காதல் என்பது அனைவருக்கும் பொது

இலக்கியக் காதல்

நேரிசை வெண்பா


சுனைவாய்ச் சிறுநீரை யெய்தாதென் றெண்ணிப்
பிணைமா னினிதுண்ண வேண்டிக் - கலைமாத்தன்
கள்ளத்தி னூச்சுஞ் சுரமென்பர் காதல
ருள்ளம் படர்ந்த நெறி. " (ஐந்திணை ஐம்பது) மாறன் பொறையனார்


ஆசிரியப்பா

சுனைநீர் சொற்பம் இணைமான் உண்ணத்
தீரா தாக மென்று கலைமான் உண்ணும்
பாவனைக் காட்டலை அறியா பெண்மான்
பாவனை அதுவும் ஆண்மான் தீர்க்க
நின்றிட நீரதும் குறையா
திருக்க மாவின் காதலைக் காட்டுமே ( பழனி ராஜன்)

மாவின். ==. மான்களின்


பாலை நிலத்தில் காதல் மிகுந்த ஆண் மானும்,பெண்மானும் ஓடிக்களைத்து தாகம் தீர்க்க நீர்வேண்டி, அங்குமிங்கும் அலைகின்றன. ஒரு சுனையில் ஒரு மான் அருந்துவதற்கு மட்டுமே சிறிதளவு நீர் உள்ளது. இந்நிலையில், பெண்மான் நீர் அருந்தட்டும் என்ற உயரிய நோக்கோடு ஆண்மான், தான் நீரைப்பருகுவது போல் பாவனை செய்தது. அதே போல் பெண்மானும் நீரைப் பருகாமல் ஆண் மான் அருந்தட்டும் என்று நீர் அருந்துவது போல் பாவனை செய்தது. சுனையின் நீர் தீரவே இல்லை. தங்கள் காதலினை அந்த இரு மான்களும் வெளிப்படுத்திய விதத்தை நமக்கு இவ்வாறு உணர்த்துகிறது ஐந்திணை ஐம்பது.

இதன்மூலம் காதல் வாழ்விலும், இல்லற வாழ்விலும் கணவனும் மனைவியும் எவ்வாறு தாமாக விட்டுக்கொடுத்து காதலுடன் வாழவேண்டும் என்று மனிதனுக்கு அஃறிணை உயிர்கள் மூலம் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

எழுதியவர் : பழனி ராமன் (12-Feb-23, 11:53 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 186

மேலே