ஏவாள்கள் எத்தனை பேர்

"மொபைலால்" உங்கள் "மொபிலிட்டியையே"
இழந்து தவிக்கும் இளைய சமுதாயமே...!
நடமாடும் இக்கைப்பேசியினால் உங்கள்
நடமாட்டத்தையே முடக்கி நிற்கும்
அவலம் கண்டு மனம் பதறுகிறேன்...
உலகமே எங்கள் கைகளுக்குள் என்று
இறுமார்ப்போடு உலாவரும் நீங்கள்தான்
அதன் கைகளுக்குள் சிக்கிச்
சின்னாபின்னமாக்கிப் போகின்ற
பரிதாப நிலைகண்டு பரிதவிக்கிறேன்.
நிழல் உலகையே நம்ப வைத்து
அதிலேயே மூழ்கடித்து
நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய்
வாழவைத்து - சிலந்தி வலையென
அதில் சிக்கவைத்து
நிஜ உலகினையே மறக்கடிக்கச் செய்த
இந்த "நவீன மன்மதனை" என்னவென்று சொல்வது?
அவனின் மலரம்புகள் உங்கள்
நாடிநரம்புகளையெல்லாம் முடக்கிப் போட்டுவிட்டதே..!
அதன் பலன்களென்னவோ ஏராளம்தான்.
ஒத்துக்கொள்கிறேன் - ஆனால்
அவனில்லாமல் வாழ்க்கையே இல்லை
என்கிறஅளவுக்கு அதன் மேல்
மோகத்தை கூட்டி
அடிமையாய்
கூன் போட்டு
கும்பிடு போடும் நிலை கண்டு
மனம் கலங்குகிறேன்.
அதன் "மெம்மரியை" நம்பி உங்கள்
"மெம்மரியை" இழந்து நிற்கின்றீர்களே
அந்தோ பரிதாபம் ....!
ஒலி....ஒளி....
காற்று...காட்சி...
இயற்கை....எழில்....என்று
எல்லாவற்றையும் அடமானம்வைத்து
நித்திய கடனாளியாய்
வீட்டில்.....வெளியில்...
கூட்டத்தில்....எங்கும்...எதிலும்...
தன்னந்தனியாளாய்...அனாதையாய்...
நிற்கின்றீர்களே....
நீங்கள் பேசுகிறீர்கள்...
நீங்கள் சிரிக்கின்றீர்கள்....
நீங்கள் கோபப்படுகிறீர்கள்...
நீங்கள் அழுகின்றீர்கள்...
யாரோடு? - நிழல்களோடு.
நிஜத்தில்
அமைதியாகிவிடுகிறீர்கள்.
யோசித்துப் பாருங்கள்.
நேர்கொண்ட பார்வையும்
நிமிர்ந்த நன்னடையும்
எங்கே போனது?
காதில்
"இயர்போன்" வைத்து மற்ற
ஒலிகளுக்கு செவிடாகிப்போனீர்களே...!
உங்கள் பார்வை முழுவதையும் அந்த
"எல் இ டி ஸ்க்ரீனு"க்குள் புதைத்து மற்ற
ஒளிகளுக்கு குருடாகிப் போனீர்களே....!
குறுக்கு வழிகள்(ஷார்ட் கட்) பல கற்றுத்தரும்
திருட்டுப் பழிகள் பல பெற்றுத்தரும்
இந்த சாத்தானை நம்பி ஏமாந்த
ஆதாம்கள் எத்தனை பேர்?
ஏவாள்கள் எத்தனை பேர்?

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (7-Sep-23, 8:15 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 51

மேலே