காவிரிக் கரையோரம்...

செந்தமிழ் மங்கையிரு கைந்நீட்டிச் சேர்ந்துலகர்
உந்துபுனல் நாட்டமிழ்தை உண்ணற்குத் - தந்ததுபோல்
தன்னிரு கைந்நீட்டித் தண்பொழிலோர் வாழ்வருள்
பொன்னிநடை கண்டரன் பொழில்.

ஒன்றும் விழையா துயர்கரும் யோகியர்போல்
என்றும் சிறையணையை எண்ணாமல் - ஒன்றியபூங்
காவிரியச் சென்று கடலுரிமை யில்கலக்கும்
காவிரியைக் கண்டான் கனிந்து.

வேண்டிய கால்வாயுள் வேறாய்ப் பிரிந்திடினும்
ஈண்டிய கால்வாயுள் ஏகிடினும் - யாண்டுமே
பூவிரிய ஒன்றாய்ப் பொலியும் தமிழ்மொழியாம்
காவிரியைக் கண்டான் கவி.

உண்ணின் றெழுந்த உணர்வில் பொருந்தியுரு
கண்ணும் முதற்பொருளாம் நல்வெள்ளம் - எண்ணிய
காலாம் துணைப்பொருள்சேர் காவிரியாம் காப்பியத்தின்
மேலாம் துறைகுளித்தான் மேல்.

காவேரி அன்பருளம் கொள்ளிடம் கற்றறிந்தோர்
நாவேறி வீற்றிருக்கும் நல்லாங்கில் - மாவேறும்
மாமுகில் பள்ளிகொள்ளும் மாண்பைக் கருத்திருத்திப்
பாமுகில் சென்றான் பரிந்து.

#கரைபுரளும்_கவித்துளி

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (16-Dec-22, 11:18 am)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 42

மேலே