அகவல்

அகவல்....! 21 / 06 / 2023
-------
ஏனென்னைப் படைத்தாய்? இறைவா - இங்கு
ஏனென்னைப் படைத்து கல்லாய் நின்றாய்?
நானுன்னை கேட்பதெல்லாம் வானுலகில்
உன்னருகே இருக்கும் வரம் மட்டும்தான்.
நானோ சிறுபிள்ளை....உந்தன் கைப்பிள்ளை....
சொன்னதையே சொல்லி அழும் கிளிப்பிள்ளை.
என்ன தவறு செய்தேன்? தெரியவில்லை
வாழும் வகையும் ஒன்றும் புரியவில்லை
சம்சார கடலில் என்னை தள்ளிவிட்டு
சந்தோஷமாய் நீயும் புன்னகைக் கின்றாய்.
கண்ணில் தெரியா கயிற்றின் முனையை
கையில் வைத்தே ஆட்டுவிக் கின்றாய்.
பாவமும் நீயே ...தருமமும் நீயே....
பாவம் போக்கிடும் பரிகாரமும் நீயே.
தருமம் காத்து தலைகாப் பவனும்நீயே.
சிரிக்க வைப்பவனும் நீ - பின்னால்
சிந்திக்க வைப்பவனும் நீ
வாரிக் கொடுப்பவனும் நீ - சமயத்தில்
வாரி விடுபவனும் நீ
கைத்தூக்கி விடுபவனும் நீ - நட்டாற்றில்
கைகழுவி விடுபவனும் நீ.
என்னுள் நிறைந்து பொம்மையென எங்கும்
என்னை நீயே நித்தமும் ஆளுகின்றாய்.
என்ன செய்ய? துன்பம் மீறுகையில்
கருமேகம் கண்டவுடன் தோகை விரித்தாடும்
அருமை மயில் அகவும் அதுபோல்
குறைகள் அனைத்தையும் பித்தனை போல்நானும்
இறைவா உன்மேல் அகவற்பா படித்துவிட்டேன்.
இறங்கிவந்து கண்ணீரை நீயும் துடைப்பாயே...!

.[சிங்கப்பூர் பொழில் பண்பலையில்
ஒலிபரப்பான கவிதை]

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (25-Jun-23, 6:58 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : akaval
பார்வை : 47

மேலே