மெளன அஞ்சலி

ஒரிசா விபத்தால்
ஒடுங்கி போனேன்
சோகத்தின் கரையைக்
கண்டேன்
விழிகளின் விளிம்பும்
மறைந்தது
துயரத்தின் எல்லையைக்
கடந்தேன்
சடலங்களைக் கண்டு
சடலமானேன்
அபயக்குரல் என் பேச்சை
அடக்கியது
பேரிழப்பை நினைத்து என்
பேனா நடுங்கியது
காட்சிகளைக் கண்டு என்
நாவும் வறண்டது
உறவினர்களின் கதறல்
கலங்கிட வைத்தது
உதவிய நெஞ்சங்கள்
உறைந்தன
உள்ளத்தில் அழுகை
ஊற்றெடுத்தது
கண்ணீர் வழிந்தோடி
நனைந்தது தேகம்
கண்களில் குருதியும்
எட்டிப் பார்த்தது
உருக்குலைந்த உடல்களால்
உருகியது உள்ளம்
சிதறிய பெட்டிகளால் மனம்
சிதைந்து துண்டானது
நடக்கவே கூடாது இனி
இதுபோன்ற நிகழ்வு
நிர்மூலமான உயிருக்கு
நிவாரணம் ஈடாகாது
ஆறுதல்கூற வார்த்தைகளை
தேடுகிறேன்
ஆசுவாசப்படுத்த சுவாசம்
மறந்தேன்
தவறு செய்தோரை தரணி
மன்னிக்காது
அநீதி இழைத்தோரை
அரசும் விடக்கூடாது
பொறுப்பில் இருப்போர்
மறுக்கக் கூடாது
காலம் கடந்தாலும்
ஞாலம் மறவாது
கண்ணீர்த் துளிகளால்
காகிதமும் ஈரமானது
எழுதுகோல் மையும்
உலர்ந்து போனது
உடைந்து நொறுங்கியது
உலகில் உள்ளங்கள்
எழுந்து நின்றேன்
அறியாமல் நானும்
செலுத்தினேன்
மெளனம் அஞ்சலி !
பழனி குமார்
03.06.2023