நடைமுறைகள் தேயலாம்

நடைமுறைகள் தேயலாம் !
********************************

இரவு கரைந்து
விடியும் வேளை
நிலவு ஓடி ஒளிய
ஆதவன் மேலெழும்
அற்புத பொழுதில்
கோழி கூவுகின்ற
அதிகாலை நேரம்
இரையை தேடி
பறவைகள் கூட்டமாக
வேகமாக சென்றிட
பூக்கள் மலர்ந்திட
இதழ்கள் விரித்து
வாசம் பரவிட
விழிகளை திறந்து
எழுகிறது ஊரும் !

வீதிகள் யாவும்
வாயில்கள் தோறும்
வெளிச்சம் பரவிட
தெளிக்கும் நீரால்
நனையும் மண்ணில்
மங்கையர் விரல்கள்
புள்ளிகள் வைத்து
கோலம் வரைந்திட
விரைந்து செயல்படும்
அழகான காட்சியது !

அரிதாகி போனது
மேற்கூறிய நிகழ்வு !
வண்ணங்கள் மூலம்
நிலையாக வரைவது
கலையாக மாறியது !
நவீன மயமாக்கத்தின்
பகுதியாக மாறிவிட்டது !
இயந்திரமான மனிதர்கள்
அடுக்குமாடி வீடுகள்
பணியாற்றும் தம்பதிகள்
காரணங்கள் கூறுவார்கள் !

எதிர்கால உலகத்தில்
ஏதேதோ நடக்கலாம்
நிகழ்வுகள் மறக்கலாம்
தலைமுறைகள் மாறமாற
நடைமுறைகள் தேயலாம் !
உதாரணத்திற்கு ஒன்றாக
உள்ளத்தில் தோன்றியதை
வரிகளாக வடித்திட்டேன் !


( கிராமங்கள் தவிர )

பழனி குமார்
09.06.2023

எழுதியவர் : பழனி குமார் (9-Jul-23, 9:15 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 82

மேலே