வேணாம் புள்ளை
வேணாம் புள்ளை
விடிந்தும், விடியாதபோதே ஆரம்பித்து விட்டாள் சரசுவதி, ஏங்க வெள்ளென போனீங்கன்னா குமருவோட ஆபிசர அவரு வூட்டுலயே பார்த்துடலாமில்லை.
அப்பொழுதுதான் கண் விழித்த கருப்பசாமிக்கு எரிச்சலாய் இருந்தது, இம்மா நேரத்துக்கு அவக வூட்டுக்கு போனா நம்மள வைய மாட்டாங்களா? காலங்காத்தால வந்து நிக்கறியேன்னு
க்கும்..இந்நேரத்துக்கு அவகள மாதிரி ஆபிசருங்க, உடம்பை குறைக்கறேன்னு வாக்கிங் கிளம்பி போயிருப்பாங்க, நீங்க போய் அவக வூட்டு வாசல்ல நின்னுட்டு இருந்தீங்கன்னா, அவங்க வாக்கிங்க எல்லாம் முடிச்சுட்டு வரும்போது அவங்களை பார்த்து நம்ம பையனை பத்தி ஒரு வார்த்தை கவனிக்க சொல்லிட்டு வாங்கன்னா…
சரி, இதுவும் நல்ல யோசனைதான், பையன் நல்லா இருக்கணுமின்னா போய் அந்த ஆபிசரை பாத்துத்தான் ஆகணும், என்ன பண்ணறது? அவரு மனசு வைக்கணும். இருந்தாலும் லட்சக்கணக்குல கேப்பாருன்னு வேற சொல்லியிருக்கங்கலே, எவ்வளவு கேப்பாரோ? நாம இந்த வூட்டை அடமானம் வச்சாலும் நாலஞ்சு லட்சத்துக்கு மேல வராது, புறம்போக்குன்னு தெரிஞ்சா அதையும் வாங்க மாட்டாணுங்க, பார்க்கலாம்., மனதுக்குள் நினைத்து கொண்டபடியே கருப்பசாமி புழக்கடைக்கு போய் கை கால் கழுவ ஆரம்பித்தார்.
கருப்பசாமி பையனுக்காக எவ்வளவு செலவு ஆகுமோ என்று இப்படி நினைத்து கொண்டிருக்க, பையன் குமரேசன் , இரு கைகளையும் தொடைக்குள் சொருகியபடி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான். அவன் கண்டு கொண்டிருந்த கனவில், ஒரு பெண்ணுடன் ஆடி பாடிக்கொண்டிருந்தான்.
அவனும்தான் என்ன செய்ய முடியும்? கனவில் மட்டும்தான் அவனுக்கு கல்யாணம் ஆகியிருக்கிறது, இல்லையென்றால் யாரையாவது காதலித்து கொண்டிருக்கிறான். அவன் அலுவலகத்தில் அதிகாரியாயிருக்கிறான், தேடி வந்து மக்கள் காரியம் செய்து கொடுப்பதற்கு பணமாய் தந்து கொண்டிருக்கிறார்கள். இவனது வீட்டில் வருமானம் வந்து கொட்டுகிறது, இப்படி எத்தனையோ.!
விடிந்து அலுவலகத்துக்கு போனால் அங்கு வேலை செய்பவர்கள் “இங்க வா” இந்தா காசு போய் டீ வாங்கிட்டு வா, அதிகாரி பெட்டியை தூக்கிட்டு போ, இப்படி அங்கிருப்பவர்கள் ஏவலிடும் வேலைகளை செய்து கொண்டிருக்கும் ஒரு அட்டெண்டர் பாய். இவன் கண்னெதிரேயே வரும் மக்களிடம் பணத்தை வாங்கி போட்டு கொள்கிறார்கள். பிசாத்து காசு ஒரு அஞ்சு ரூபாய் இவன் யாரிடமாவது கேட்டால் அந்த மேசை குமாஸ்தா சண்டைக்கு வருகிறான். உனக்கு அஞ்சு பத்து வேணுமின்னா என் கிட்டே கேளு, என் கிட்ட ஒரு வேலைக்கு வர்றவன் கிட்ட நீ காசு வாங்காத அப்படீங்கறான்.
இருங்கடா நானும் உங்களை மாதிரி டேபிள்ள உக்காந்து வேலை செய்யறவாகனும்னு மனசுக்குள் நினைப்பான். அட.. குறைந்த பட்சம் ஒரு எஸ்.எஸ்.எல்.சி முடிச்சு இருந்தால் அலுவலகத்தில் அடுத்த கட்டமான “அலுவலக உதவியாளன்” பதவிக்காவது போகலாம். ஆனால் படிப்பு. பரீட்சை, பாஸாகறது அவனுக்கு அன்றிலிருந்து இன்று வரை அது கசப்பாகத்தானே இருக்கிறது. எட்டு வரை கவர்ன்மெண்டு புண்ணியத்தில் பாஸானவன், ஒன்பதாவதில் வாத்தியாரை சரி கட்டி, தட்டு தடுமாறி பாஸாகினான். ஆனால் எஸ்.எஸ்.எல்.சி வந்த பின்னால் ஒண்ணுமே செய்யமுடியாமல் தடுமாறி விட்டான். அப்படியும் இரண்டு பேப்பர் மயிரிழையில் பாஸாகத்தான் செய்தான், மூணு பேப்பரு போயிடுச்சு. அத்தோடு சரி, நமக்கு படிப்பே வேணாமுன்னு வீட்டுக்கு வந்தவன், இரண்டு மூணு வருசம் வெட்டியா சுத்திட்டு இருந்தவன், எப்படியோ யாரையோ பிடிச்சு கார்ப்பரேசன் ஆபிசுக்குள்ள எடுபிடியா உள்ள நுழைஞ்சு அட்டெண்டராயிட்டான். இவன் எஸ்.எஸ்.எல்.சியில பெயிலாயிருந்த மூணு பேப்பரை மீண்டும் படித்து எழுதினால் போதும், ஆனால் “முடியாது” என்னும் மன நிலைக்கு சென்று விட்டிருந்தான்.
இந்த வேலை கூட அவன் சேர்ந்த நாள் முதல் மூன்று வருடங்களாக மகிழ்ச்சியாக செய்து கொண்டுதான் இருக்கிறான், அவ்வப்பொழுது வேலை ஏவுபவர்கள் கொடுக்கும் அஞ்சு பத்து பெரிய தொகையாக தெரியும். சினிமா, கடையில் சாப்பிட போதுமாகத்தான் இருந்தது. ஆனால் அவனுக்கு திருமணம் செய்ய பெண் பார்க்க ஆரம்பித்த போதுதான் அவனது வேலையின் உண்மை நிலை அவனுக்கே தெரிந்தது, அதுவும் பார்க்க போகும் பெண் வீட்டார்கள் அவனின் குடும்பத்தாரிடம் கேட்கும் கேள்விகளால்.
பையன் அட்டெண்டருங்கறீங்க? சரி வெறும் சம்பளம் மட்டும்தான் அப்படீங்கறீங்க, எத்தனை நாளைக்கு இந்த சம்பளத்தை வச்சு குடும்பத்தை நடத்த முடியும்? நாளைக்கு ஏதாவொண்ணு ஆச்சுன்னா எங்க பொண்ணுல்ல கண்ணை கசக்கிட்டு நிக்கணும்.
நியாயமாகத்தான் பட்டது கருப்பசாமிக்கும், சரசுவதிக்கும். கருப்பசாமி அன்னாடம் காய்கறி வியாபாரம் செய்து பிழைப்பவர்கள், சம்சாரம் சரசுவதியும் அவன் கூட மாட வேலை செய்வதால் இவன் சந்தைக்கு போய் காய்கறிகளை வாங்கிவரவும், விற்கவும் தோதாக இருக்கிறது. குமரேசனை இழுத்து விடலாம் வியாபாரத்துக்கு என்றால் அவன் எனக்கு வியாபாரமே வேண்டாம் என்று கார்ப்பரேசன் அலுவலகத்தில் எடுபிடியாய் சேர்ந்து எப்படியோ “அட்டெண்டர்” என்று சொல்லிக்கொள்ளும்படி வந்து விட்டான். நிரந்தர சம்பளம்தான் என்றாலும் குறைந்த சம்பளம்.
சரி பொண்ணை பத்திரமா பாத்துக்கறதுக்கு நாங்க கிராண்டின்னும் சொல்ல முடியாது. புறம்போக்குல கட்டுன இந்த ஓட்டு வீடு, அன்னாட காய்கறி வியாபாரம், தினைக்கும் வியாபாரத்துக்கு போயித்தான் ஆகணும் அப்படீங்கற நிலைமையில எப்படி பொண்ணு வீட்டுக்காரனுக்கு நாங்க இருக்கறோமுன்னு உறுதி சொல்றது? பொண்ணு வீட்டுக்காரங்க சொல்றமாதிரி இந்த சம்பளத்துல குடும்பத்தை எப்படி நடத்த முடியும்? இதை விட, பையன் அடுத்த பதவிக்கு போனா, சம்பளத்தோட கொஞ்சம் வரும்படியும் பார்க்க முடியும். என்ன செய்வது? கருப்பசாமிக்கும், சரசுவதிக்கும் இதைபற்றியே கவலை.
குமரேசனுக்கு பார்க்க போகும் பொண்ணு வீட்டுக்காரெனெல்லாம் அவனது வேலையை பற்றிய கிண்டலும் கேலியுமான பேச்சை கேட்டு கேட்டு ஒரு வைராக்கியமே வந்திருந்தது. எப்படியாவது, யாரையாவது பிடிச்சு கை கால்ல விழுந்து, இல்ல யாருக்காவது லஞ்சம் கொடுத்தாவது “அட்டெண்டர் வேலைய விட்டு அடுத்த பதவிக்கு போயிடணும்” இதற்காக அக்கம் பக்கம் இருந்த அலுவலக ஆட்களிடம் விசாரித்த பொழுதுதான், ஒரு விசயம் கிடைச்சுது. இவர்களுக் கெல்லாம் மேலதிகாரியான பெரிய ஆபிசரை கவனித்தால் போதும், அவருக்கு அரசியல் செல்வாக்கும் இருக்குது, அவர் நினைச்சால் இவனுக்கு ஏதாவது ஏற்பாடு செய்வார் என்று சொன்னார்கள்.
வீட்டிற்கு வந்தவன் கருப்பசாமியிடமும், சரசுவதியிடமும் நீங்க எப்படியாச்சும் அவரை பார்த்து எனக்கு ஒரு வழி பண்ணி கொடுத்தே ஆகணும், எவ்வளவு கேட்டாலும் ஏற்பாடு பண்ணி அவருகிட்ட கொடுத்து எனக்கு புரோமோசனுக்கு ஒரு காட்டியே ஆகணும்னு அடம் பிடித்தான். ஒரே பையன், இந்த வியாபாரத்த விட்டு இவனாவது நிரந்தரமா மாசமானா வருமானம் வர்ற மாதிரி வேலைக்கு போக நினைச்சதே பெரிசு, அதை விட இன்னும் மேல வர்றனும்னு நினைக்கறது ரொம்ப பெரிசு, அதனால் இவனின் தொந்தரவை பெரிதாக எடுத்து கொள்ளாமல் அந்த ஆபிசரை பல முறை பார்க்க முயற்சி செய்தும் பார்க்க முடியவில்லை.
அவரும் சாதாரண உத்தியோகத்துல இருந்தவருதான், பார்க்க வேண்டியவங்களை பார்த்து, கொடுக்கவேண்டியதை கொடுத்து இன்னைக்கு கொஞ்சம் கொஞ்சமா பெரிய இடத்துக்கு வந்துட்டாரு. அவரு மனசு வச்சா இன்னொரு படி ஒருத்தனை உசத்தமுடியும்,இறக்கவும் முடியும். அவனுக்கு வேற இடத்துக்கு ட்ரான்ஸ்பர் பண்ணி நல்ல வருமானம் வர்ற இடத்துக்கு போட முடியும். ஆனா அவருக்கு கொஞ்சம், கொஞ்சமுன்னா லட்சக்கணக்குல கொடுக்க வேண்டி இருக்கும். இப்படி பல பேர் கருப்பசாமியிடம் சொல்லிவிட்டார்கள். ஆனால் அந்த ஆபிசரை பார்க்க யாரை அணுகமுடியும் என்பதை மட்டும் சொல்ல யாரும் முன் வரவில்லை.
சரி வேணாம் நாமே அவரை நேர்ல பார்த்து கை கால்ல விழுந்து பையனுக்கு ஏதோ வரும்படி வர்றமாதிரி ஒரு இடத்துக்கு புரோமசன்ல அனுப்பிவைக்கறதுக்கு ஏற்பாடு பண்ணிக்கொடுங்கன்னு கேட்டுடலாம், அதுக்கு அவரு எவ்வளவு கேட்டாலும் எதையாவது அடகு வச்சாவது கொடுத்துடலாமுன்னு, இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னால் புருசனும் பொண்டாட்டியும் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அன்னாட காய்கறி வியாபாரமாயிருப்பதால் கருப்பசாமியால் போய் பார்க்க முடியவில்லை.
இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து “அந்த ஆபிசர்” வசிக்கும் இடம் இரண்டு மூன்று பஸ் ஸ்டாப் தாண்டி இருந்தது. நாளைக்கு ஞாயித்து கிழமையாயிருப்பதால் சரசுவதி மட்டும் வியாபாரத்தை பார்த்து கொள்ளட்டும், அவரை போய் பார்க்கலாம் என்று நினைத்துதான் கருப்பசாமி படுத்தான். ஆனால் சரசுவதி விடிந்தும் விடியாதபோதே போய் பார்த்துட்டு வான்னு விரட்டுறாள், இப்படி காலங்காத்தால அவங்க மூஞ்சிக்கு நேரா போய் நின்னா ஏதாவது சொல்லுவாங்களோ என்னும் பயமும் வந்தது.
பஸ்ஸை விட்டு இறங்கியவன் அந்த பகுதிக்குள் நுழையும்போதே பிரமித்து விட்டான். ஒவ்வொரு வீடும் பங்களாவாகத்தான் இருந்தது. பெரிய பெரிய காம்பவுண்ட் கேட் போட்டு செக்யூரிட்டியுடன் இருந்தது. ஏற்கனவே அங்கு காய்கறி விற்க போகும் ஒருவன் அடையாளம் சொல்லி இருந்ததால் அந்த பங்களாவை கண்டு பிடிக்க சிரமமாயில்லை.
காம்பவுண்டு கேட்டிலேயே செக்யூரிட்டி பிடித்து கொண்டான். யாரு நீங்க? என்ன விசயமா அவரை பார்க்கணும்?
இவன் தன் மகன் விசயமா ஐயாவை பார்க்கணும்னு சொன்னான். தன் மகன் வேலை செய்யும் ஆபிசுக்கெல்லாம் இவர்தான் அதிகாரி, அதனால் தன் மகன் உத்தியோகத்தை பத்தி இவர்கிட்ட உதவி கேட்டு வந்திருக்கேன்னு சொன்னான்.
முதல்லயே வர சொல்லியிருக்காரா?
இல்லைங்களே,
அப்ப நான் போய் அவங்ககிட்ட நீங்க இந்த மாதிரி வந்திருக்கீங்க, உள்ளே அனுப்பலாமான்னு கேட்டுட்டு வந்த பின்னாடிதான் நீங்க போகணும், இங்கேயே நில்லுங்க, இவனிடம் சொல்லிவிட்டு ,வாசலின் அறையில் உட்கார்ந்திருந்த மற்றொரு செக்யூரிட்டிடம் சொல்லிவிட்டு பங்களாவை நோக்கி உள்ளே சென்றான். பங்களா காம்பவுண்டு எல்லையிலிருந்து சற்று தொலைவில் இருந்தது.
அவன் வரும் வரை என்ன செய்வது? யோசனையாய் பங்களாவின் உள்புறமாய் வேடிக்கை பார்த்தான். அப்பொழுது தள்ளுவண்டியில் ஒரு பையனை “வீல் சேரில்” உட்காரவைத்து ஒரு பெண் தள்ளிக்கொண்டு வந்தாள். அந்த பையன் முகம் நல்ல முதிர்ச்சி இருந்தாலும் எங்கோ பார்த்தபடி, தலையை மட்டும் அங்கும் இங்கும் திருப்பியபடி இருந்தான்.
அந்த பெண் காம்பவுண்ட் அருகில் வந்து அறையில் உட்கார்ந்திருந்தவனிண் அருகில் வந்தாள்.
என்ன பொன்னாத்தா இன்னைக்கு வூட்டுக்கரன் கூட எங்கியோ போகணும்னு சொல்லிகிட்டிருந்தியே?
எங்க போறது? அதுக்குள்ள இந்த சனியனை என் தலையில கட்டி விட்டுட்டு அதுக இரண்டும் வெளிய கிளம்பிகிட்டிருக்குதுங்க.
ஏன் அவங்க பொண்ணு வந்திருக்குதுல்ல,
அதுவா..! அடேங்கப்பா வூட்டுக்காரன் கூட சண்டை போட்டுட்டு இங்க வந்து உக்காந்துட்டு, வேற எவன் கூடவோ போன்ல் பேசி கொஞ்சி குலாவிட்டு..சே..நாம இன்னைக்கு குடும்பத்தோட இருக்கலாமுன்னா..இந்த உருப்படாத குடும்பத்துக்கு சேவகம் பண்ணாத்தான் நம்ம பொழப்பு ஓடோனும்னு இருக்குது, என்ன பண்ணறது.
சரி என் பொழப்புத்தான் தெரிஞ்சதாச்சே, என் வூட்டுக்காரன் என்னை தேடி வந்தான்னா பொறுமையா சொல்லு, இல்லேண்ணா என் மேல கோபிச்சுக்குவான், அதுக இரண்டும் என் புருசன் வரதுக்குள்ள கிளம்பி போயிடுச்சுங்கன்னா நானே கேட்டாண்டை வந்து அவன் கிட்ட சொல்லிக்கறேன். பேசியபடியே, சிறுவன் உட்கார்ந்திருந்த வீல் சேரை தள்ளிக்கொண்டே அங்கிருந்து உள்ளே திரும்பி செல்ல ஆரம்பித்தாள்.
அவள் பேசியதை பிரமிப்புடன் கேட்டு கொண்டிருந்த கருப்பசாமி மெல்ல திரும்பி யாரு அவங்க? அந்த பையன்..!
அவங்க வேலைக்காரி, பாவம் இன்னைக்கு ஒரு நாளைக்குத்தான் அவளுக்கு லீவு. புருசன் கூட போகோணுமுன்னு ஆசையா சொல்லிகிட்டிருந்தா, ஆனா முதலாளியும் அவர் சம்சாரமும் இன்னைக்கு வெளிய கிளம்பறதுனால அவளை இருக்க சொல்லிட்டாங்க.
அந்த குழந்தை பையன்..?
அது அவங்க பையன்தான், குழந்தையில்லை, பன்னெண்டு வயசாச்சு அந்த குழந்தைக்கு, உடம்பு வளர்ச்சியும் இல்லை, மூளை வளர்ச்சியும் இல்லை. சிரித்தான், ஊரை அடிச்சு உலையில போடறவங்களுக்கு ஆண்டவன் இப்படித்தான், அவங்களுக்கு பொண்ணு ஒண்ணு இருக்கு அது கல்யாணமாகி மூணு வருசத்துல முக்கால்வாசி நேரம் இங்க வந்து உக்காந்து அந்த கண்ராவிய நீ ஏன் கேக்கறே..?
அது சரி நீ எதுக்கு இவங்களை பார்க்க வந்திருக்கே?
அது வந்து வந்து..இழுத்தவன், தன் மகனது காரியத்துக்காக இவர்களை பார்க்க வந்திருப்பதாக சொல்லி விடலாம் என்று ஆரம்பித்தான். பிறகு என்ன நினைத்தானோ சட்டென, அவரை பாக்கணும்னு ஒரு வேலையா வந்தேன், இப்ப வேணாம், அப்புறமா முடிஞ்சா பார்த்துக்கறேன். நான் கிளம்பறேன், அவரு திரும்பி வந்தாருண்ணா நான் போயிட்டேன்னு சொல்லுங்க. விருவிருவென திரும்பி நடந்தான்.
எங்க போனாரு அந்த ஆளு? இப்ப அவங்க வெளிய கிளம்பறாங்க, சாயங்காலமா வந்து பார்க்க சொல்லுன்னு சொன்னாங்க.
மற்றொரு செக்யூரிட்டி சொன்னான், தெரியலை, கொஞ்ச நேரம் எங்கிட்ட பேசிகிட்டு நின்னான், என்ன நினைச்சானோ நான் கிளம்பறேன்னு சொல்லி போயிட்டான்.
சரசுவதியிடம் சொல்லி கொண்டிருந்தான் கருப்பசாமி, அந்த ஆபிசரு அவனை எப்படியாவது எச்.எஸ்.எல்.சிய முடிக்க சொன்னாரு, அதுக்கப்புறம் ஏற்பாடு பண்ண்டுறேன்னு சொல்லிட்டாருன்னு மட்டும் சொல்லிடு புள்ளே.
நமக்கு வேணா அந்த மாதிரி புழைப்பு, பணம், காசு, பதவின்னு சம்பாரிச்சு என்ன பிரயோசனம்? நம்ம பையனுக்கு நடக்கும்போது கண்டிப்பா எல்லாம் நடக்கும். குறுக்குல போய் குடும்பத்தை கெடுத்துக்க வேணாம். அங்கு நடப்பதை சரசுவதியிடம் சொன்னான்.