மீண்டும் கடவுள்

நமக்கு மிகவும் வியப்பையும் ஆச்சரியத்தையும், அதே நேரத்தில் பல சந்தேகங்களை கொடுக்கும் விஷயம்தான் கடவுள் எனும் சொல். என்னை பொறுத்த வரையில், உலகில் பிறந்த அல்லது பிறக்கும் எவரும் கடவுள் இல்லை. கடவுளாக இருக்க முடியாது. கடவுள் என்று சொல்லப்படுபவர்கள் எவரும் கடவுளை கண்டதுமில்லை, பிறருக்கு காட்டியதும் இல்லை. ரமண மகரிஷி தன்னைத்தானே உணர்ந்தார் என்பதும், ராமகிருஷ்ண பரமஹம்சர் விவேகானந்தருக்கு கடவுளை காட்டினார் என்பதெல்லாம் பிறர்க்கு தெரிவிக்கமுடியும் சாதாரண விஷயங்கள் அல்ல. எப்படி ஒருவருக்கு தலைவலி என்றால் 'எனக்கு தலைவலி' என்று மட்டுமே கூறமுடியும், அதை பிறர் கண்ணுக்குத் தெரிய, அவர்கள் தெளிந்து உணர்ந்து கொள்ள காட்டமுடியதோ அப்படிதான்.

ராமனாக இருக்கட்டும், கிருஷ்ணனாக இருக்கட்டும், முருகனாக இருக்கட்டும் அல்லது சிவனாக இருக்கட்டும். அவர்கள் சில சக்திகள் பெற்றிருந்ததாக இதிகாசத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய சக்திகளை அவர்கள் உண்மையிலேயே பெற்றிருந்தார்கள் என்றாலும், அவை சில சித்திகள் தானே தவிர அவர்களே கடவுள் இல்லை. பிறரிடம் அன்புடன் நடந்துகொண்டது, நல்ல விஷயங்களை மக்களுக்கு எடுத்து சொன்னது, தீய சக்திகளுக்கு எதிராக போராடியது மற்றும் அவர்கள் கொண்டிருந்த சித்திகள் போன்ற பல காரணங்களாலேயே அவர்கள் கடவுளின் அவதாரங்கள் என்று கருதப்பட்டார்கள்.
நன்கு ஆழ்ந்து சிந்தித்து பார்க்கையில், இவர்கள் யாவரும் கடவுளின் அவதாரங்கள் என்று கருதப்படுவதும் அவ்வளவு சரியில்லை என்றுதான் தோன்றுகிறது. அவர்கள் பெற்ற சித்திகளினால் மக்களுக்கு நன்மையை கொடுத்தார்கள் என்பதால், அவர்களை சில கடவுள் தன்மைகள் கொண்டவர்கள் என்று வேண்டுமானால் கூறலாம்.

கடவுள் எனும் சொல் ஒரு சாதாரண சொல் அல்ல. இந்த உலகத்தையும், நம் கண்ணுக்குத் தெரிகின்ற பிரபஞ்சத்தையும் உருவாக்கி, ஒரு ஒழுக்கநிலையில் இவைகளை சுழலவைத்து, தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்கள் போன்ற ஒப்பற்ற உயிர்களை கோடி கோடி கணக்கில் படைப்பதற்கு மூல காரணமாயிருந்துகொண்டிருக்கும் இந்த கண்ணுக்கு புலப்படாத அதிசய, அபாரமான, மனதளவில் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத பிரபஞ்சத்தின் மாபெரும் சக்தியை, ஒரு மானிட வடிவில் நினைத்துப்பார்க்க கூட இயலாது.

காற்று நம் கண்ணுக்குத் தெரிவதில்லை, ஆனால், நம் உடலில் அது மோதும்போது அதை நாம் உணர்கிறோம். ஒரு வகையில் அதைப்போலவேதான் இந்த கடவுள் சக்தியும். எப்படி நம் உடலை, நாம் அறியாமலேயே, உள்ளே இருக்கும் உடல் உறுப்புக்கள் கவனித்துக்கொண்டும் பாதுகாத்துக்கொண்டும் இருக்கிறதோ, அதைபோலவேதான் இந்த பேரறிவு, வலிமை மற்றும் பேராற்றல் நிறைந்த கடவுள் சக்தியும். மின்சாரம் இருப்பின் மின்சார விளக்குகள் எரிவது போல, இந்த கடவுள் சக்தியும் நம் அகக்கண்களுக்குத் தெரியாமல் இயங்குகிறது, அதன் மூலம் நம் உலகமும், பிரபஞ்சமும் இயக்கப்படுகிறது, நம்மையும் சேர்த்து.

நாம் வாழ்க்கைக்கு பயந்து, இறப்புக்கு பயந்து, இறந்தபின் சொர்கம் நரகம் என்ற ஒன்று இருக்கக்கூடும் என்று நினைத்து பயந்து, அதன் விளைவினால் கடவுள் எனும் ஒன்றை உருவாக்கிவிட்டோம். எப்படி, நம்மில் உள்ள மனதே நமக்கு மகிழ்ச்சியையும் அதே நேரத்தில் வருத்தத்தையும் தருகிறதோ, அதைப்போலவே நம்மால் உருவாக்கப்பட்ட இந்த கடவுளும், நமக்கு மனரீதியான வகையில் இன்பத்தையும் துன்பத்தையும் தருகின்றது.

நான் இந்த வலயத்தளத்தில் ஏற்கெனவே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டது போல், இவ்வுலகில் பிறந்த அனைவரும், ஆதியிலே அல்லது மனித இனம் உருவாகும் சூழ்நிலை உதித்த அந்த நேரத்தில், இவ்வுலகில் பிறக்காமல், உண்மையிலேயே ஒரு கர்மத்தையும் செய்திருக்கமுடியாது. ஆயினும், விவரிக்க முடியாத, விளக்கமுடியாத காரணங்களால், நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம். ஆன்மா என்பது உண்டு என்று நம்பிக்கை கொண்டு, நாம் செய்யும் வினைகளுக்கேற்ப நாம் பிறவிகள் எடுக்கிறோம் என்பதை, என்னையும் சேர்த்து, நம்மில் பலர் நம்புகின்றனர். குறிப்பாக, இந்து மதத்தினர். இந்த நம்பிக்கை எந்த அளவுக்கு உண்மை என்பதும் நமக்கு தெரியாது. உயிர் உடலைவிட்டு பிரிந்து எங்கேயோ ஒளிந்துகொண்டு, மீண்டும் அதற்கு பொருத்தமான வேறு ஓர் உடலின் கருவில் நுழைந்து வேறு புதிய பிறப்பை எடுக்கிறது என்பதை இறந்து போன ஒருவரைத்தவிர, யாரால் நமக்கு விளங்க வைக்கமுடியும்? இறந்தவர் ஒருவர் மீண்டும் பிறந்து வந்ததை எவரேனும் கண்டிருக்கிறோமா?

கதைகளிலும், சினிமாவிலும் தான் புனர்ஜன்மம் என்பதை பார்க்கமுடியும். புனர்ஜென்மம் என்பது உண்மை என்பதை, இந்த கடவுள் சக்தி, நமக்கு ஏதேனும் ஒரு வகையில் நம்பும்படியாக ஏன் உணர்த்தவில்லை என்று நினைக்கையில் மிகவும் ஆச்சரியமாக இருக்கும். இப்படிபோன்ற காரணங்களினாலேயே கடவுள் என்ற சக்தியை பூரணமாக நாம் அறியமுடிவதில்லை. இதனால்தானோ என்னவோ, நாத்திகர்கள் கடவுள் வெறும் கற்பனையே உண்மை அல்ல என்று சுலபமாக சொல்லிவிட்டு அவர்கள் வேலையை பார்க்கிறார்கள்.

நாம், மனித உடல் கொண்டு இந்த பூமியில் வாழும்வரை, மனித வாழ்க்கை ஒரு விளங்காத மர்மமான புதிர்தான், எவ்வளவு நினைத்தாலும் முயன்றாலும், கடவுள் என்பது ஒரு மாயைதான்!
என்னைப்போன்ற பழைய பஞ்சாங்கங்கள் மட்டும், அன்பே தெய்வம், இரக்கம், கருணை, மனிதாபிமானம் இவைகளே கடவுளை உணரவும் உணர்த்தவும் வழிகள் என்று சொல்லிக்கொண்டு காலத்தை ஒட்டிகொண்டிருக்கிறோம்!

இதை வாசிப்பவர்கள் எவரேனும், நான் குறிப்பிடும் கடவுளை நேரில் கண்டிருந்தால், எனக்கு கொஞ்சம் தெரியப்படுத்துவீர்களா?

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (21-Aug-23, 3:58 pm)
சேர்த்தது : Ramasubramanian
Tanglish : meendum kadavul
பார்வை : 81

மேலே