கடைசி வரை

கடைசி வரை

எதேச்சையாகத்தான் திரும்பி பார்த்தான் சங்கரன், சற்று தொலைவில் தன்னையே பார்த்தபடி அழுக்கான உடையுடன், கொஞ்சம் முகம் வித்தியாசமாய் இருந்தது.
யாரிவன்? மனம் கேள்வியை கேட்டாலும், சட்டென அதை உதறி விட்டு மீண்டும் அவனை சுற்றி நின்றவர்களுடன் கை குலுக்கி பேச ஆரம்பித்தான். மிகப்பெரிய அறிவாளியாக மதிக்கப்படுகிறவன், பெரும் செல்வந்தன், அவனுடன் பேச சுற்றி நின்றவர்கள் நான் நீ என்று இடித்து தள்ளியபடி இருந்தனர்.
அவனது கம்பெனி ஒன்றின் அதிகாரியின் மகளது திருமணத்துக்கு வந்திருக்கிறான். அதற்கே அந்த அதிகாரி இவனது வருகையை பெரிய “விளம்பர பேனராக” செய்து போட்டோவுடன் மண்டபத்தின் வாசலில் வைத்திருந்தார்.
இது போதாதா? அது மட்டுமில்லாமல் அந்த தொகுதி எம்.எல்.ஏ, எம்பி எல்லோரும் இவனுடன் ஒட்டியபடி வர, அங்கு அரசியலும், பணமும் சேர்ந்து அந்த இடத்தை பெரும் பரபரப்பாக்கியபடி இருந்தது.
ஒரு வழியாக சுற்றியுள்ளவர்களை சமாளித்து மண்டபத்துக்குள் நுழைய போனவன்,எதோ ஒரு உந்துதலில் மண்டபத்தின் வாசலை பார்த்தான். அதே அழுக்கான மனிதன் அந்த போஸ்டரை உற்று பார்த்தபடி நின்று கொண்டிருந்தான். மீண்டும் அவன் மன நிலை யார் இவன்? எதற்காக என்னை இப்படி உற்று பார்க்க வேண்டும்?
யாரோ தன் தோளை தொட, சட்டென நிலைக்கு வந்தவன் கல்யாண கூட்டத்துக்குள் கலந்தான். ஒரு மணி நேரம் இருந்தவன் எல்லாம் முடிந்து வெளியே வந்து காருக்கு சென்றான். அவனை வழி அனுப்ப அதிகாரிகள் இரண்டு மூன்று பேர் உடன் வந்து அவனை ஏற்றி அனுப்பி வைத்தனர்.
கார் மண்டபத்தின் வாசல் வளைவில் திரும்பும் போது கவனித்தான், அதே ஆள் மண்டபத்தின் வாசலில் நின்றபடி இவனது கார் தன்னை கடப்பதை உற்று பார்த்தபடி..!
மனதுக்குள் பழைய நினைவுகளாய் ஓடி கொண்டிருந்தது, யாராய் இருக்கும்? இந்த நாற்பது வருட வாழ்க்கைக்குள் எத்தனையோ நபர்கள் வந்து போய்க்கொண்டிருக்கிறார்
கள். அதில் இவன் யாராய் இருக்கும்? அப்படி அறிமுகமானவனாய் இருந்தாலும் அவனை நான் எப்படி அணுகமுடியும்? இன்றைய சூழ்நிலையில் தான் இப்படி இருக்கும் போது அவனை அறிமுகப்படுத்தி கொள்ள முடியுமா?
சே..! விட்டு தள்ளுவோம், எவனோ ஒருவன் தன்னை பார்த்துக்கொண்டிருக்கிறான் என்றதும் ஏன் நம் மனதை போட்டு குழப்பிக்கொள்ள வேண்டும். கார் நிற்கவும் மீண்டும் தன்னிலை பெற்றான். கார் அலுவலக வாசலில் வந்து நிற்பதை அறிந்து கொண்டவன் தனக்குள் சிரித்தபடி, கார் டிரைவர் கதவை திறக்க இறங்கினான்.
இவனது சிரிப்பு தன்னை பாராட்டுவதற்க்காக என்று நினைத்து டிரைவர் சந்தோசப்பட்டுக் கொண்டான். இருக்கையில் அமர்ந்து ஐந்து நிமிடத்துக்குள் போன், வீட்டிலிருந்து, வேலையாள் பேசுவதாக செகரட்டரி போனை கையில் கொடுத்தாள்.
ஐயா அப்பாவுக்கு ரொம்ப முடியலைங்கய்யா. சட்டென மனதுக்குள் ஒரு ஜில்லென்ற பய உணர்வு. முதலாளி அம்மா எங்கே? அவங்க அப்பவே கிளம்பி வெளியே போயிட்டாங்க. சின்னம்மாவும் சின்ன அய்யாவும் அப்பவே வெளியே கிளம்பி போயிட்டாங்க.
சட்டென இனம் புரியாத எரிச்சல், வீட்டில் யாருமே இல்லை, ஆனால் இருபது வேலைக்காரர்கள். சரி போனை வையுங்க, நான் வர்றேன்.
அப்பாவின் காரியத்திற்கு ஏகப்பட்ட கூட்டம், வருபவர்கள் இவனையும், அருகில் நின்றிருந்த மனைவியையும், கை எடுத்து கும்பிட்டு விட்டு நகர்ந்து கொண்டிருந்தார்கள்.
விரக்தியான மன நிலையில் நின்றபடி கை எடுத்து கும்பிட்டு கொண்டிருந்தவன் வாசலை பார்க்க அதே ஆள் நின்று கொண்டிருந்தான்.
விதம் விதமான கார்கள், வெள்ளை வேளேர் என வேட்டி சட்டை, கண்ணை பறிக்கும் சேலை, நகைகளுடன் பெண்கள் இப்படியாக, இவனது அப்பாவின் இறப்பிற்கு வந்து கொண்டிருக்க அவனும் அந்த இடத்துக்கே ஒரு அவலட்சண காட்சியாய் மெல்ல இவர்களை நெருங்கி கொண்டிருந்தான்.
அவனது அழுக்கான தோற்றத்தையும் உடையையும் கண்ட இவன் மனைவி சட்டென முகம் சுழித்து அவசரமான காரியம் இருப்பது போல் உள்ளே போய் விட்டாள்.
இவனும் கூட அவனை சுத்தமாக விரும்பவில்லை. யாரிவன்? இத்தனை மனிதர்க்கு இடையில் தன் தந்தையின் உடலை பார்க்க வந்தால் இவனை தொடர்பு படுத்தி எல்லார் வாயும் அசை போட்டு கொண்டிருக்கும்.
எதிரில் நின்றிருந்த வேலைக்காரனிடம் கண்ணை காட்டினான். அதை புரிந்து கொண்ட அந்த வேலையாள் வேகமாக அவனிடம் ஓடியவன், ஏதோ பேசினான். அவனும் ஏதோ சொல்ல, இவன் தலையாட்டினான். இங்கிருந்தே என்ன நடக்கிறது என்று பார்த்த்படியே இருந்தான் இவன்.
இருவரும் ஐந்து நிமிடம் என்ன பேசிக்கொண்டார்களோ தெரியவில்லை, அந்த மனிதன் அப்படியே உடல் தளர்ந்து திரும்பி போவதை பார்த்தபடியே நின்றான். மனதுக்குள் ஒரு வலி, இறந்து போன ஒரு ஆத்மாவை பார்க்க வருபவனை வெறும் பகட்டுக்கு மயங்கி போய் பார்க்க விடாமல் செய்து விட்டோமே? என்னும் கழி விரக்கம் மனதுக்குள் வந்தது.
இவன் அவரின் மாணவனாய் இருக்காலாம். அப்பா கிராமத்து பள்ளியில் ஆசிரியராய் இருந்து ஓய்வு பெற்றவர். இவன் பதினாறு வயதில் படிப்புக்காக வெளியில் வந்தவன் தன் நினைவுகளில் அந்த கிராமத்தையே தொலைத்து விட்டு, இன்று நகரில் பெரிய புள்ளியாகி இருக்கிறான்.
அப்பா கூட அம்மா இறந்த பின்பும் இவனுடன் வர மறுத்து நீண்ட வருடங்கள் ஊரிலேயேதா இருந்தார். இங்கு வந்து ஐந்து வருடங்கள் இருக்குமா? அதற்கே இவன் மனைவியிடமும், குழந்தைகளிடமும் அவ்வப்போது பேச்சு வாங்கி கொண்டிருந்தான். நல்ல காலம் அவர் போய் விட்டார்.
கிட்டத்தட்ட ஒரு மாதம் ஓடியிருந்தது. அன்று அப்பா தங்கியிருந்த அறையை வேலைக்காரர்களை வைத்து சுத்தபடுத்தி வைக்க சொல்லி இருந்தாள் மனைவி. இவன் சரி அப்பாவின் கடைசி காலத்தில் அவரது அறையை எப்படி வைத்திருந்திருக்கிறார் என்று பார்க்க உள்ளே நுழைந்தான். இவனை கண்டதும் வேலைக்காரர்கள் தாங்கள் கூட்டி பெருக்கி கொண்டிருந்ததை நிறுத்தி சற்று ஒதுங்கி நின்றனர்.
கட்டிலுக்கு கீழே வைத்திருந்த அவரது அழுக்கு மூட்டையை பார்த்தவன் சட்டென முகம் மாறினான். வேலைக்காரர்களை பார்க்க ஒருவன் முன் வந்து ஐயா பெரிய ஐயா வரும்போது இதைய கொண்டு வந்தாருங்க. அம்மா அதை வெளியே கொண்டு போட சொன்னதுக்கு அவரு முடியவே முடியாதுன்னு கட்டிலுக்கு கீழேயே வச்சிருந்தாருங்க.
அதை இவன் தொட அருவருப்பு பட்டு அவனையே எடுத்து அதற்குள் இருக்கும் எல்லாவற்றையும் எடுத்து வெளியே வைக்க சொன்னான்.
இரண்டு சட்டை கொஞ்சம் நைந்து போயிருந்தது, வேட்டியும் அழுக்காக இருந்தது, போட்டோ நான்கைந்து இருந்தது. அதை கையில் வாங்கி பார்த்தான்.சிறு வயதில் அப்பாவும், அம்மாவும். அம்மா சிறு பெண்ணாய் தலையில் ஒரு பூ வைத்து பெருமையாய் பார்த்தபடி, அதன் பின் கையில் குழந்தையுடன் இருவரும். அந்த குழந்தை தானாகத்தான் இருக்கவேண்டும், அவனுக்கே இப்பொழுது வெட்கமாக இருந்தது. அப்பாவின் கையில் இவன் குழந்தையாய் வெறும் கோவணத்துடன்..!
அடுத்து நான்கைந்து போட்டோக்களில் அப்பா குழந்தைகளுடன். அதில் இரண்டு மூன்றில் வட்டம் போடப்பட்டிருந்தது. இவர்தான் போட்டிருக்க வேண்டும். அதில் ஒரு வட்டம் தன்னை போலவே இருந்ததை பார்த்தவன் தான் இவர் ஆசிரியராய் இருந்த பள்ளியிலேயே படித்திருக்க வேண்டும், என்று நினைத்தான்.
அடுத்து சிறுவனாய் இவனும் நான்கைந்து நண்பர்களுடன்..! இது எப்பொழுது எடுத்திருக்க வேண்டும்? யோசித்தான் பத்தாவது படிக்கும்போது எடுத்திருக்க வேண்டும்.
எல்லோரும் ஒன்றாய் தோளில் கை போட்டபடி..உலகையே நட்பால் வென்று விட்டதை போல பார்த்துக்கொண்டு..
ஒவ்வொன்றாய் பார்த்தவனுக்கு அப்பாவின் குணம் நன்றாக புரிந்தது. எத்தனை வருடங்கள் கழிந்தாலும் பழையதை மறக்காமல் அவர் பத்திரப்படுத்தி வைத்திருந்த பாங்கு..பார்க்க பார்க்க.., சட்டென அவனுக்குள் ஒரு மின்னல்., இப்படித்தானே அந்த அழுக்கான மனிதனும் தன்னுடைய குடும்பத்தில் ஏற்பட்டிருந்த நட்போ, உறவோ, மனதுக்குள் பத்திரமாக வைத்திருந்து அவரை பார்க்க வந்திருப்பான்.
ஆனால் நான்..! வெறும் பகட்டு மனிதர்களுக்காக அந்த மனிதனை பார்க்க விடாமல் திருப்பி அனுப்பிய கொடுமை.. மனம் கலங்கி போய் அன்று அவனை திருப்பி அனுப்பிய வேலையாளை கூப்பிட்டான். அன்று அவன் என்ன சொன்னான்?
ஐயா நம்ம பெரிய ஐயாகிட்ட படிச்ச பையனாம். அவனும் நீங்களும் சின்ன வயசுல இருந்து ஒண்ணா விளையாண்டுகிட்டிருப்பீங்களாம். ஆத்து மணல்ல குச்சி ஒழிச்சு விளையாடுவீங்களாம், உங்க அப்பா அந்த ஆளுகிட்டத்தான் பத்திரம், என் பையனை உன்னைய நம்பித்தான் ஆத்துக்கும், கிணத்துக்கும் அனுப்பறேன், அப்படீன்னு அடிக்கடி சொல்லிகிட்டிருப்பாராம். நீங்க பெரிய கிளாஸ் போற வரைக்கும் உங்களை பத்திரமா பார்த்துகிட்டிருப்பாராம். நீங்க வெளியூர் போன பின்னாலயும் உங்க அப்பா அம்மாவுக்கு ஊருல இவருதான் துணையா இருந்தாராம். இன்னும் என்னென்னமோ சொன்னாருங்க.
தன் கன்னத்தில் பளார் பளாரென யாரோ அறைந்தது போலிருந்தது இவனுக்கு. என்ன மனிதன் இவன்? தன் தந்தையுடன் ஒன்றாய் இருந்தவன், தன்னை இளமையில் பத்திரமாய் பார்த்துக்கொண்டவன், ஆனால் இவனுக்கு தன்னுடைய அப்பாவை பார்க்க அனுமதி கொடுக்கவில்லை. ஆனால் இவன் அப்பா யாரென்றே தெரியாது, அவரது வாழ்க்கையை பற்றி தெரியாது, வந்து விசாரித்தவர்களெல்லாம் இவனுக்காக, இவனது பணம் செல்வாக்குக்காக வந்தவர்கள்
அப்பாவின் ஆன்மா கண்டிப்பாய் சாந்தி அடைந்திருக்காது என்பது மட்டும் புரிந்தது.
தினமும் காரில் போகும்போதும் வரும் போதும் அழுக்கு மனிதனை தேடிக் கொண்டிருக்கிறான். ஒரு முறை, எப்படியாவது ஒரு முறை இந்த சமூகம் பார்க்க அவனை கட்டி பிடித்து மன்னிப்பு கேட்டு கொள்ள வேண்டும் என்று.
ஆனால் கடைசி வரை அவன் இவன் பார்வைக்கு கிட்டவே இல்லை.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (4-Jan-23, 12:50 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : kadasi varai
பார்வை : 137

மேலே