188 படைப்பெல்லாம் பார்த்தால் பெரிதும் சிறிதுமாம் - தாழ்ந்தோர் உயர்ந்தோர்க்கு அடங்கல் 1

எண்சீர் கழிநெடிலடி ஆசிரியர் விருத்தம்

விரிசு டர்க்கதி ரோன்மதி தாரகை
..விலங்கு பக்கிம ராமலை யாவினும்
பெரிது சின்னதென் றாகிய தன்மைபோற்
..பிழையி லான்வகுத் திட்டவு லாகியல்
திரித லின்றிந டப்பதற் காகவே
..சிறியர் மேலவ ரென்னவிங் காயினார்
உரிய விம்முறை யின்படி தாழ்ந்தவர்
..உயர்ந்த வர்க்குள டங்கலொ ழுக்கமே. 1

- தாழ்ந்தோர் உயர்ந்தோர்க்கு அடங்கல், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”விரிந்த பேரொளியைப் பரப்புகின்ற கதிரவன், சந்திரன், விண்மீன், விலங்குகள், பறவைகள், மரம், மலை என எல்லாவற்றிலும் பெரியது சிறியது ஆகிய தன்மைகள் இயற்கையிலேயே அமைந்திருப்பன போன்று குற்றமற்ற இறைவன் வகுத்த உலகியல் பிழையின்றி நடத்தற் பொருட்டு மக்களுள்ளும் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற முறைமையும் அமைந்துள்ளது.

ஆதலால், இந்த முறைப்படி தாழ்ந்தோர் உயர்ந்தோர்க்கு அடங்கி வாழ்வது ஒழுக்கம்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Jan-23, 6:35 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே