பணியறநின் றொன்றுணர்ந்து நிற்பாரே நீணெறிச் சென்றார் - நீதிநெறி விளக்கம் 101

நேரிசை வெண்பா

கற்றாங் கறிந்தடங்கித் தீதொரீஇ நன்றாற்றிப்
பெற்றது கொண்டு மனந்திருத்திப் - பற்றுவதே
பற்றுவதே பற்றிப் பணியறநின் றொன்றுணர்ந்து
நிற்பாரே நீணெறிச்சென் றார். 101

- நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

அறிவுநூல்களைக் கற்று அவற்றின் மெய்ப்பொருளை உணர்ந்து அவற்றிற்கேற்ப அடக்கமாய் அந் நூல்களில் விலக்கிய தீய காரியங்களைக் கைவிட்டு, அந்நூல்களில் விதித்த நற்காரியங்களைச் செய்து,

கிடைத்ததைக் கொண்டு மனம் அமைந்து அதனை ஒரு வழிப்படுத்தி தாம் அடைய வேண்டிய வீட்டு நெறியையும் அந் நெறிக்குரிய முறைகளையும் மனத்திற் கொண்டு சரியை முதலிய தொழில்கள் மாள அருள்நிலையில் நின்று தனிப்பொருளாகிய இறைவனை அறிந்து நிற்கின்ற ஞானியரே வீடு பேறு அடையும் வழியில் நின்றவராவர்.

கருத்து:

அறிவு நூல்களைக் கற்று அதன்படி நடந்து மனத்தை ஒருவழிப்படுத்தித் தனிப்பொருளாகிய இறைவனை உணர்ந்து நிற்பாரே வீடடைவர்.

விளக்கம்:

அறிவு நூல்களில் விலக்கிய தீய காரியங்களாவன: காமம் கோபம் முதலியன;

அவற்றின்கண் விதித்த நற்காரியங்களாவன: கொல்லாமை, வாய்மை முதலியன.

பற்றுவது இரண்டனுள் முன்னது வீட்டைப் பற்றும் நெறி; பின்னது அந்நெறியைப் பற்றும் முறை;

பணியற நிற்றல் - முதற் பொருளோடு தான் அதுவென வேறாகாது நிற்றல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Feb-23, 3:40 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

சிறந்த கட்டுரைகள்

மேலே