அறிவியலோடு அனுபவியுங்கள்

அறிவியலோடு அனுபவியுங்கள் அனைத்தையும் அறிவுள்ளோரே
சிறியளவு கூட்டிலே குருவிபோல் வாழ்வதும் சரியோ
குறைவின்றி தேடுங்கள் கிடைக்கும் வரையிலே
பறித்துண்ணுல் வேண்டவே வேண்டாம் அதுபாவம்

தமக்கும் மிகுந்ததை கொடுத்தே பழகுங்கள்
அமுக்கி பதுக்குதல் மனிதனுக்கு உரியதே
அமுதமே ஆயினும் யாவருக்கும் பகிர்வோம்
கமழும் மலர்போல் கலந்திடுவோம் காற்றோடு

மனிதனாலே உருவாகும் வரலாற்று பதிவுகள்
தனியாய் ஒருவனும் வெல்லுவதும் இல்லையே
கனிவாய் சொல்வதால் காவியம் படைக்கலாம்
நினைவில் கொள்வோம் நீளாயுள் நமக்கில்லை.

உணவினை பகிர்ந்தால் உண்டோர் மகிழ்வார்
பிணமாய் வீழ்ந்தால் திரவியமோ அண்டாது
மணந்தோர் பிறந்தோர் மறுநாளே புதைப்பார்
குணமிகக் கொண்டவனின் பிணமும் புகழினில்

கூலியைப் பெறாமலே மண்ணும் கொள்ளும்
வேலையில் தொய்வின்றி உடலும் சிதையும்
பாலையின் தொலைவில் தெரியும் கானல்நீராய்
கோலமிகு வாழ்க்கை கோடியில் முடியுமே.
— நன்னாடன.

எழுதியவர் : நன்னாடன் (9-Jun-23, 12:06 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 42

மேலே