நீராழி
நீராழி.
எதில் நாம் அதிகம் இலயித்திருந்தோம்.
நம் வாழ்வின் ஆழி நாடியில் உயிர்ப்புகுத்திய நொடி எது. நம் தொடர்ப்பயணங்களை இடைநிறுத்திய இடைத்தாவளம் யாருடைய நியாபம்.
ஒரு திரை வந்து கண்களுக்கு முன்னால் ஆட்கொண்டு நகர்கிறது.
முதல் நாள் நகர்ந்ததை
பொருட்படுத்தாமல் விட்டுவிட்டோம்.
ஒவ்வொருநாளும் அத்திரை இதர
நினைவொன்றின் திரையின் நிறங்களாக மாறி மாறி திரைமாலைகள் போல் கண்கள் இமைகள் என
எழமுடியாதபடி நீர்க்கோர்த்துக்கொண்டு
நிறமாலை ஆகிறது. பார்வை
இடரிய பயணங்கள் நினைவின் ஒலியால் அலைவீசும் இரவெல்லாம்
சில உணர்வுக் கசிவுகள் உஷ்ணங்களுடன் கடந்தும் உலர்ந்தும்
விடியலில் கறைக்கட்டும்.
ஒரு பிசின்போல் கழுவி நகர்ந்திடும் கண்ணீர்ப்பாசிகள்.
நிரலற்ற பேரலைகளைவிட சிறுக்கற்களால் சிறுக சிறுக எழும்பும் சிற்றலையின் அதிர்வுகள்
அங்குல அங்குலமென
வட்டமிட்டு வட்டமிட்டு
அதன் நீட்சியை அழகுப்படுத்திக் கொண்டே மறைகின்றன.
இப்படித்தான் இவர்தான் என க்ஷண நேரமும் யூகிக்கமுடியாத
தொடர் சந்திப்புகளின் கதிர்வீச்சுகள்
மன அடுக்குகளை அதிர்வடையச் செய்கின்றன.
இதயத்தின் ஆதிநாடித் துடிப்புகள்
அன்றிலிருந்துதான்
ஒவ்வொன்றாக பிடிவிடுகின்றன.
நாம் இசைகிறோம்
நம்மை இழக்கிறோம்
கோரைப்புற்களென
விளக்கணைத்த ஒரு இரவின் கண்ணாடிகளில்
கைப்பேசியின் துளிர்வெளிப்
பரிதிகள் காணும்.
தூக்கம் தின்றுப் பார்வைக் கெடுத்தி
இன்னும் பல இரவுகள் என
இராஜ உலாக்காணும்.
ஜால சிறையில் நம் பொய்க்கண்கள்
கனவுகள் கைய்யெட்டிடும் அருகலில்.
விழிப்புகள் கேலிச்சித்திரங்கள்.
விழித்திரை முன்னால்
பிறழ்வின் ஆழியில் எண்ணமீன்கள் பிடிக்கிறதாய் மனம் தூண்டிலிடும்.
சிக்கியவைகளில் எதிர்ப்பார்த்த
சாயல் இருப்பதில்லை.
இமைக் கரை விளிம்பில்
அமைதி வெள்ளம் கரைப்புரளும்
நிமித்தம் ஒன்று நிகழ்ந்தால்
அங்கே ஒரு நினைவு மீன் நீரற்று வாழும்.
வாழ்ந்துகொண்டிருக்கும் .
சன்னமாய் மெலிதாய் ஒரு உயிரின் மீயொலி அவிழும் படுக்கையில்
யாருடையதோ
பல அசைவுகளின் நளினங்கள்.
அந்த பிலாக்கணம்
யானைகளின் கூச்சல்போல்
ஒரு நெடிய இழப்பின் ஆதிசப்தமாய்
கரணமிட்டேப்போகும்.
ஒரு மரணம்
யாருக்கும் அதிகநாட்களின் நினைவாய் இருந்துவிடப் போவதில்லை.
இருப்புகளின் நினைவுகள் கொடுக்கும் ductility யைப்போல.
ஒரு இறப்பு முழு அழுகையைக் கொடுத்து அதன் பிறகு
முழுவதுமாய் மறக்கடிக்கச் செய்துவிடுகிறது
அது எத்தனைதான் காதல் என்றாலும்.
வாழ்ந்திருக்கும் போது
வந்து வந்து போகும்
நினைவுகளால்
பலரதும் மனக் கரங்களை
செயலற்றுப் போகும்படி
நம் அன்போ செயல்களோ
சாய்த்துப் பார்த்துக் கொண்டே இருக்கும்.
அதனாலேயேதான் யோசிக்கிறேன்
அதிக அன்பினை
கொடுத்துக்கொண்டே இருந்துவிட்டு
சட்டென்று ஒருநாள்
அருகில் என்றென்றும் இல்லாமல்
மரித்துவிடுகிறேன் என.
நீர்த்தாவரங்களோ பூக்களோ
வாடைக் கொடுப்பதில்லை
நம் காட்சிகளின் இலயித்திருத்தல்கள்
அதனிடத்திலேயே
ஒளிப்பதிவாகின்றன.
ஏன் தெரியுமா
நம் எண்ணங்களை சுமந்ததால்
அவை வாசமிழக்கின்றன.
பறித்த நொடிமுதல்
வெறும் பார்வைக்கே அழகாகின்றன.
அன்றிலிருந்து
நம் எண்ணங்கள் வேறு நீர்மலரிடம்
தஞ்சம் போகின்றன
தன்னை பறிகொடுத்த மலர்கள்
பறிகொடுக்காமலேயே
இருந்திருக்கலாம் போல்
என்றே வாடி வதங்கிப் போகின்றன.
பறித்த கரங்கள்
நினைவின் பெயரெச்சமாய்க் கருதி
குப்பையில் எரிகின்றன.
மீண்டும் மீண்டுமென
நம் நினைவை அடுக்குவதற்கெனவே
அக்கடற்பூக்கள்
பிறப்பெடுக்கின்றன.
.
எத்தனை எத்தனை பூக்களை
சுமந்துவிட்ட
ஒரு நீராழியில்தான் அதன் வேர்கள்.
நினைவின் அருகில்தான் இருக்கிறோம்
எனினும்
உன் மங்கிய பார்வைக்கென மட்டும்
ஒரு நீராழிதான் நான்
எத்தனைமுறை தேடினாலும்
விரல்களால்
எத்தனைமுறை அலசினாலும்
நிறக்குழம்புகளால்
மேலும் மேலும் நிறமற்றுப்ப்போவேனே அன்றி
தெளிந்திராத நான்
உன் நினைவின் மண் குட்டுகளைச்
சுமந்த
ஒரு நீராழி
பைராகி