மாறும் நாள்
தோழா!
இலக்கை நோக்கி ஓடிய ஓட்டம்
எட்டும் வேளை கால் இடறியதா?
வேண்டாம் கவலை வேகம் கூட்டுவோம்
கவனமாய் இனியும் காலடியெடுத்து வைப்போம்!
தேர்விற்காகப் படித்த தொடரோட்டம்
தேர்வு நாளன்று தீராத காய்ச்சலா…?
துவண்டு நீயும் சும்மா இருந்து விடாதே:
உடல்நலம் இனிதே முன்பே காப்போம்!
விலைக்கு வாங்கி விளை நிலத்தில் போட்ட
விதைகள் எல்லாம் முளைக்கவில்லையா..?
சோர்ந்து நீயும் சோம்பி இருந்து விடாதே:
அடுத்த போகம் நிச்சயம்நம்கையில்...!
இல்லறம் செழிக்க அரும்பாடு பட்டு
இல்லாத வேலை எல்லாம் செய்தும் நிதி போதவில்லையா..?
வருத்தம் வேண்டாம் வாங்கும் கடனைக்
குறைத்து எளிய வாழ்வு வாழ்ந்திடுவோம்!
கட்டிய சொல்மாலையில் கட்டுக்கோப்பு குலைந்து
கவிதை கண்ணா பின்னா ஆகிவிட்டதா…?
கவலை வேண்டாம் சற்று நேரம் பொறுத்து
மீண்டும் முயற்சிக்க முழுமதியாய் கவிதை வரும்!
மாற்றம் ஒன்றே மாறாதது;
மனிதனின் செயற் பிழைகளுக்கும்
இன்னொரு நாள் மாற்றமாய் வரும்!