இரவும் பகலும் – எழுசீர் விருத்தம்
எழுசீர் விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
இரவினில் தோன்றும் நிலவதன் நெஞ்சில்
என்றுமே தோன்றிடும் ஏக்கம்;
அருணனின் ஒளியால் பெற்றிடும் தட்பம்
அதற்கிலை என்றெண்ணி வருத்தம்!
வருத்தமும் மனத்தில் மிகுந்திடப் பெருகி
வழிந்திடும் பொறாமையால் வாட்டம்;
அரிதென அறிந்தும் பகலினில் அங்கே
ஆசையாய் நின்றிடத் துடிக்கும்! 1
காலையில் உதிக்கும் கதிரவன் தானும்
..கவலையில் கருத்தினை இழந்து
சோலையில் இரவில் சுழற்சியாய் உதித்தால்
..சொர்க்கமே அதுவென எண்ணும்!
ஆலைவாய்க் கரும்பாய்த் துரும்பென இளைத்தே
..அலைபாயும் நெஞ்சுடன் அரற்றி
மேலது நோக்கி மேற்கினில் விரைந்து
..மிடுக்குடன் மேகத்தில் மறையும்! 2
- வ.க.கன்னியப்பன்