யார்கண்ணும் கண்டது காரணமாம் ஆறு - பழமொழி நானூறு 348
நேரிசை வெண்பா
(உயிரேறிய எதுகை)
பேருலையுள் பெய்த அரிசியை வெந்தமை
ஓர்மூழை யாலே உணர்ந்தாங்கு - யார்கண்ணும்
கண்டதனால் காண்டலே வேண்டுமாம் யார்கண்ணும்
கண்டது காரணமாம் ஆறு. 348
- பழமொழி நானூறு
பொருளுரை:
யாவரிடத்தும் அறியப்பட்ட குணமே அறியப்படாத பிறவற்றையும் அறிதற்குரிய வழியாம்; ஆதலால், கொதிக்கின்ற பெரிய உலையுள் இட்ட அரிசியை வெந்த விதத்தை ஓர் அகப்பைச் சோற்றாலே அறிந்ததைப் போல, யாரிடத்தும் அறியப்பட்ட செயல் ஒன்று கொண்டே குணம், ஒழுக்கம் முதலியவற்றை அறிதல் வேண்டும்.
கருத்து:
ஒருவருடைய செயல் கொண்டே அவரது குணம்,ஒழுக்கம் முதலியவற்றை அறிய வேண்டும்.
விளக்கம்:
உலையிலுள்ள சோறு ஒவ்வொன்றையும் எடுத்துப் பார்த்தல் வேண்டாதது போல, குணம், ஒழுக்கம், செயல் முதலிய ஒவ்வொன்றையும் தனித்தனியே ஆராய்தல் வேண்டுவதில்லையாம்.
அது முடியாத காரியம் ஆதலால், ஓர் அகப்பைச் சோற்றால் பானையிலுள்ள சோறு ஒவ்வொன்றின் பதமும் அறியப்படுதல் போல, செயல் ஒன்றானே அவரைப்பற்றிய ஒழுக்கங்கள், குணங்கள் முதலியன தனித்தனியே அறியப்படும் என்பதாம்.
'கண்டது காரணம் ஆம் ஆறு' என்பது பழமொழி.