மெனுகார்டில் இல்லாத உணவு

மெனுகார்டில் இல்லாத உணவு

நகரை விட்டு சற்று ஒதுங்கியிருந்த பிரமாண்டமான ஓட்டல், அருகில் “கார் பார்க்கில்” காரை நிறுத்தி விட்டு இறங்கினார்கள் ராமமூர்த்தியும், சிவசங்கரனும்.
ஏதாவது சாப்பிட்டுட்டு போவோம் சிவசங்கரன் ராம மூர்த்தியிடம் சொல்ல, அவரும் டிரைவரிடம் காரை இந்த ஓட்டலில் நிறுத்த சொல்லி இருந்தார்.
இருவரும் இறங்கிய பின், ராமமூர்த்தி டிரைவரிடம் நீ காத்திரு என்று சொல்லி விட்டு சிவசங்கரனுடன் ஓட்டலை நோக்கி நடந்தார்.
டிரைவருக்கு தெரியும் அவர்கள் இருவரும் திரும்பி வர இன்னும் மூன்று மணி நேரம் மேல் ஆகும். அதுவரை காத்திருக்க வேண்டும் மனதுக்குள் நினைத்து கொண்டாலும், வெளியில் “சரிங்க சார்” தலையை ஆட்டினார்.
ஹோட்டலில் நுழையும்போதே, ரிசப்ஷனில் இருந்தவர் ராமமூர்த்தியை பார்த்தவுடன் எழுந்து கையசைத்தார். சிவசங்கரன், ராமமூர்த்திக்கு இந்த ஓட்டல் நல்ல பரிச்சயம் என்று புரிந்து கொண்டார்.
அது மட்டுமில்லாமல் “டை கட்டி” கச்சிதமாய் உடை அணிந்திருந்த ஒரு இளைஞன்
அவர்கள் எதிரே வந்து “வெல்கம் சார்” உங்களுக்கு அதோ அந்த டேபிள் ரிசர்வ் பண்ணியிருக்கு சார் என்றான்.
இருவரும் அந்த டேபிளை நோக்கி சென்றனர். அது தனியறை போல் சுற்றிலும் தடுப்புகள் போடப்பட்டு உள்ளே நுழைவதற்கு மட்டும் ஒரு வழி செய்யப்பட்டு இருந்தது.
பொதுவாக இவர்களை போல் பெரிய மனிதர்கள் ‘பிசினஸ்’ விசயமாக பேசுவதற்கென்றே இவ்விதம் செய்யப்பட்டிருந்தது.
இருவரும் சென்று அமர்ந்தனர்.டேபிளின் மேல் வைக்கப்பட்டிருந்த ‘மெனு கார்டை’ ராமமூர்த்தி சிவசங்கரனிடம் கொடுத்து உங்க சாய்ஸ்..என்றார்.
அவர் நான்கைந்தை “டிக்” செய்தார், அதே நேரத்தில் சுத்தமான உடையுடன் வெயிட்டர் ஒருவன் உள்ளே வந்து தலையை சற்று தாழ்த்தினான். அவனிடம் சிவ சங்கரம் அந்த மெனு கார்டை கொடுத்தார். கொஞ்சம் மெதுவா வரட்டும் என்றார்.
இருவரும் பிசினஸ் விசயமாக பேச ஆரம்பித்தனர். சிவசங்கரன் வெளி மாநிலத்தில் இருந்து வந்திருப்பவர், ராமமூர்த்தியிடம் ஒரு சில பொருட்களை ‘ஆர்டர் பெற்று’ போக வந்திருக்கிறார்.
இருவரும் சுவாரசியமாக பேசி கொண்டிருந்தனர், அவ்வப்போது அவர்கள் ஆர்டர் செய்திருந்த உணவு பொருட்கள், ஒவ்வொன்றாய் அந்த வெயிட்டர் கொண்டு வந்து வைத்த வண்ணம் இருந்தான். இடையில் அளவாக கொஞ்சம் டிரிக்ஸ் கொண்டு வர சொன்னார் சிவசங்கரன், அதையும் கொண்டு வந்து வைத்து விட்டு அங்கிருந்து விலகினான் வெயிட்டர்.
நீண்ட நேரம் ஓடியிருந்தது. ராமமூர்த்தி வெயிட்டரை அழைத்தார். அவன் உள்ளே வந்து ஒரு சிறிய தட்டில் பில்லை வைத்து, அவர் முன் நின்றான். ராமமூர்த்தி அந்த தொகையை கண்ணால் பார்த்து விட்டு நான்கைந்து ரூபாய் தாள்களை எடுத்து தட்டில் வைத்து விட்டு கிளம்பினார். சிவசங்கரனும் அவரை பின் தொடர, வெயிட்டர் பணத்துடன் பில் செக்சனுக்கு சென்றான்.
இருவரும் இவ்வளவு நேரம் பேசியதில் மனம் திருப்தியானது மட்டுமில்லாமல், வயிறார சாப்பிட்டதும் இருவருக்கும் கிறக்கத்தை தந்தது, அவர்கள் இருவரும் வருவதை பார்த்த டிரைவர் சட்டென காரை விட்டிறங்கி இரு பக்க கதவை திறந்து விட்டு நின்றார்.
“ஏவ்” ஏப்பத்துடன் இருவரும் ஏறி உட்கார்ந்தவர்கள், சங்கரன் உங்க ரூமுக்கு போய் நல்லா ரெஸ்ட் எடுங்க, சாயங்காலம் டிரைவரை அனுப்பறேன், அவர் கூட ஏர் போர்ட் போயிருங்க, அவர் தலையாட்ட, ‘சிலாட் ரெசிடென்சிக்கு’ போப்பா, டிரைவரிடம் சொன்னார்.
சிவசங்கரனை அவர் தங்கியிருந்த ரெசிடென்சியில் இறக்கி விட்டு விட்டு ஆபிஸுக்கு போப்பா என்றார்.
ஆபிசில் அவரது அறை முன் இறங்கும் போது அரை மணி நேரத்துல என்னை வீட்டுல இறக்கி விட்டுட்டு போய் சிவ சங்கரனை ‘பிக் அப்’ பண்ணி ஏர்போர்ட் விட்டுட்டு ஆபிசுக்கு வந்துடு, அதுக்குள்ள வீட்டுல இருந்து எங்காவது போகனுமின்னா போன் பண்ணறேன்.
சரிங்க சார், வேறொன்றும் சொல்லாமல் அவர் அலுவலக அறைக்குள் நுழைவதையே பார்த்து கொண்டிருந்த டிரைவர் வேகமாய் ஓடினார். கார் ஷெட்டுக்குள் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த டிபன் பாக்சை அவசர அவசரமாய் திறந்தார்.
மோர் விட்டு பிசைந்து எடுத்து வந்திருந்த சாப்பாடு, நேரம் கழிந்து போயிருந்ததால் ஒரு வித புளிச்ச வாடை வீசியது.
அதை பற்றி கவலைப்படாமல் கவளம் கவளமாய் எடுத்து வாயில் போட்டு மென்று இரசித்து சாப்பிட்டு, கிடைத்திருக்கும் அரை மணி நேரத்தை இப்படி அனுபவித்தார்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (26-Apr-23, 11:47 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 163

மேலே