வைணவரும் இல்லை சைவரும் இல்லை

ஒருவர்: சார், உங்க பெயர் என்ன?
இன்னொருவ: அய்யங்கார்
ஒருவர்: நான் உங்கள் குலத்தை கேட்கவில்லை.
இன்னொருவர்: நானும் என் பெயரைத்தான் சொன்னேன்.
ஒருவர்: ஓ, அப்படியா, சரி நீங்கள் வடகலையா தென்கலையா?
இன்னொருவர்: நான் இடைகலை
ஒருவர்: புரியவில்லையே?
இன்னொருவர்: இடைக்காலத்தில் என்னுள் ஏற்பட்ட சில மாறுதல்களால் நான் என் நெற்றியில், காலையில் நாமம் வைக்கிறேன். மாலையில் விபூதி வைத்துக்கொள்கிறேன்.
ஒருவர்: வைணவராக இருந்துகொண்டு விபூதி வைப்பது வைணவ சம்பிரதாயத்திற்கு புறம்பானது அல்லவா?
இன்னொருவர்: மக்கள் எல்லோருமே ஐம்பது வருடத்திற்கு முன்பு வாழ்ந்ததுபோல இப்போது வாழ்வதில்லை. என்னை பொறுத்தவரை ஹரியும் சிவனும் ஒன்று. எனவே நான் எனக்கு விருப்பமானவற்றை செய்துவருகிறேன். சனிக்கிழமை பெருமாள் கோவில் செல்கிறேன். திங்களன்று சிவன் கோவில் செல்கிறேன். வெள்ளிக்கிழமை அம்மன் கோவில்களுக்கு செல்கிறேன்.
ஒருவர்: உங்கள் செயல்களை உங்களது குடும்பத்தில் எதிர்க்கிறார்களா?
இன்னொருவர்: இல்லை, மாறாக என்னை பாராட்டுகிறார்கள். என் மனைவியின் இயற்பெயர் 'பத்மாவதி'. இப்போது அவள் பெயரை ' பத்மபார்வதி' என்று மாற்றிக்கொண்டுவிட்டாள். எனது மகனின் பெயர் ' திருமலை சிதம்பரம்' மகளின் பெயர் ' அலமேலு மீனாட்சி'.
ஒருவர்: அப்படி என்றால், உங்கள் உணவு பழக்கங்களும் மாறிவிட்டதா?
இன்னொருவர்: நான் சைவ உணவு உண்பவன். வள்ளலாரின் ' ஜீவகாருண்யம் மற்றும் கொல்லாமை நெறிகளை மிகவும் ஆதரிப்பவன்.
ஒருவர்: வள்ளலார் உருவவழிபாடு சமய நெறிமுறைகள் எதுவும் தேவையில்லை என்றுதானே சொல்லியிருக்கிறார்.
இன்னொருவர்: நான் எந்த ஒரு தனி நபரையும் என் குருவாகவோ அல்லது தெய்வமாகவோ ஏற்றுக்கொள்ளவில்லை. எனக்கு பிடித்த கருத்தாக இருப்பின் யார் சொல்லியிருந்தாலும் நான் அதை வரவேற்கிறேன். மற்றபடி எனது மன நலனுக்காகவும், அமைதிக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் எனக்கு சரி என்று தோன்றும் காரியங்களை செய்து வருகிறேன். நான் எதை செய்தாலும் பிறர்க்கு தீங்கு இழைக்காத காரியமாகத்தான் இருக்கும். எனவே நான் எல்லா மதங்களையும் சார்ந்தவன் எனலாம். கோவில் பூசை மட்டுமின்றி தியானம் மற்றும் மனம்சார்ந்த எனக்கு அமைதி தரும் சில முறைகளை பின்பற்றி வருவதால், நான் மதங்களைக் கடந்தவன் என்றும் கூறலாம்.
ஒருவர்: அப்படி என்றால் நீங்கள் வைணவரும் இல்லை சைவரும் இல்லை.
இன்னொருவர்: உங்களின் இந்த வார்த்தைகளை கேட்க மிகவும் ஆனந்தமாக இருக்கிறது. நான் முதன் முதலில் ஒரு மானிடன். இரண்டாவதாக நான் ஒரு இந்தியன். மூன்றாவதாக நான் ஒரு சைவம். இந்த மூன்று கருத்துக்கள் கொண்ட எவருமே எனது நெருங்கிய தோழர்கள் மற்றும் கூட்டாளிகள்.
ஒருவர்: மிக்க மகிழ்ச்சி. இப்போது நானும் உங்கள் தோழராக ஆகிவிட்டேன்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (13-Sep-23, 12:52 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 53

மேலே