எனக்கான விடியல்

கால்கள் நனைக்கக்
காத்திருந்தேன்
அலைகள்
பாதச் சுவடுகளை மட்டும்
வருடிச் சென்றன !

தென்றல் தீண்ட
நின்றிருந்தேன்
அதுகூட என்
நிழலினை மட்டும் தான்
தழு‌விச் சென்றது !

அடை மழையில்
முழுவதுமாய்
மூழ்கி விட
வந்தவனுக்கு
மிஞ்சியதெல்லாம்
சில தூறல்கள் தான் !

இப்படி என் மனது குமுற,
மனசாட்சி சொன்னது ...
வெம்பாதே நண்பா !

உலகின்
ஒவ்வொரு அசைவுக்கும்
ஒரு காரணம் உண்டு !

அந்த கணத்தின் அலை ;
அன்று வீசிய தென்றல் ;
அங்கு பெய்த மழை
உனக்கானதல்ல,
அவ்வளவுதான் !

கைகளில் சிக்காமல்
கரையில் தத்தளித்த
நண்டை - மீண்டும்
கடல் சேர்க்க வந்த
அலை அது !

வழி தெரியாமல்
திகைத்து நின்ற சிறு
எறும்புக்கு - இலையால்
பாலம் செய்ய வீசிய
தென்றல் அது !

எல்லாம் சரி,
அந்த சில நொடி
அடை மழை எதற்கு ?
என்கிறாயா ? கேள்

அப்பாவிடம்,
"மழை வரும் பாரு" - என
மந்திரம் சொல்லி
அண்ணாந்து பார்த்த

மழலையின்
ஏங்கிய முகம் கண்ட
மேகம் - தன்
நிலை மறந்து
சட்டெனப் பெய்தது தான்
அந்த சில நொடி
அடை மழை !

உனக்கான மழை
எதுவென உனக்கே
விளங்கும் வரை
பொறுத்திரு
என்றது மனம் !

பிறகொரு நாள் ...
இனம் புரியாத
ஏதோ ஒன்று
அலாரத்தை முந்தி
தூக்கம் கலைத்து - எனை
இழுத்துச் சென்றது
கடற்கரைக்கு !

அலையோடு மிதந்து வந்த
அதிகாலைத் தென்றல்,
அளவான மழையோடு
எனக்கான விடியலைக்
கூட்டி வந்த அக்கணம்
மெய் மறந்து நின்றேன்
பெருங்கர்வம் கொண்டேன் !

- நா முரளிதரன்

எழுதியவர் : நா முரளிதரன் (23-Jul-23, 9:53 pm)
சேர்த்தது : நா முரளிதரன்
Tanglish : enakaana vidiyal
பார்வை : 101

மேலே