பெண் கொடுத்த ஊரில்

பெண் கொடுத்த ஊரில்

தன்னோடு படித்த நண்பன் நாராயணனை யதேச்சையாக அவன் கடையிலேயே சந்திக்க வேண்டிய சூழநிலை ஏற்பட்டது ராசப்பனுக்கு.
தன் மகளை இந்த ஊருக்கு கட்டி கொடுத்திருக்கிறார். மகள் வீட்டுக்கு வந்திருந்தவர், மாலையில் கடைவீதியாக நடந்து போகும்போது யாரோ தன் பெயரை சொல்லி கூப்பிடும் சத்தம் கேட்டு நின்று சுற்றும் முற்றும் பார்த்தார். இந்த பக்கம் குரல் மீண்டும் வர அப்பொழுதுதான் அந்த பாதையின் முன் இருந்த கடையில் இருந்து யாரோ கை அசைப்பது தெரிந்தது.
யாராய் இருக்கும்? மாலை வெளிச்சம் இன்னும் மங்காததால் கடையில் விளக்குகள் போடப்படாமல் இருந்தது. அதனால் வெளியில் நின்று பார்க்க கடைக்குள் இருள் சூழந்து இருப்பது போல் இருந்தது, அதனால் அழைப்பவரை அடையாளம் தெரியாமல் குழப்பத்துடன் கடைக்குள் நுழைந்தார்.
அதற்குள் கடை முகப்புக்கு வந்து நின்றவர் “வா வா ராசப்பா உன்னை பார்த்து எவ்வளவு நாளாச்சு? அன்புடன் அழைத்தபடி நின்றார். அடையாளம் தெரியாத சிறு குழப்பம் வந்தாலும் இரண்டு மூன்று நிமிடத்துக்குள் அவரை பற்றிய ஞாபகம் வந்து விட்டது.
“நாராயணா” எப்படி இருக்கே? அன்புடன் அருகில் சென்று அணைத்து கொண்டார்.
நல்லா இருக்கேன், பார்த்தியா நீதான் என்னை அடையாளம் கண்டு பிடிக்க லேட் பண்ணே, நான் இங்கிருந்தே ரோட்டுல உன்னை பார்க்கறப்பவே அட ராசப்பன்னு அடையாளம் கண்டு பிடிச்சுட்டேன், பெருமிதமாய் சொல்லி கடைக்குள் அழைத்து சென்றார்.
ராசப்பன் சுற்றும் முற்றும் பார்த்தார், “பேன்சி” பொருட்களாக நிறைந்திருந்தது. இரண்டு பக்கமும் வாங்குபவர்கள் வந்து நின்று வாங்கி செல்லும்படி இருந்தது. இரண்டு பெண்கள் இரு புறமும் நின்று கொண்டிருந்தார்கள். நாராயணன் நடுவில் ராசப்பனை அழைத்து உட்காரவைத்து கொண்டான். இருவரும் பழைய நினைவுகளில் அளாவினார்கள்.
ராசப்பன் மெல்ல கேட்டார், பிசினஸ் எல்லாம் எப்படி போகுது?
ச்..சலிப்பு கொட்டினான் நாராயணன், எல்லாம் இந்த “கொரானோ” வந்த பின்னால டல்லாயிடுச்சுப்பா, மக்கள் கிட்டே வாங்கற சக்தி குறைசுடுச்சோன்னு தோணுது. முதல்ல எல்லாம் “கிப்ட்” வாங்கணும்னா விலைய பத்தி எல்லாம் கவலைப் படமாட்டாங்க, இப்ப அப்படி இல்லை, ரொம்ப மலிவா ஏதாவது கிப்ட் கொடுத்தா போதும்னு நினைக்கறாங்க.
என்னப்பா கடை வீதியெல்லாம் ஆளுங்க நடமாட்டம் வதுகிட்டும் போயிட்டும் இருக்கு, நீ இப்படி சொல்றே. அதற்கு ஓரிருவர் உள்ளே வர நான் மெளனமானேன். அவர்கள் பணிபுரியும் அந்த பெண்ணிடம் ஏதோ கேட்பதும் அவள் அதற்கு பதில் சொல்வதும், இவன் அதை கூர்ந்து கவனிப்பதுமாய் இருந்தான். இடையில் ராசப்பன் இவர்களுக்கு எதற்கு தொல்லையாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் சரி நீ பிசினசை பாரு, மறுபடி கிளம்பறதுக்கு முன்னாடி வந்து உன்னை பார்க்கறேன், அவன் தோளை தட்டி கொடுத்து விட்டு வெளியே வந்தார்.
இரவு மகளிடம் தம் நண்பன் இங்கு கடை வைத்திருப்பதை பெருமையாக சொன்னார். மகள் ஸ்..ஸ்..என்று விரலை வாயில் வைத்து சைகை காண்பித்தாள். இவர் குழப்பமாய் அவளை பார்த்தார். அவள் கண்ஜாடையாய் மாமனார் சற்று தள்ளி உட்கார்ந்து புத்தகம் படித்து கொண்டிருப்பதை காட்டினாள். ராசப்பனுக்கு எதுவும் புரிபடாமல் பேசாமல் வாயை மூடிக்கொண்டார்.
காலையில் அவரவர்கள் தங்கள் அலுவல்களை பார்க்க கிளம்பிய பின் மகள் அப்பாவிடம் சொன்னாள், நீங்க சொன்ன நண்பர் கடை வீதியில இருக்கற “துர்கா
பேன்சி ஸ்டோர்” தானே என்று கேட்டாள். ராசப்பனுக்கு பெயர் ஞாபகம் வரவில்லை, அந்த இடத்தை சொன்னார். தெரியும், அதான், அவங்களுக்கும் இவங்களுக்கும் ஆகாது, அவர் இவரோட பங்காளி ஆகணும், இரண்டு பேருக்கும் மூதாதையர் சொத்துல தகராறு இருக்கு. அதனால இவங்க யாரும் அங்க போறதில்லை, அவங்க யாரும் வர்றதில்லை, நீங்க பாட்டுக்கு உங்க நண்பனை பத்தி அப்ப பெருமையா பேசப்போயி அவங்களுக்கு உங்க மேல சங்கடம் வந்துடக்கூடாதுன்னுதான் அமைதியா இருக்க சொல்லி சைகை காட்டினேன்.
ராசப்பனுக்கு மகளின் சங்கடமான நிலைமை புரிய, அதுவும் சரிதான், ஆனா அவன் படிக்கற போது நியாயம், அது இதுன்னு பேசுவானே, அவனா இப்படி..!, மெதுவாக முணங்கினார். மகள் முறைத்தாள், இதுதான் வேணாங்கறது, ஆரம்பிச்சிட்டீங்கள்ள, உங்க நண்பன் புராணம், நமக்கெதுக்கு அவங்களோட வம்பு. நீங்க உங்க நண்பரை விட்டு தராம பேசினா, அப்ப நாங்க மோசம்ங்கறீங்களா? அப்படீன்னு மாமனார் வீட்ல கேட்டா என்ன பதில் சொல்வீங்க?
அதுவும் நியாயம்தானே…! தலையாட்டினார். மறு நாள் கிளம்புவதற்கு முன் அவனை பார்த்து சொல்லி விட்டு போகலாம் என்று நாராயணன் கடைக்கு போனார்.
வா..வா..உன்னைய சரியா கவனிக்காம அனுப்பிச்சிட்டமேன்னு வருத்தப்பட்டுகிட்டே இருந்தேன். உட்காரு, அவனின் அன்பான உபசரிப்பு இவருக்கு ஒரு நெருடலை கொடுத்தது. அவனிடம் ஏதேதோ பேசி விட்டு சாயங்காலம் ஊருக்கு கிளம்புவதாக சொல்லிவிட்டு எழுந்தார்.
சரி போயிட்டு வா..உன் செல் நம்பரை கொடுத்துட்டு போ, ஏதுன்னா போன் பண்ணறேன், என்ன பண்ணறது? நீ நம்ம சொந்தத்துல பொண்ணை கொடுத்தும் இரண்டு பேரும் அதை பத்தி சந்தோசமா பேச கூடிய சூழ்நிலை இல்லாம போச்சு பாரு..!
இவருக்கு விருக்கென்றது, அப்படீன்னா உனக்கு……இழுத்தார்
என்னப்பா நீ எங்களுக்கும் அவங்களுக்கு ஆகாதுன்னாலும், அவங்க பையனுக்கு பொண்ணு எந்த ஊர்ல இருந்து எடுத்திருக்காங்கன்னு அக்கம் பக்கம் சொல்லாமலா இருப்பாங்க, அதுவும் அந்த ஊர்ல யார் வீட்டுல இருந்து பொண் எடுத்திருக்காங்கன்னு சொல்லாமலயா இருப்பாங்க, சிரித்து கொண்டே சொன்னவன், உன் பொண்ணு இந்த பக்கம் வந்தா விசாரிக்கும், அவங்களுக்கு தெரியும் நீயும் நானும் தோஸ்துன்னு சொல்லியிருக்கேன்.
இதென்னடா இப்படி ஒரு அரசியல்…! பொண்ணுக்கு எந்த குழப்பமும் நடக்காமல் இருந்தால் சரி, மனதுக்குள் நினைத்து கொண்டு போய்ட்டு வர்றேன் “செல் நம்பரை” கொடுத்துவிட்டு நகர்ந்தார்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (7-Aug-23, 12:08 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : pen kodutha ooril
பார்வை : 101

மேலே