உழந்தும் உழவே தலை கவிஞர் இரா இரவி

உழந்தும் உழவே தலை !கவிஞர் இரா. இரவி

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை !
திருக்குறள் – குடியியல் - உழவு - 1031

உழவுத் தொழிலே தொழில்களின் அனைத்திலும் தலை
உழவு இல்லையேல் உயிர்கள் உலகில் இல்லை.

கணினி யுகம் என்போரே கணினியை உண்ண முடியுமா?
திறன்பேசி யுகம் என்போரே திறன்பேசியை உண்ண முடியுமா?

அறிவியல் வளர்ச்சி அளவின்றி வளர்ந்தாலும்
அனைவரும் உண்பதற்கு உணவு வேண்டும் அவசியம்

உண்ணாமல் ஒருநாளும் ஒருவராலும் இருக்க முடியாது
உணவு விளைவித்து உதவுவது ஒப்பற்ற உழவு,

எத்தொழில் அழிந்தாலும் உலகம் இருக்கும் நிலைக்கும்
உழவுத்தொழில் அழிந்தால் உலகம் அழியும் உணர்வாய்!

வழக்கொழிந்து வரும் உழவுத்தொழிலை உயிர்ப்பிப்போம்
வயல்வேலை செய்யும் உழவனை வாழ வைப்போம்

தினந்தோறும் உழவன் தற்கொலை வாடிக்கையானது
தவிக்கிறான் உழவன் வாழ்வதற்கு கருணை காட்டுங்கள்

உழவன் கடன் கட்ட முடியாவிட்டால் வங்கியினர்
உடன் சென்று ஏசி பேசி வாங்கி வருகின்றனர்

கட்ட முடியாத ஏழையும் ரோசக்காரனான உழவன்
கட்டையிலிருந்து உயிரை மாய்த்துக் கொள்கிறான்

விளைவித்த நெல்லை விலைக்கு வாங்க நாதியில்லை
வரிசையில் வைத்து காத்து வெந்து நொந்து போகிறான்

விளைவிக்க பட்ட பாடு சொல்லில் அடங்காது
விற்பதற்கு படும் பாடோ அதைவிடக் கொடுமை!

கோடிகைளை கொள்ளையடித்து விட்டு வெளிநாடு ஓடுகின்ற
கோமான்களைப் பிடித்துவந்து தண்டிக்க முடியவில்லை

சில ஆயிரம் தரவேண்டிய ஏழை உழவனையோ
சித்தரவதை செய்து அவமானப்படுத்தி சாகடிக்கின்றனர்!

என்று தணியும் எம் உழவர்களின் தாகம்
அன்று மடியும் உழவர்களின் சோகம்

நிற்க வரி நடக்க வரி என எதற்கும் வரி
நாளும் வரிகள் பல கட்டியே ஓய்ந்து விடுகிறான் உழவன்

விளைவித்த உணவை விற்பதற்கும் வரி என்றானது
வரி என்பது வாட்டி வதைக்கிறது உழவனை

பெட்ரோல், டீசல் விலையோ விண்ணை முட்டியது
பாவம் உழவன் வாங்க முடியாமல் வாழ்கின்றான்

கோடீஸ்வரர்களுக்கு கோடிகளை தள்ளுபடி செய்கின்றனர்
கோடித்துணி இல்லாதவனை கொன்று வதைக்கின்றனர்

உயர்ந்த தொழிலாம் உழவுத்தொழிலை மதிப்பதில்லை
உழவு செய்வோனுக்கு பெண் கூட தருவதில்லை,

உழவன் தன் வாரிசுகளை உழவிலிருந்து அகற்றி விடுகிறான்
உழவன் தன் துன்பம் தன்னோடு போகட்டும் என்கிறான்

ஒருபக்கம் உழவுக்கு மூடுவிழா நடந்து வருகின்றது
மறுபக்கம் உணவின்றி அலையும் நிலை விரைவில் வருகுது

உழவை மதியுங்கள் உழவனை மதியுங்கள்
ஒருபோதும் இகழ்வாக எண்ணாதீர்கள் உழவை

கோடிகளில் சம்பளம் பெறும் கோடம்பாக்கத்து நடிகர்களை
கொண்டாடியது போதும் இளைஞர்களே போதும்

தன்னலமற்ற தியாகத்தின் சின்னமான உழவர்களை
தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவோம்

தமிழ்வருடப்பிறப்பான தைத்திங்கள் நன்னாள் என்பது
தரணி முழுவதும் நடக்கும் அறுவடைத் திருநாள்

பொங்கல் கரும்பு மஞ்சள் விளைவித்தவன் உழவன்
பொங்க வேண்டும் உழவர்கள் வாழ்வு மகிழ்ச்சியில்

கரும்பை நட்டு நட்டப்படக் கூடாது உழவன்
கரும்பை நல்ல விலைக்கு வாங்கி மகிழ்விப்போம்

மஞ்சள் கொத்து வாங்குகையில் பேரம் பேசாதீர்
மஞ்சள் கொத்துக்கு கேட்ட விலையைத் தாருங்கள்

கஞ்சத்தனத்தை உழவர்களிடம் என்றும் காட்டாதீர்கள்
கஷ்டப்பட்ட உழவை மகிழ்வித்து மகிழ்வோம்!

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (13-Jan-23, 5:53 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 39

மேலே