நிரந்தர மனமகிழ்ச்சி

நிரந்தர மனமகிழ்ச்சி

அந்த மருத்துவமனை என்றும் போல் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. முன் அறையில்
பலவித மக்கள் தங்கள் உறவுகளோடு வந்து அவரவர் உடல்நிலையை பற்றி விவாதித்து
கொண்டிருந்தனர்.செவிலி அவ்வப்பொழுது பேசியில் அமைதியை காக்க வேண்டிக்கொண்டிருந்தாள்.
சிறிது நேரம் நிசப்தம் கடைபிடிக்கப்பட்டு மீண்டும் பேச்சுகள் தொடங்கும்.
இது அன்றாடம் நடப்பது தான் என செவிலியரும் தங்கள் வேலையை கவனிப்பார்கள்.சத்தம்
அதிகமாகும் வேளை மருத்துவர்கள் சிலர் அறைக்கு வந்து எட்டிப் பார்க்க, வாய்ப்பேச்சுகள் குறையும்.
அந்த மருத்துவமனை மிக பிரபலமான ஒன்றானதால் சொன்ன நேரத்தில் நோயாளிகளை பார்க்க முடியாமல் சிறிது தாமதம் ஏற்படுவதால் வந்த சிறு தொல்லை தான் இது.
உறவினர்கள் நோயாளியுடன் மருத்துவர்களிடம் செல்வதால் நிறைய கேள்விகளுக்கு மருத்துவர்களின் பதில் கூற வேண்டிய நிர்பந்தம் வேறு,இதுவும் தவிர்க்க முடியாத ஒரு இடர் தான்.
அந்த அறையில் ஒரு அழகான நடுத்தர வயதுள்ள ஒரு மாது. அமர்ந்திருந்தாள். அவளுடைய விலை மதிப்புள்ள உடையை பார்த்தால், நாம் உடனே அவள் ஒரு பணக்காரக் குடும்பத்தை சேர்ந்தவள் என கூறிவிடலாம். அவள் யாரிடமும் பேசாமல் தன்னைச் சுற்றி உள்ளவர்களையும், அங்கு நடப்பவைகளையும் பார்த்துக் கொண்டு தன் கையில் வைத்திருந்த ஒரு கடிதத்தையும் தன்னிடம் உள்ள டோக்கன் நம்பரையும் அடிக்கடி கண்ணால் நோட்டமிட்ட படி அமர்ந்திருந்தாள். அவள் அங்கு வந்துள்ளது அந்த மருத்துவமனையில் மனநல மருத்துவரை கண்டு அவரிடம் கவுன்சிலிங் செய்வதற்குத்தான். மருத்துவரின் செவிலி வந்து அவளை கூப்பிட அவள் செவிலியை பின் தொடர்ந்தாள். உள்ளே சென்றதும் அங்கு சில சோதனைகளைச் செய்த பின் அவளை செவிலி மருத்துவரின் அறைக்கு அழைத்து சென்றார்.மருத்துவரின் அனுபவம் அவரது வெள்ளை முடியில் இருந்தே வெளிப்பட்டது,அவருடைய கனிவான குரலில் அவளை உட்கார சொல்லி தன் தங்க நிற கண்ணாடியைச் சரி செய்து கொண்டு அவளை நோக்கினார். அவளுக்கு மருத்துவரைப் பார்த்தவுடன் மனதில் இவர் நம் பிரச்சனையை நிச்சியம் தீர்த்து விடுவார் என்ற நம்பிக்கை வந்தது. நோயாளிகளுக்கு மருத்துவரைப் பார்த்ததும் இந்த நம்பிக்கை மிக முக்கியம்.
தன்னுடைய உடையைச் சரி செய்து கொண்டு அவள் உட்கார்ந்தவிதம் அவளது பணக்காரத்
தோரணையைக் காட்டியது.
மருத்துவர் தனக்குள்ளேயே அவளை எடை போட்டு என்ன என்று வினவ,அவள் மடை திரண்ட
வெள்ளம் போல் பேச ஆரம்பித்தாள். அவளை பேச விட்டு அவளையே பார்த்து கொண்டிருந்தார் அந்த அனுபவமுள்ள மருத்துவர். அவளும் ஒரு பதினைந்து நிமிடங்கள் பேசிய பின் நிறுத்தி விட்டு அவரிடம் என் வாழ்வு ஒரே சூனியமாக இருக்கு..,எனக்கு நிறைய பொருள்களும்,குறையாத செல்வமும் இருந்தும் ஒரு வெறுமையை உணர்கிறேன். அர்த்தமே இல்லாமல் , இலக்கே இல்லாமல் வாழ்க்கை செல்கிறது, என்னிடம் எல்லாம் இருக்கிறது. என் மனம் வேண்டுவது நிம்மதியும் மகிழ்ச்சியும் மட்டுமே என் மன மகிழ்ச்சிக்கு ஒரு வழி கூற வேண்டும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்றாள்.

மருத்துவர் சிறிது நேரம் அவள் கூறியதை மனதில் வாங்கிக்கொண்டு. அவளிடம் அங்கிருந்த இரும்பு கட்டிலில் படுக்கச் சொல்லி கண்களை மூடுமாறு கூறினார்.அவளது மூச்சை நன்றாக உள்ளிழுத்து வெளியே விடுமாறு கூறி விளக்குகளை மங்கலாகச் செய்த பின், அங்கு அவரிடம் வேலை செய்யும் பெண்ணை அழைத்தார்.
அதன் பின் மருத்துவர் அங்கு கட்டிலில் படுத்திருந்த அந்தப் பெண்ணை கண்ணை மெல்ல திறக்க சொல்லிவிட்டு நான் இப்பொழுது என்னிடம் வேலை செய்யும் இந்தப் பெண்ணை மனதில் எப்படி *மகிழ்ச்சியை* வரவழைப்பது என்று சொல்லச் சொல்கிறேன்.. நீங்கள் குறுக்கே எதுவும் பேசாமல் கேளுங்கள் என்றார்.
அவரது பணிப் பெண்ணும் அவளிடம் இருந்த சிறுசிறு பாட்டில்கள் அடுக்கிய பீங்கான் தட்டை அறையின் ஓரமாக உள்ள மேஜையில் வைத்து விட்டு கைகளை சுத்தம் செய்து கொண்டு ஒரு நாற்காலியில் அமர்ந்து சொல்லத் தொடங்கினாள்.
என் கணவர் நடை பாதையில் கடை வைத்து பொருள்களை விற்பனை செய்து கொண்டிருந்த பொழுது நேருக்கு நேர் மோதும் விபத்தை தவிர்க்க வேண்டி வேகமாக வந்த ஒரு லாரி அந்த நடைபாதையில் உள்ள கடைகளின் மீது இடித்து சென்றதால் அதன் சக்கரங்களில் அடிபட்டு உயிர்நீத்தார். அவர் இறந்த துக்கம் தீரும் முன்னே, ஒரு மாதத்திற்குள் என் மகன் இரயில் விபத்தில் இறந்து போனான். எனக்குக் கூட இருக்க யாரும் இல்லை எந்த சேமிப்பும் இல்லை. என்னால் சாப்பிட முடியவில்லை உறங்க இயலவில்லை. .யாரிடமும் பேசவோ சிரிக்கவோ முடியவில்லை . என் வாழ்க்கையை நான் முடித்துக்கொள்ளலாம் என நினைத்தேன்.

இப்படி இருக்கையில் ஒரு நாள் நான் எனது வேலையை முடிந்து வரும் பொழுது ஒரு நாய் குட்டி என்னைப் பின் தொடர்ந்து வந்தது வெளியே மழை பெய்து கொண்டு, சிலு சிலுவென இருந்தது ,
எனக்கு அந்த நாய் குட்டியைப் பார்க்க பாவமாக இருந்தது.அதை நான் என் வீட்டின் உள்ளே,
என்னைத் தொடர்ந்து வர அனுமதித்தேன். அது மழையில் நனைந்ததால் சிறிது நடுங்கிக்
கொண்டிருந்தது. எனக்கு அதை தொட பயம், நான் அதற்கு குடிக்கக் கொஞ்சம் பால் ஒரு தட்டில் கொடுத்தேன். அது அத்தனை பாலையும் குடித்து விட்டு, அதன் உடம்பை என் கால் மீது படும் படி வைத்து என் விரல்களை நக்கியது. நான் காலை அசைத்த பொழுது அது மெல்ல என்னைப் பார்த்தது,
அதை நான் வெளியே விரட்டிடுவேனோ என்ற பயமும் அதன் கண்களில் ஒரு எதிர்பார்ப்பு தெரிந்தது.
எனக்கு அதன் மேல் ஒரு பற்று ஏற்பட்டது,அந்த நாய் என் கால்களைச் சுற்றி வந்தது.கடந்து போன மாதங்களில் நான் முதல் முறையாக புன்னகைத்தேன்!!!

நான் அப்பொழுது என்னையே கேள்வி கேட்டேன். ஒரு சிறு நாய் குட்டிக்கு நான் செய்த ஒரு செயல் என்னை மகிழ்விக்கிறது யெனில், நான் ஏன் இதை பலருக்குச் செய்து என் மன நிலையை மாற்றிக்கொள்ளக்கூடாது என யோசித்தேன்.

அடுத்த நாள் நோய்வாய்ப்பட்டிருந்த என் அடுத்த வீட்டு நபருக்கு உண்பதற்கு கஞ்சி கொடுத்தேன்.
அவர் என்னை வாழ்த்தியதோடல்லாமல் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு ஒரு அளவே இல்லை.அவர் மகிழ்ந்ததில் நானும் மகிழ்ந்தேன்.என் மனம் லேசானது.

இப்படி ஒவ்வொரு நாளும் நான் பலருக்கு உதவ அவர்கள் தங்கள் மகிழ்வினால் என்னையும்
மகிழவைத்தனர். நானும் பெரு மகிழ்வுற்றேன்.
இன்று என்னை விட நிம்மதியாக உறங்கவும், உணவை ரசித்து உண்ணவும் யாரேனும்
இருக்கிறார்களா என்பதே சந்தேகம்.
மகிழ்ச்சி என்பது , அதை மற்றவர்களுக்குக் கொடுப்பதில் தான் இருக்கிறது என்பதை நான் கண்டு கொண்டேன். அதிலிருந்து நான் மற்றவர்களுடைய தேவைகளை அறிந்து கொண்டு என்னால் என்ன செய்யமுடியுமோ அதை செய்ய தொடங்கினேன். அவர்கள் மகிழ்ச்சியில் என் மனமகிழ்ச்சியை அதிகரித்தேன்.
இங்கு இந்த மருத்துவமனையில் என்னால் முடிந்ததைச் செய்து வருபவர்களை சிறிதளவிற்கு ஆசுவாசபடுத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளேன் என்று அவள் பேச்சை நிறுத்தினாள்.
இந்தச் சொற்களை கேட்ட அந்த பணக்கார பெண் விசும்பி பிறகு சிறிது பெரிதாகவே அழுதாள்.
அவளிடம் உள்ள பணம் என்ற காகிதம் கொண்டு வாங்கக்கூடிய பொருள்கள் பல இருந்தது.
ஆனால் பணத்தால் வாங்க முடியாத ஒரு விஷயம் மகிழ்ச்சி என்பதை நன்றாக உணர்ந்தாள். இந்த உண்மை அவளுக்கு ஒரு புதிய பாடம் கற்ற மாணவனின் மன நிலையை அளித்தது.
மருத்துவர் அவரது இயல்பான புன்னகையோடு கட்டிலின் அருகில் வந்ததும் அவள் அவரிடம் தன் நன்றியை தெரிவித்த பொழுது அவளது ஆணவமும் தோரணையும் அகம்பாவமும் அவளிடம் இல்லை.
வாழ்க்கையின் அழகு என்பது நீ எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாய் என்பதில் இல்லை...
உன்னால் அடுத்தவர் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதிலேயே இருக்கிறது..
மகிழ்ச்சி என்பது போய் சேரும் இடம் அல்ல அது ஒரு பயணம்.
மகிழ்ச்சி என்பது எதிர்காலம் இல்லை அது நிகழ்காலம்.. மகிழ்ச்சி என்பது ஏற்றுக்கொள்வது அல்ல அது ஒரு முடிவற்ற மனோநிலை .
நீ என்ன வைத்திருக்கிறாய் என்பதில் இல்லை மகிழ்ச்சி நீ யார் என்பதில் தான் இருக்கிறது மகிழ்ச்சி !
மகிழ வைத்து மகிழுங்கள் அது நிரந்தரமானது; உலகமும் இறைவனும் உன்னை கண்டு நிச்சியம் மகிழ்வார்கள் !!!

எழுதியவர் : கே என் ராம் (27-Nov-22, 11:31 pm)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 133

மேலே