வழித்தடம்
வழித்தடம்
வழக்கமான பாதைதான்
காலடி தடங்களின்
எச்சங்கள் கூட
காய்ந்திருக்காது
ஒரு புறமிருந்து
மறுபுறம்
இரவு பகல்
அன்றாடம்
இப்பாதை வழி
எங்களின்
நடமாட்டம்
இன்று பாதை
வேலி போடப்பட்டிருக்கிறது
திகைத்துத்தான்
நிற்கிறோம்
யாரிடம் கேட்பது
எவரிடம் கேட்பது?
கேட்டும் வழக்கமில்லை
கண்ணுக்கு தெரிந்த
பாதையை பிடித்து
நடந்து போனால்
யானை
ஊருக்குள் நுழைந்து
விட்டது என்று
அலறி அடித்து
ஓடுகிறது
மனித கூட்டம்
ஏதோ
குற்றம் செய்து
விட்டது போல்
எங்கள் பின்னால்
சத்தமிட்டு
தொடர்கிறார்கள்
எங்களை விரட்டுவதை
விட
எங்கள் பாதையை
மறைத்தவர்களிடம்
இவர்கள் இப்படி
கூப்பாடு போட்டிருந்தால்
நாங்கள் ஏன்
ஊருக்குள் வந்து
உங்களிடம்
சிரமப்படுகிறோம்