223 கொலையே பெரும்பாவம் விழுங்கும் கொடுநரகம் – கொலை 10

கலிவிருத்தம்
விளம் விளம் மா கூவிளம்
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு)

சீவனை வதைசெயல் சிறந்த தாயுங்கால்
பாவமோ ரைந்தினுங் கொலைசெய் பாவியைப்
பூவல யம்பொறா தெரியும் பூதிதான்
ஆவன வாய்திறந் தவனை நுங்குமே. 10

– கொலை, நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”ஒரு உயிரை வதைக்கும் செயல்களைப் பற்றி ஆராய்ந்து பார்த்தால், பொய், களவு, கள், காமம், கொலை ஆகிய ஐம்பெரும் தீமைகளுள் கொலையே மிகக் கொடுமையானது. அதனால், கொலைப் பாவச்செயலைச் செய்யும் பாவியை இந்த நிலவுலகம் பொறுத்துக் கொள்ளாது. எரிந்து கொண்டிருக்கும் கொடிய நரகம்தான் ‘ஆ’வென்று வாய் திறந்து அவனை விழுங்கும்” என்று எச்சரிக்கிறார் இப்பாடலாசிரியர்.

பூவலயம் - நிலவுலகம். பூதி - கொடிய நரகம். நுங்கும் - விழுங்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Jan-23, 3:20 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே