கல்வி யகலமும் கட்டுரை வாய்பாடும் கொல்சின வேந்தன் அவைகாட்டும் - பழமொழி நானூறு 264
நேரிசை வெண்பா
கல்வி யகலமும் கட்டுரை வாய்பாடும்
கொல்சின வேந்தன் அவைகாட்டும் - மல்கித்
தலைப்பாய் இழிதரு தண்புனல் நீத்தம்
மலைப்பெயல் காட்டுந் துணை. 264
- பழமொழி நானூறு
பொருளுரை:
மலையிடம் நிறைந்து பரந்து இழிகின்ற குளிர்ந்த புனலின் பெருக்கம் மலையிடத்துப் பெய்த மழையது அளவை அறிவிக்குமாறு போல, பகைவரைக் கொல்லுகின்ற சினத்தையுடைய அரசனது கல்வியது பெருக்கத்தையும் நீதி கூறும் முறையையும் அவனது அவையே அறிவித்து நிற்கும்.
கருத்து:
அரசனது கல்விப் பெருக்கத்தையும், நீதி கூறும் முறையையும் அவனது அவை காட்டி நிற்கும்.
விளக்கம்:
கட்டுரை என்பது, அரசன் வேண்டிய ஏதுக்களை எடுத்துக்கூறி அவற்றின் முடிவாகிய நீதி கூறலின் நீதி என்னும் பொருளதாயிற்று.
தான் முடிந்த முடிபாக நினைத்த பொருளை, அதற்குப் போதிய ஏதுக்களை மிகுதியாக எடுத்துக்கூறி முடிவு செய்தலையும் கட்டுரை என்ப. இது வியாசம் என்பதை ஒத்தது.
இஃது ஒரு பொருளை வியாஜ்ஜியமாகக் கொண்டு கட்டுரைப்பதென்பதாம். 'அவை காட்டும்' என்றது அவையிலுள்ள அமைச்சர்கள் அறிவிப்பர் என்பதாம். அமைச்சர்களுடைய தன்மை கண்டே அரசன் தன்மையை அறியலாம்; அரசனது தன்மையை அறிவதற்கு அவனது அவை ஏதுவாயிற்று. துணை என்றது அளவை.
'இழி தரு தண்புனல் நீத்தம் மலைப்பெயல் காட்டுந் துணை' என்பது பழமொழி.