படி

படி
****
வீட்டுக்கு வீடு வாசப்படி - விற்கும்
விலைவாசிக் கேற்ப வாழப்படி
கூட்டுக்கு கூடு பாசப்படி - அங்கு
குருவிகளி சைக்கும் பாசைப்படி
மேட்டுக்குப் பள்ளம் மேலும்படி - சற்று
மேலுயரத் தேடு மாசப்படி
நாட்டுக்கு நாடு மோசப்படி - அது
நமக்கான தான தோசப்படி
*
ஆட்டுக்கு வாலின் அளவைப்படி- அதில்
ஆயிரமி ருக்கும் அர்த்தம்படி
சேட்டுக்கு வட்டிச் சேரும்படி - வீண்
செலவுகளு மின்றி வாழப்படி
ஓட்டுக்குள் ஒடுங்கும் ஆமைப்படி - அதன்
உள்நோக்கம் காணும் ஆற்றல்படி
காட்டுக்குள் ஊறும் ஊற்றைப்படி - அது
கற்றுத்த ருகின்றப் பாடம்படி
*
ஏட்டுச்சு ரைக்காய் என்னும்படி - உன்னை
ஏளனஞ்செய் வோர்முன் எதையும்படி
ஊட்டிக்குச் செல்ல உயரம்படி - அதன்
உருவாக்கம் போன்று உயரப்படி
ஈட்டுக்குச் செல்லா திருக்கப்படி - ஒரு
ஈடினையில் லாத ஈகைப்படி
பாட்டுக்குப் பாட்டு நீயும்படி- பாடு
படுகிறவன் பாட்டைப் பாட்டாய்ப்படி
*
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (10-May-23, 2:35 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 35

மேலே