கலைந்திடும் கனவுகள்

உறக்கம் தழுவாத
உயிர்கள் இல்லை
உலகில் !
ஆழ்ந்த தூக்கத்தில்
காணும் கனவுகள்
கலைந்திடும் !

ஆட்கொள்ளும் நம்மை
ஆட்டிப் படைத்திடும்
கணநேரம் !
வருகின்ற கனவுகளில்
வசந்தமும் வந்திடும்
சிலநேரம் !

நடுங்கவும் வைக்கும்
நடுநிசி வேளையில்
பலநேரம் !
குளிர்ந்திட செய்திடும்
குதூகலம் அடையும்
மனதும் !

சோகத்தில் ஆழ்த்தும்
சோர்ந்திடும் இதயம்
சிலவேளை !
பிரிந்தவர் கூடிடுவர்
இறந்தவர் பிழைப்பர்
பலவேளை !


சச்சரவு உருவாகும்
சமாதானம் பிறக்கும்
ஓரீரு நாட்கள் !
சில காதல் கைகூடும்
பல காதல் உடையும்
கனவிலே !

பகல் கனவுகள்
பாய் விரிக்கும்
பல நேரங்களில் !
இரவின் கனவுகள்
இறுக்கும் இதயத்தை
சில நேரங்களில் !

சிரிப்பாக இருக்கும்
சிந்திக்க வைக்கும்
சில கனவுகள் !
நம்ப முடியாதவை
நாளும் வந்திடும்
நரம்பும் துடித்திடும் !

பகல் கனவு
பலிக்காதென்பர்
பத்தாம் பசலிகள் !
இரவில் வருபவை
மட்டும் நடக்குமா
என்ன ?

பகுத்தறிவு வேண்டும்
படித்துள்ள மாந்தரும்
உணர்ந்திடுக !
ஏமாறாதீர் என்றென்றும்
ஏய்த்திடும் மொழிகளை
செவிமடுக்காதீர் !

காணும் கனவுகள்
கலைந்திடும் மறந்திடும்
விழித்ததும் !
நடைமுறை வாழ்வை
கடைபிடித்து கடந்து
செல்வோம் !

கண்டதை நினைத்து
நடைபோட வழிவகை
செய்யாதீர் !
நடப்பதை எடைபோட்டு
யதார்த்த வாழ்வை
கடந்திடுங்கள் !


பழனி குமார்
22.04.2023

எழுதியவர் : பழனி குமார் (22-Apr-23, 8:35 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 62

மேலே