முக மலர்ச்சிக் கண்டிடுவீர்

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியார் பிறர்க்கு. "

அன்பு இல்லாதவர் எல்லாப் பொருள்களையும்
தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்.
அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு
உரிமையாக்கி வாழ்வார்.

×××××××××××××××××××××××××××

வாழ்வியல் தத்துவங்களை
இருவரிகளில் வழங்கிய
வான்புகழ் வள்ளுவனை
வணங்குவோம் !


உள்ளவரும் உள்ளம்
கொண்டோரும் கேளீர் !
பள்ளங்கள் மேடுகள்
பாழும் நிலப்பரப்பில் !
இயற்கையின் கூற்றை
மாற்றிடும் மனிதகுலம்
மனதிலும் மாற்றங்கள்
அவசியம் ஆனதின்று !

செல்வம் உள்ளவரெலாம்
செழிப்புடன் வாழ்கிறார் !
உயர்ந்த நிலையிலுள்ளோர்
உயர்ந்தே பார்க்கின்றார் !
வறுமையில் வாடுவோர்
பொறுமை இழக்கிறார்
வாழ்வின் நிலையெண்ணி
துயரங்கள் கூடுவதெண்ணி !


இருப்பது போதுமென்று
இதயத்தில் நிலைநிறுத்து !
பேராசையை தவிர்த்திடு
பெயர் நிலைக்க பாடுபடு !
கொண்டு வருவதுமில்லை
எடுத்துச் செல்வதுமில்லை !
அளவின்றி சேர்ப்பதால்
பயனேதும் ஒன்றுமில்லை !

உள்ளதெலாம் நமக்கென்று
உள்ளத்தைக் கனமாக்காது
உச்சி சென்று குதிக்காதீர் !
துன்பத்தில் உழல்பவரை
துச்சமென நினைக்காதீர் !
ஏழையரும் ஏற்றம்பெற
மனங்குளிர செய்திடுவீர்
முக மலர்ச்சிக் கண்டிடுவீர் !

பழனி குமார்
10.05.2023

எழுதியவர் : பழனி குமார் (10-May-23, 4:04 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 64

மேலே