நீயும் நானும்

நீயும் நானும்
இந்த கதையின் கரு வட கிழக்கு சிறு கதை ஒன்றில் இருந்து எடுத்தது –எழுதியவர் ஹோமன் போர்கோயன்- தமிழாக்கம் வெ.இன்சுவை
இரவு நடுநிசிக்கு மேல் இருக்கும். நல்ல போதையில் இருந்தேன், காரை நிறுத்தி விட்டு சத்தமில்லாமல் வீட்டுக்குள் நுழைய முயன்றேன்.
எனக்கு முன்னால் யாரோ என் வீட்டில் நுழைந்து கொண்டிருந்தார்கள்.
ஹேய் யாரது? சப்தமிட்டு கூவினேன்.
உள்ளே நுழைய சென்ற உருவம் சட்டென திரும்பியது. முன் பக்கம் எரிந்த விளக்கு வெளிச்சத்தில் தன் முகத்தை என்னை நோக்கி பார்த்தவனை கண்ட நான் அதிர்ந்தேன். காரணம் அவனும் என்னைப்போலவே இருந்தான்.
ஏய் யார் நீ எதுக்காக என் வீட்டில் நுழைகிறாய்?
அவன் கோபத்துடன் கேட்டான், என் வீட்டில் நுழைவதற்கு கேள்வி கேட்கும் நீ யார்?
உன் வீடா? முட்டாளே தண்ணி கிண்ணி அடித்து விட்டு வந்திருக்கிறாயா? அது என் வீடு.
முட்டாளே தண்ணி அடித்திருப்பது நீ தான், நீதான் வீடு மாற்றி வந்திருக்கிறாய். போய் ஒழுங்காய் வீட்டை கண்டு பிடித்து சேர், அவன் மீண்டும் தன் முதுகை திருப்பி நடக்க ஆரம்பித்தான்.
டேய்…யார் நீ ஓழுங்கு மரியாதையாய் வந்து விடு, உன் பேர் என்ன?
“ராசமாணிக்கம்” அழுத்தமாய் சொன்னான் அவன்.
பிரமையில் நின்று விட்டேன், டேய் அது என் பெயர், உன் பெயரை கேட்டேன்.
அவன் கோபமாக சொன்னான், இது என் அப்பா அம்மா வைத்த பெயர், இதற்கு நீ ஒன்றும் குறை சொல்ல வேண்டாம்.
இதற்கு மேல் எனக்கு பொறுமை இல்லை, உங்க அப்பா, அம்மா யாரு? நீ எங்கிருக்கே?
அப்பா பேர் நடராசன், அம்மா பேர் அம்மிணி, நம்பர் 44, சாத்தூர் வீதி, இதோ இங்கு இருக்கிறதே இதுதான் என் பூர்வீக வீடு, உனக்கு விளக்கம் போதும் என்று நினைக்கிறேன், இப்ப நான் என் வீட்டுக்குள் நுழையலாமா?
நிறுத்துடா, இது என்னோட வீடு, உள்ள இருக்கறது என்னோட மனைவி, குழைந்தைங்க, நான் பார்க்க பிறந்து வளர்ந்து நிக்கற குழந்தைங்க, துக்கம் தாளாமல் பொறுமினேன்.
அவன் மெளனமாய் என் எதிரே வந்து நின்றான். தயவு செய்து நான் சொல்றதை கேளுங்கள், உங்கள் மன நிலையில் ஏதோ தவறு இருக்கிறது.
அவன் இப்படி சொன்னவுடன் எனக்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை, இவன் யார்? திடீரென மூளையில் ஒரு யோசனை, இங்கு பார் அவனிடம் சட்டையை திறந்து மார்பை காட்டினேன், மார்பும் வயிறும் இணைந்த இடத்தில் ஒரு வடு சிறு வயதில் ஏற்பட்டது, இதுதான் என் அடையாளம்,
அவன் மெல்ல முணங்கி கொண்டே உங்களுக்கு என்னவோ ஆகி விட்டது, சட்டென்று தன் சட்டையை கழட்டி காட்டினான், பாருங்கள், இந்த தழும்பை, இது சிறு வயதில் ஏற்பட்டது, அதோ தெரிகிறதே அந்த மரத்தின் கிளையில் இருந்து விழுந்த போது அடிபட்ட தழும்பு, ஒன்பது வயதில் நடந்தது, எந்த ஆஸ்பிடல், யார் பார்த்தது, இதுவெல்லாம் சொல்ல வேண்டுமா?
அது மட்டுமல்ல, என் உடம்பில் இத்தனை மச்சங்கள் காட்டவேண்டுமா? அல்லது என் குழந்தைகள், இல்லாவிட்டால்….அவன் இழுத்தான்.
அவன் சொன்னது அத்தனையும் சரியாக இருந்தது. வந்த கோபத்தை கட்டுப்படுத்த என்னால் தாளமுடியவில்லை, கீழே கிடந்த தடிமனான தடி ஒன்றை எடுத்து அவனை அடிக்க ஓடினேன்..
அவன் முகத்தில் சலனமே இல்லை, அடி, என்னை அடி, ஆனால் நீ யார்?
ஏதற்காக என்னை இத்தனை கேள்விகள் கேட்டு கொண்டிருக்கிறாய் என்பதை சொல்லி விட்டு அடி, அது மட்டுமில்லை ஆளை அடிப்பதில் உனக்கு நல்ல அனுபவம் போலிருக்கிறது. இந்த மாதிரி வன்முறைகளை கையாளுவதற்கு உனக்கு சொல்லி தரவேண்டியதில்லை போலிருக்கிறது.
அவன் என்ன சொல்ல வருகிறான்? திகைத்தேன், நான் சற்று முன் என் கம்பெனியில் வேலை செய்யும் ஒருவனை இந்த இருளில் போதை தலைக்கேற தடியால் அடித்து விளாசி விட்டு வந்ததை கண்டு கொண்டானா?
நான் அடித்ததை நீ பார்த்தாயா?
ஆம் நான் உன் அருகில் இருந்து பார்த்து கொண்டுதான் இருந்தேன். அப்பொழுதே உன்னை காட்டி கொடுக்க முயற்சித்தேன், சரி பரவாயில்லை என்று விட்டு விட்டேன்.
அப்படியா..இரு உன்னை உயிரோடு விட்டால்தானே..நீ என்னை காட்டி கொடுப்பாய், இதோ இங்கேயே முடித்து விடுகிறேன்.
வெளியே வீட்டின் முன்னால் யாரோ உரக்க பேசி கொள்வதை வீட்டுக்குள் இருந்து கேட்டவர்கள் வாசல் கதவை திறந்து வெளியே வர..
அங்கு நானே என் உடலை தடியால் அடித்து கொண்டிருந்தேன்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (28-Nov-23, 11:12 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : neeyum naanum
பார்வை : 241

மேலே