180 எல்லோரும் உழைத்து வாழ்வதே இயல்பு - உயர்ந்தோர் தாழ்ந்தோரைத் தாங்கல் 7
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
கொற்றவர் நரர்க்கு ழைத்துக்
..கூலியா மிறையைக் கொள்வர்
மற்றவ ரெவருந் தம்மெய்
..வருந்தவே யுழைப்பர் செல்வம்
பெற்றவர் களுமு ழைப்பர்
..பின்னவர்க் குழைப்பர் சேடர்
உற்றவித் தன்மை யுன்னி
..னுழையரார் தலைவ ராரே. 7
- உயர்ந்தோர் தாழ்ந்தோரைத் தாங்கல், நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”மன்னர் குடிகளாகிய மக்களுக்குக் காவலாகிய உழைப்பினை உழைத்து அதற்குக் கூலியாகிய வரியை வாங்குவர். மற்ற எல்லோரும் தம் உடல் வருந்த உழைப்பர். செல்வர்களும் உழைப்பர். வேலையாட்கள் செல்வர்களுக்குப் பின் நின்று வேலை செய்வர்.
ஏற்பட்ட இந்த முறையை நினைத்து இவர்களில் வேலை செய்வோர் யார்? தலைவர் யார்? என்று சொல்லுங்கள்” என்று கேட்டு எல்லோரும் உழைத்து வாழ்வதே சிறப்பு என்கிறார் இப்பாடலாசிரியர்.
கொற்றவர் - மன்னர். இறை - வரி.
சேடர் - ஏவல் செய்வோர்.