402 ஆல்போல் பிறர்க்கு நன்மை ஆற்றுவர் நல்லோர் - கைம்மாறு கருதா உதவி 20

கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

சாடுவெங் கோடையைத் தலையிற் றாங்கியும்
மாடுளோர்க் கருநிழல் வழங்கும் ஆலெனக்
கேடுதம் பான்மிகக் கிளைக்கி னுங்குணப்
பீடுளோர் நன்மையே பிறர்க்குச் செய்வரால். 20

- கைம்மாறு கருதா உதவி, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”ஆலமரம் தன்மேல் தாக்கும் கடுமையான கோடை வெயிலைத் தன் மேல் தாங்கி, தன்பக்கம் வருவோர்க்கு அருமையான குளிர்ந்த நிழலைத் தருகிறது.

அது போல, நற்பண்பு வாய்ந்த பெருமை உடையோர் தமக்கு துன்பம் மிகுதியாக நேர்ந்தாலும் பிறர்க்கு நன்மையே செய்வர்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

சாடுதல் - தாக்குதல். குணம் - பண்பு.
பீடு - பெருமை. கேடு - துன்பம்
மாடுளோர் – தன்பக்கம் வருவோர், .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Feb-23, 7:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 32

மேலே