனிதன்தானே பகை.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (20-Oct-22, 6:44 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 137

மேலே