சொர்க்க நரக சொத்து

சொர்க்க நரகச் சொத்து
**************************
தள்ளாடும் வாழ்க்கையை தள்ளிவைத் தாரேனும்
உள்ளூற இன்புற்ற துண்டாமோ? - முள்தைக்கும்
நெஞ்சத்துள் யுத்தம் நிகழ்த்துமதை அன்றாடம்
கொஞ்சி மகிழ்ந்தவர்யார் கூறு(1)
*
கூறுவதற் குள்ளேயக் கூற்றுவன் வந்துநின்று
ஏறுவுள் லென்பான் எமலோகம் - ஆறுதல்
வேண்டித் தவமிருந்த வேள்வித் திருநாளை
மாண்டே அடைவாய் மறைந்து (2)
*
மறையுமொரு நாளை மறைத்தே படைக்கும்
முறையே இறைவன் முடிவாம் - அறைக்குள்ளே
ஆடியவ னும்உயர் அம்பலத் தாடியோனும்
ஆடி யடங்கும் அரண்(3)
*
அரணான மெய்யை அகழுமாத்மா காற்றாய்
அரங்கேற்றம் காணும் அரங்கு - மரணம்
முரணான பேர்க்கும் முடிவான தாகிச்
சரணாகச் செய்யும் சடங்கு(4)
*
சடங்குகள் நாம்வகுத்தச் சம்பிரதா யங்கள்
குடங்குமாய்ச் சிந்திடும் கண்ணீர் -
உடல்கூறை
விட்டுயிர் நீக்கும் விதியின் விளையாட்டைக்
கட்டிவைக்கப் போவதில்லை காண் (5)
*
காண்பவை யாவையும் காணாமல் போவதைக்
காண்பதே காலனின் கண்களாம் - வீண்பகை
வெட்டி வெளிவேசம் வீராப் பதற்குள்ளே
விட்டுவிட வேண்டும் விரைந்து(6)
*
விரைந்தோடும் வாழ்வில் விளையாட்டாய் காலம்
வரைந்துவிடும் வானவில் வண்ணம் - திரைமறைவில்
நீயறியா தந்த நிசம்மாற்றக் காத்திருக்கும்
தீயறியும் சாவின் திறம் (7)
*
திறமுடைய வர்க்கும் திகதிவைத் திங்கே
இறப்புவரு மோர்நாள் இயற்கை - பிறப்பின்
பெருமையைப் பின்புணர்த்தும் பீடுடனே ஈற்றில்
உருக்குலைக்கும் உண்மை உணர் (😎
*
உணரா தவரும் உதவா தவரும்
பிணமா கிடும்நாள் பிறக்கும் - பணத்தால்
அடித்து விரட்டி அனுப்ப முடியாப்
படியே கிடைக்கும் பரிசு (9)
*
பரிசெனச் சாவைப் பதுக்கிய வாழ்வு
தரிசென வாகும் தருணம் - தரிசிக்கச்
சொர்க்கம் நரகமோ சொத்தென வாய்க்கலாம்
தர்க்கித்த லாகாது தள்ளு (10)
*
மெய்யன் நடராஜ்
(ஒரு பா பஃது)

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (6-Jul-23, 1:52 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 52

மேலே