நான் கவிஞன் அல்லன்

நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்பொழுதுதான் இந்த தளத்தின் பக்கம் வந்தேன், பல்லாண்டு காலம் இந்த தளத்தில் இணைந்திருப்பதை மகிழ்ச்சியாக கருதுகிறேன், இந்த தளம் கவி அல்லது கருத்து எழுத கற்றுக்கொள்ளும் பயிற்சி பட்டறையாகவே நான் பயன்படுத்தி வருகிறேன், அந்த வகையிலே இந்த தளம் பல எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் உருவாக்கி இருப்பதை நான் என் அனுவபத்தால் உணர்ந்து இருக்கிறேன், அதற்கு கவிதை மரபறிந்த பெரியாயோர்களின் வழிகாட்டுதலே மறுக்கமுடியாத முக்கிய காரணமாகும்.

ஒரு கவிதைக்கு யாப்பு, அணி, சொல், பொருள், போன்ற இலக்கண கவிதை மரபு மிக அவசியம், ஆனால் அவைகளை எல்லாம் நான் கற்றவன் அல்ல, என் சிறு கல்வியையும், சிற்றறிவையும் நான் கொஞ்சம் கொஞ்சமாக விரிவுபடுத்தும் முயற்சியிலேதான் தொடர்ந்து இயங்கி கொண்டு இருக்கிறேன், எனது அற்ப ஆசை என்னால் எழுதுவதை நிறுத்த முடியவில்லை, ஏனென்றால், வசன நடையிலோ, உரைநடையிலோ அல்லது வளைவு நெளிவிலோ நான் எழுதுகிற எழுத்துக்கள் சதாரான எளியவருக்கு ஏதோ ஒரு கருத்தை எளிதில் புரியவைக்கும் என்ற நம்பிக்கை மட்டுமேதான் என்னை எழுத தூண்டிக்கொண்டு இருக்கிறது, மற்றபடி கவிதை எழுதி பெரிதாக சாதிக்க விரும்பியதில்லை.

மரபும், இலக்கணமும், வெறும் கவிதைகளாக (செய்யுள்களாக) மட்டுமே இருக்கின்றன என்பதால்தான் முதன் முதலில் மரபை உடைத்து புது கவிதைகளை புனைந்தான் பாரதி, அதோடில்லாமல் கடவுளையும் அரசர்களையும் மட்டுமே பாடிவந்த கவிதை மரபை எளிய மக்களின்பக்கம் திருப்பினான் முண்டாசுக்காரன். அதன் பிறகான காலங்களில் புதுக் கவிதைகளும் வசனக் கவிதைகளும் இந்த மண்ணிலே பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தியதை நாம் மறுக்க இயலாது, மரபு கவிதை வேர் போன்றது, வேர் இல்லாமல் எதுவுமில்லை.

இன்று மரபு சொல்லிற்கு பலருக்கும் பொருள் விளங்கவில்லை, அதனால் மரபு கவிதைகளை கண்டாலே ஒதுங்கிச் செல்கிற படித்தவர் கூட்டம் இருக்கிறது, தொல்காப்பியம் புறப்பொருள் வெண்பாமாலை போன்ற பல நூல்களை படித்தால் எதுவுமே புரிந்துகொள்ள முடிவதில்லை, அதனாலயே அவைகளில் உள்ள உன்னத கருத்துக்களை எல்லோரும் நுகர முடியாத நிலை நீடிக்கிறது, அவைகளை எளியத்தமிழில் எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்ட வேண்டும்.

மரபு காலத்தில் மொழியை பயன்படுத்திய விதம் வேறு, தற்பொழுது மொழியை பயன்படுத்துகிற விதம் வேறு, வள்ளுவர் இப்பொழுது இருந்து இருந்தால்கூட இன்றுள்ள மக்களுக்கு புரியும்படி நடைமுறையிலுள்ள எளியத் தமிழில்தான் எழுதி இருப்பார்,
கவிதை மரபு இருக்கிறது, ஆனால்! மரபு காலம் இன்று இல்லை, அன்று பயன்பாட்டு வழக்காக இருந்த மொழி, பல்வேறு பரிணாமங்களை கடந்து இன்று நடைமுறை வழக்கில் முற்றிலும் முதிர்ச்சி அடைந்து வேறு மாதிரி இருக்கிறது, மனிதர்களும் மாறி இருக்கிறார்கள், மரபை படித்து புரிந்து கொள்ளவோ, மரபை கற்றுக்கொள்ளவோ பலரும் தயக்கம் காட்டுகிறார்கள், இந்த நிலை மாற வேண்டும் என்பதுதான் எனது ஆசை, ஏனெனில், முறையான கவிதை மரபை அறிந்து கொள்வது என்பது ஒரு கவிஞனின் கடமை, அந்த வகையில் கவிதை மரபை கற்றுக்கொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் எனக்குள்ளும் மண்டி கிடக்கிறது, ஆனாலும் எழுதுவதை நிறுத்திவிட முடியவில்லை, ஒவ்வொரு தனிமனித சாமானியனும் சமூக ஊடகங்களில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து பகிர்ந்து கொள்வது என்பது அரசியல் அமைப்பு வழங்கும் ஐனநாயக உரிமை என்ற அடிப்படையில் அடுத்தவரை புண்படுத்தாத வகையில் எனக்கு தெரிந்ததை எழுதிக்கொண்டு இருக்கிறேன், வாழ்க்கையில் ஒரே ஒரு கவிதையாவது எழுதிவிட வேண்டும் என்றுதான் முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன், அதனால்தான் என்னை நான் கவிஞனென்று எங்கேயும் கூறிகொண்டதில்லை.

கற்றோர்களின் கருத்துக்கள்தான் என்னை செம்மைபடுத்திகொள்ள பயன்படுகின்றன என்பதை இங்கு நான் பதிவுசெய்யவதை கடமையாக கருதுகிறேன்.

--- நிலாசூரியன் தச்சூர்.

எழுதியவர் : நிலாசூரியன் தச்சூர் (28-Dec-22, 9:11 pm)
சேர்த்தது : நிலாசூரியன்
பார்வை : 88

மேலே