130 தலைவன் பின் தூதாய்த் தலைவியுயிர் சாரும் - கணவன் மனைவியர் இயல்பு 22
கலி விருத்தம்
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ
தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
தினைவினை செயவகல் செல்வ முன்னந்தூது
அனம்வரும் அதினொடும் அடைகி லாயெனின்
மனம்வரும் உயிர்வரும் வராத மெய்விலங்கு
இனமுறு வனமுறும் இனம்வ ருந்தவே. 22
- கணவன் மனைவியர் இயல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”நாள்தோறும் பொருள் ஈட்டுவதற்காக முயற்சி செய்து செல்லும் தலைவ! நீ அவ்வாறு சென்றால் முதலில் அன்னம் தூதாக வரும். அந்த அன்னத்துடன் நீ திரும்பி வரவில்லை என்றால் என் நெஞ்சும் வரும்; அதன்பின் என் உயிரும் வரும்.
அப்படியும் நீ வரவில்லை என்றால் உடன் வர இயலாத உடம்பு விலங்கினங்கள் ஒன்று சேரும் வனமாகிய சுடுகாட்டைச் சேரும். இதனால் நம் உறவினர் வருந்த நேரிடும்” என்று தலைவி, பொருள் ஈட்டுவதற்காகச் செல்லும் தலைவனைப் பார்த்து,விரைவில் நீ திரும்பவில்லை என்றால் என் உயிர் வரும் என்று சொல்வதாக இப்பாடலாசிரியர் கூறுகிறார்.
தினவினை - நாள் முயற்சி. அனம் - அன்னம் (அனம் இடைக்குறை). மெய் - உடம்பு. வனம் - சுடுகாடு. இனம் - உறவினர்.